search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயம் மின்னொளியில் ஜொலிப்பதையும் படத்தில் காணலாம்.
    X
    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயம் மின்னொளியில் ஜொலிப்பதையும் படத்தில் காணலாம்.

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா தொடங்கியது

    தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். 131-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடைபெற்றது. மாலையில் நற்கருணை ஆசீருடன் கொடியை பங்குத்தந்தை ஜான்சன்ராஜ் அடிகளார் அர்ச்சித்து வைத்தார். தர்மகர்த்தா ஆனந்தராஜா கொடியை ஏற்றி வைத்தார். திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

    உடையார்பட்டி பங்குத்தந்தை ஜோமிக்ஸ் அடிகளார் மறையுரை வழங்கினார். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

    8-ம் நாள் திருவிழாவான வருகிற 3-ந் தேதி மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி மறையுரை வழங்குகிறார்.

    9-ம் நாள் விழா அன்று நள்ளிரவு 12 மணிக்கு அதிசய பனிமாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவில் தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது.
    Next Story
    ×