search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தொடரும் நபி வம்சம்
    X

    தொடரும் நபி வம்சம்

    யூசுப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றை நபி முகமது (ஸல்) அவர்களுக்கு வஹீ என்ற அருள்வாக்கு மூலம் இறைவன் அறிவித்தான்.
    இப்ராஹிம் (அலை) அவர்களைப் போலவும் தந்தை இசாக் (அலை) அவர்களைப் போலவும் யாகூப் (அலை) அவர்களும் மக்களிடம் “அல்லாஹ் உங்களுக்குத் தூய்மையான மார்க்கத்தை, வழிகாட்டுதலை, இஸ்லாமைத் தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாகவே இருங்கள் முஸ்லிம்களாகவே மரணியுங்கள்” என்று போதித்து வந்தார்.

    யாகூப் (அலை) அவர்களின் சகோதரர் ஈசு தனது தந்தை இசாக் (அலை) அவர்களின் சகோதரர் இஸ்மாயில் (அலை) அவர்களின் கடைசி ஆசையின்படி அவருடைய மகள் நஸீமாவை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். செழிப்பாகத் திரும்பிய தம்பியை மன்னித்து ஈசு மற்றும் யாகூப், கண் தெரியாத தந்தை இசாக் (அலை) அவர்களுக்குப் பணிவிடை செய்து மகிழ்கிறார்கள். இசாக் (அலை) தனது தந்தை இப்ராஹிம் (அலை) வாழ்ந்த கன்னான் பகுதியில் தனது கடைசிக் காலம் கழிய வேண்டுமென்று விரும்புகிறார்கள். தனது நூற்றி எண்பதாவது வயதில் அங்கேயே இறந்தும் விடுகிறார்கள். இசாக் (அலை) அவர்களை மகன்கள் ஈசு மற்றும் யாகூபும் இப்ராஹிம் (அலை) அவர்களை அடக்கம் செய்த இடத்திற்குப் பக்கத்திலேயே நல்லடக்கம் செய்துவிடுகிறார்கள்.

    பின்பு யாகூப் (அலை) அவர்கள் தனது பதினோறு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு மனைவிகள், இரண்டு அடிமைப் பெண்கள், வேலையாட்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் என்று எல்லாரையும் கூட்டிக் கொண்டு தற்போது ஜெருசேலம் இருக்கும் பகுதிக்கு அருகே தங்கிவிடுகிறார்கள்.

    யாகூப் அவர்களின் அன்பு மனைவி ராஹில் இரண்டாவதாக ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் குழந்தையைப் பிரசவிக்கும் போதே ராஹில் இறந்துவிடுகிறார். அந்த இரண்டாவது ஆண் குழந்தைக்குப் புன்யாமீன் என்று பெயரிடுகிறார்கள்.

    தாயை இழந்த குழந்தைகள் என்பதால் யாகூப் (அலை) மற்ற குழந்தைகளைவிட யூசுப் மற்றும் புன்யாமீன் மீது பாசமாக இருந்தார்கள். லியாவின் மற்ற பத்து மகன்களும் தங்களின் தாய் பெறாத யூசுப் மற்றும் புன்யாமீன் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள். தாயில்லாத குழந்தைகள் என்பதாலும்  தனது மற்ற மகன்களும் வெறுக்கும் குழந்தைகள் என்பதாலும்  யாகூப் (அலை), யூசுப் மற்றும் புன்யாமீன் மீது அளவு கடந்த அன்பை செலுத்தினார்கள்.

    ஒருநாள் யூசுப் (அலை) ஒரு கனவைக் கண்டு எழுந்து தன் தந்தை யாகூப் (அலை) அவர்களிடம் சென்று தான் கண்ட விசித்திர கனவை பகிர்கிறார்கள். “பதினோறு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிவதை நான் என் கனவில் கண்டேன்” என்று மகிழ்ச்சியாகத் தமது கனவைக் குறித்துச் சொல்கிறார்கள் யூசுப் (அலை). அதைக் கேட்ட யாகூப் (அலை) முகம் பிரகாசத்தில் விரிகிறது.

    இப்ராஹிம் (அலை) அவர்களின் சந்ததியில் நபிகள் தோன்றுவது தொடர்கிறது என்று உணர்ந்த யாகூப் (அலை) அவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அதே சமயம் அவர்களுடைய மற்ற மகன்களின் பொறாமை குணத்தையும் அறிவார்கள் என்பதால் உடனே அவர்கள் யூசுப்பிடம் “என் அருமை மகனே! உன் கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் சொல்லிவிடாதே. இதைப் பற்றி அவர்கள் தெரிந்து கொண்டால் உனக்கு அவர்கள் தீங்கிழைக்கக் கூடும்” என்று பதறியபடி சொல்கிறார்கள்.

    தன் தந்தை சொன்னதைக் கவனமாகக் கேட்ட யூசுப், இது பற்றித் தன் சகோதரர்களிடமோ யாரிடமோ மூச்சுவிடவில்லை. யூசுப் (அலை) அவர்களுக்குத் தன் சகோதரர்களின் பொறாமை குறித்து விளங்கியிருந்ததால் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டார்கள்.

    திருமறையில் யூசுப் (அலை) அவர்களுக்கென்று ஒரு தனி அத்தியாயமே உண்டு. யூசுப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றை நபி முகமது (ஸல்) அவர்களுக்கு வஹீ என்ற அருள்வாக்கு மூலம் இறைவன் அறிவித்தான்.

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×