iFLICKS தொடர்புக்கு: 8754422764
ரிஷபம்

இன்றைய ராசி பலன்கள்

வார பலன்கள்

நவம்பர் 28-11-2016 முதல் டிசம்பர் 04-12-2016 வரை:-

வார இறுதியில் ரி‌ஷபநாதன் சுக்கிரன் உச்ச செவ்வாயுடன் இணைவதும், ராசியும், ராசிநாதனும் குருபார்வையில் இருப்பதும் நல்ல அமைப்புகள் என்பதால் இதுவரை சில வி‌ஷயங்களில் முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் இருந்த ரி‌ஷப ராசிகாரர்கள் தைரியமாக முடிவெடுக்கும் வாரம் இது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்கின்ற மனநிலைமையில் இதுவரை இருந்தவர்கள் இப்போது தெளிவான ஒரு முடிவினை எடுப்பீர்கள்.

தொழில் வி‌ஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக நல்லவேலை கிடைக்கும். இருக்கும் சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். டிசம்பர் 1ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 3ம் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களையோ புதிய முயற்சிகளையோ செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகளை எடுப்பதும் ஒத்திவைக்கவும்.

தமிழ் மாத ஜோதிடம்

நவம்பர் 16-ம்தேதி முதல் டிசம்பர் 15-ம்தேதி வரை

தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் ரிஷபத்திற்கு இந்தமாதம் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பள உயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து உங்களுக்கு நண்பராக இப்பொழுது மாறுவர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.

வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு மிகச் சிறந்த நல்ல மாற்றங்கள் இந்த மாதம் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. சிலருக்கு வாகனமாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும்.

சனியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவது இந்த மாதம் ரிஷப ராசிக்கு மிகுந்த தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் அளிக்கப் போகிறது என்பதைக் காட்டுகிறது. ஐந்தாமிடத்தில் இருக்கும் குருவினால் இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும். வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

ஆண்டு பலன்

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) ரிஷபராசிக்காரர்களுக்கு 2016-ம் வருடம் ஆரம்பத்தில் சுமாரான பலன்களைத் தந்தாலும் வருடத்தின் பிற்பகுதியில் இருந்து மிகவும் மேன்மையான நல்ல பலன்கள், பொருளாதார மேன்மைகள், சந்தோஷங்கள் தரும் வருடமாக இருக்கும்.

புத்தாண்டு தினத்தன்று உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ரிஷபராசியின் ராஜயோகாதிபதியான சனிபகவானுடன் இணைந்து ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பது மிகவும் சிறப்பான ஒரு அமைப்பு என்பதால் இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் நல்ல வருடமாகவே அமையும். வருடத்தின் ஆரம்பத்தில் ஏழில் சனி, ஐந்தில் ராகு நான்கில் குரு என முக்கியமான கிரகநிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும் வருடம் பிறந்த உடனேயே மாற இருக்கும் ராகு-கேதுக்கள் நான்கு, பத்தாமிடங்களில் மாறுவது ஒரு நிலையில் உங்களுக்கு சாதகமான அமைப்புத்தான்.

மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் குருபகவான் இப்போதிருக்கும் சாதகமற்ற நிலையான நான்காமிடத்திலிருந்து மாறி ஐந்தாமிடத்திற்குச் செல்வது மிகப்பெரிய யோகஅமைப்பு என்பதால் குருப்பெயர்ச்சி நடக்க இருக்கும் ஒருமாதத்திற்கு முன்பே அதிர்ஷ்டங்கள் செயல்பட ஆரம்பித்து ஜூலைமாத முதலே உங்கள் வாழ்க்கையில் நல்லமாற்றங்களும், நன்மைகளும், மேன்மைகளும் உண்டாகத் தொடங்கும். கிரகநிலைமைகள் ரிஷபத்திற்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்.

இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும். எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள்.

முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம்.

எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இந்த வருடம் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர் பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கும் வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது. இளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும்.

காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும். தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல்துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு மேன்மைகளைத் தரும்.

மேற்கண்டவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தவருடம் நடக்கும். புத்திரபாக்கியம் தாமதமான தம்பதிகளுக்கு இந்தவருடம் குழந்தைப்பேறு உண்டு. சிலருக்கு இந்த வருடம் வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும்.

ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திருவிடம் போன்ற புனிதத்தலங்களுக்குப் போக முடியும். நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள். ஒரு சிறப்புப் பலனாக எந்தக்காரணம் கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது இப்போது செய்யாதீர்கள்.

அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப்பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கச் செய்வார் நான்காமிட ராகு.. நான்காமிடத்திற்க்கு ராகு மாறப்போவதால் பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும்.

தாயாரால் மனச் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்., பொதுவாக ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்ற ரிஷபராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த யோகத்தை தரும்.

துன்முகி வருடம்

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

ரிஷபராசிக்காரர்களுக்கு தற்போது பிறக்க இருக்கும் துன்முகி ஆண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகின்ற ஆண்டாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாகவே ரிஷபராசிக்காரர்களுக்கு கோட்சார ரீதியில் எந்த விதமான நல்லபலன்களும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. தற்போது தமிழ்ப் புத்தாண்டிற்கு பிறகு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மிகவும் நல்ல அமைப்பாக குரு ஐந்தாமிடத்தில் வரப்போவதால் புதிதாக பிறக்க இருக்கும் தமிழ்புத்தாண்டு ரிஷபராசிக்கு மேன்மையான பலன்களை செய்யும்.

இந்தத் தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

பெரும்பாலான ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது ரிஷபராசிக்கு மிகவும் சாதகமான நிலையில் இருப்பதால் ரிஷபத்தினர் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

கடந்த காலங்களில் பெரும்பாலான ரிஷபராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் மனக்கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நீங்கள் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலிஸ் கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை அமைப்பு நல்லபடியாக உருவாகும்.

இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் உச்சமடைவதால் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் உங்கள் வீட்டில் பேரக்குழந்தையின் மழலைச்சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.

மொத்தத்தில் ரிஷபராசிக்கு சிறப்புகள் மட்டுமே உள்ள புத்தாண்டு இது.

 

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபராசிக்கு இதுவரை ஆறாமிடத்தில் இருந்து நல்ல பலன்களை கொடுத்துக் கொண்டிருந்த சனிபகவான் தற்போது ஏழாமிடத்திற்கு மாறி கண்டக சனி எனும் அமைப்பை பெறுகிறார். பாபக்கிரகமான சனிபகவான் தான் இருக்கும் இடத்தைக் கெடுப்பார் என்ற முறையில் அவரது இந்த ஏழாமிடப் பெயர்ச்சியால் திருமணம், வாழ்க்கைத்துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்ற விஷயங்களில் உங்களுக்கு பாதிப்புகளைத் தருவார். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு அவர்தான் ராஜயோகாதிபதி என்பதால் சனிபகவான் எந்த நிலையிலும் மிகப்பெரிய கெடுதல்கள் எதையும் உங்களுக்குத் தந்துவிட மாட்டார்.

ஏழாமிடத்தில் இருக்கும் சனிபக வானால் கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும் என்றாலும் அவர் யோகாதிபதி என்பதால் உங்களுக்கு நேரடி கெடுபலன்களை தரமாட்டார். சிலர் வேலை விஷயமாக மனைவியை பிரிந்து வெளிமாநிலத்திற்கோ வெளிநாட்டிற்கோ இந்த காலக்கட்டத்தில் செல்வீர்கள்.

கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. பார்ட்னர்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும், சந்தேகங்களையும் சனி உருவாக்குவார் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அவரப்படாமல் தீர்க்கமாக ஆலோசித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நிறுவனத்தை நடத்திச் செல்வது நல்லது. கணவன்மனைவிக்குள்ளும் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை சனி விதைப்பார். எனக்கு தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார்.

மேலும் குடும்பத்தைப் பிரிப்பதற்கு சகுனி வேலை செய்வ தற்கு மூன்றாவது நபராக ஒரு வர் உருவாவார் என்பதால் எவரையும் நம்பாமல் குடும்பத்து பிரச்சினைகளை கணவர்மனைவி இருவர் மட்டும் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வதன் மூலம் சனியை ஜெயிக்கலாம். நடுத்தர வயதைத் தாண்டியவர் களுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏழாமிட சனியால் வரும். கணவனின் உடல்நிலையைப் பற்றிய கவலை மனைவிக்கும், மனைவியை பற்றிய கவலையை கணவருக்கும் சனி தருவார் என்பதால் இருவருமே முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அடுத்து ரிஷபராசிக்கு சனி பகவான் யோகாதிபதி என்பதாலும் அவர் உங்கள் ராசியை பார்ப்பதாலும் உங்களுக்கு சந்தோஷம் தரும் நிகழ்ச்சிகளையும் செய்வார். அவரவர் வயதுக்கேற்ற படிப்பு, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற அமைப்புகளில் நல்ல விஷயங்களும் சனியால் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நீண்டநாள் திருமணம் ஆகாத இளைய பருவத் தினருக்கு உடனடியாக திருமணம் நடக்கும். ஏற்கெனவே மணமாகி முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண் டாவது வாழ்க்கை நல்லபடியாக நடந்து அனைத்தும் சீரடையும்.

இளையவர்களுக்கு மனத்திற்குப் பிடித்தமான வேலை அமையும். திருமண பருவத்தில் இருப்பவர்களுக்கு வாழ்க்கைத்துணையை இப்போது சனிபகவான் அடையாளம் காட்டுவார். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள். ராசியை சனி பார்ப்பதால் ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற பயணங்கள் இப்போது உண்டு. பெண்களுக்கு நகை சேரும் காலம் இது. வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்லபலன்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருந்தவர்களுக்கு உங்களுக்கேற்ற தகுதியான வேலையில் சேர்வீர்கள்.

குடும்பத்தில் மதிப்பும், மரியாதை இருக்கும். உங்களுடைய பேச்சுக் கேட்கப்படும். ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரிகளுக்கு தொழில் மேன்மையாக நடக்கும் காலகட்டம் இது. நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். புதுக்கம்பெனி ஸ்டாக்கிஸ்ட், டீலர்ஷிப் கிடைத்து வியாபாரம் பெருகும். நல்ல வருமானம் இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள் ஆர்டர்கள் நிறையக் கிடைத்து மேன்மை அடைவீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

வருமானத்திற்கு குறைவிருக்காது. சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள். பிள்ளைகள் விஷயத் தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும். வெளிநாடு சம்பந்தப் பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும்.

மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை ஏழாமிடத்து சனிபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்ற வைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

அதே நேரத்தில் பெரிய பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் கிடைக்கும். அரசியல்வாதி களுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

 

குருப்பெயர்ச்சி பலன்கள்

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

ரிஷபராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரிஷபத்தினரின் கோட்சாரக் கிரகநிலைகள் வலுவாக இல்லாததால் பெரிய நன்மைகள் எதுவும் இல்லாமல் ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலைமையிலேயே இருந்து வந்தீர்கள்.

தற்போது ஆகஸ்ட் 11-ந்தேதி நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் இயற்கைச் சுபரான குருபகவான் நான்காமிடத்தில் இருந்து மாறி மிகவும் யோகம் தரக்கூடிய இடமான ஐந்தாமிடத்திற்கு வருவதும். ராசியைப் பார்க்க போவதும், உங்களுக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி மூலம் ரிஷபராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனைகளைச் சந்திப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து ரிஷபராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

உங்களின் உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும்.

குருபகவான் உங்களுடைய ராசியைப் பார்க்க போவதால் உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.
இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உங்களைத் தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலைநிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

தொழில் சம்மந்தமான பிரச்சனைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும். சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

ஐந்தாமிடத்திற்கு மாறும் குருபகவான் தன்னுடைய நன்மை செய்யும் பார்வைகளால் ஒன்பது, பதினொன்று ராசி ஆகியவற்றைப் பார்ப்பார் என்பதால் அவரது ஒன்பதாமிடத்து பார்வை மூலம் இதுவரை கிடைக்காத தள்ளிப் போயிருந்த பாக்கியங்கள் அனைத்தையும் தற்பொழுது உங்களுக்கு கிடைக்கச் செய்வார்.

குறிப்பாக இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். ரிஷபராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப்பெயர்ச்சியால் நிச்சயமாக ஏதேனும் ஒரு சுபகாரியம் உண்டு. அதுபோலவே குருபகவான் புத்திரகாரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். அதிலும் ஒரு விசேஷநிலையாக பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு குருபகவான் இரண்டாவது வாழ்க்கையை தற்பொழுது நல்ல விதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதானவர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது.

அடுத்து குருபகவானின் பதினொன்றாமிடப் பார்வையால் செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்கப் போவது இல்லை.

குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எனப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்சனைகளும் வரலாம்.

நான்காமிடத்தில் ராகு இருப்பதால் இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

தொழிலதிபர்கள், கலைஞர்கள், பத்திரிகை மற்றும் ஊடக துறையினர், இயக்கும் தொழில் செய்பவர்கள், தினசரி சம்பளம் பெறுபவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் முன்னேற்றம் காணுவீர்கள். குறிப்பாக காண்ட்ராக்டர்கள், நிர்வாகப்பணி சம்பந்தப்பட்டவர்கள், ஒரு துறைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், நெருப்பு சம்பந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும்.

சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.

புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

நெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில் வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பப்பிரச்சனை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் ஒரு நல்ல ஆரம்பத்தை உங்களுக்குத் துவங்கி வைக்கும் என்பது உறுதி.

பரிகாரங்கள் :

குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை கூட்டிக்கொள்ள உங்களின் ஜன்ம நட்சத்திரதினம் அல்லது ஒரு வியாழக்கிழமையன்று குருஹோரையில் குருவின் வாகனமான ஒரு யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் முன்னரே கேட்டுத் தெரிந்து கொண்டு யானைக்கு உணவிட்டு அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்

ராகு வருமிடம் நான்காகும்! நலமும், வளமும் இனி சேரும்!

சவால் விடுவதையும், அதைச் சமாளிப்பதையும் கைவந்த கலை£கக் கொண்டிருக்கும் ரிஷப ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் ‘களத்திரகாரகன்’ என்று வர்ணிக்கப்படு பவர். அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்றவராக விளங்கும் சுக்ரனின் ஆதிக்கத்தைப் பெற்றிருப்பதால் பாடுபடாமலேயே உங்களுக்கு பணம் வந்து சேரும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கையில் எல்லாவிதமான சுகங்களையும், சந்தோஷங்களையும் அனுபவிப்பவர் களாகவே விளங்குவீர்கள்.

ஏராளமான பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டு, திறமையாக சமாளிப்பீர்கள். யாராலும் செய்ய முடியாத காரியத்தை நான் செய்து காட்டுகிறேன் என்று சவால் விடுவீர்கள். எண்ணற்ற ரகசியங்களை இதயத்தில் பதித்து வைத்திருப்பீர்கள். கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் சம அளவு பெற்றவர்களாக விளங்குவீர்கள்.

இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த ராகு–கேது பெயர்ச்சி எப்படி எல்லாம் யோகங்களை கொடுக்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

நான்காமிடத்து ராகு நற்பலன்களைக் கொடுத்திடுமா?
பத்தாமிடத்து கேது பதவியினைத் தந்திடுமா?

இதுவரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்த ராகுவும், மீன ராசியில் சஞ்சரித்து வந்த கேதுவும் தனது வான்வெளிப்பயணத்தில் 8.1.2016 அன்று பின்னோக்கி வந்து உங்கள் பிரச்சினைகள் தீர வழிசெய்யப் போகிறார் கள்.

நான்காமிடத்து ராகு நன்மைகளைக் கொடுக்குமா? வீண் விரயங் களை வழங்குமா? வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்குமா? கோடி கோடியாய் சம்பாதிக்க முடியுமா? என்றெல்லாம் நினைத்திருந்த உங்களுக்கு, நாடிவந்த ராகு நற்பலன் களைக் கொடுக்க வேண்டுமானால் நாள் பார்த்துச்சென்று கோள்களை வணங்க வேண்டும்.

பொதுவாக ராகு–கேது பெயர்ச்சியை ஒட்டிய தினங்களிலோ அல்லது 60 நாட்களுக்குள்ளோ உங்களுக்கு அனுகூலம் தரும் நட்சத்திரம், நாள், பார்த்து சர்ப்ப சாந்தி வழிபாடுகளை செய்ய வேண்டும். சுய ஜாதக அடிப் படையில் ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

4–ல் ராகு சஞ்சரிக்கும் போது ஆரோக்கியப் பாதிப்புகளை உருவாக்கலாம். கோடி கோடியாய் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் விரயமாகலாம். மாடி கட்டுவதும், மனை கட்டுவதும், பூமி வாங்குவதும், பிள்ளைக்கு நகை வாங்குவதும் என்று விரயங்கள் வந்து கொண்டே இருக்கும். வந்த விரயங்களை வகைப்படுத்தி, சொந்த வீடு கட்டுவது முதல், சுயதொழில் செய்வது வரை யோசித்துச் செய்வது நல்லது. ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சிறு தடை ஏற்படலாம். உத்தியோகத்தில் சிலருக்கு மாற்றங்கள் வந்து சேரலாம்.

வியாபாரம் செய்பவர்கள், அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தைக் குறைத்து எதிரிகளை வசமாக்கிக் கொண்டால் வந்த வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பெற்றோர் வழியில் அனுசரித்துச் செல்வதே ஆதாயம் தரும். உற்றார்–உறவினர் உங்கள் நெருக்கத்தைப் புரிந்து கொண்டு பகையை மறப்பர். நீங்கள் அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தை அடைய முடியும். சொத்துக்களைக் கண்காணித்துக் கொள்வது நல்லது. பத்திரப் பதிவுகளைச் செய்ய நினைப்பவர்கள் வில்லங்கம் பார்த்துச் செய்து கொள்வது அவசியம். அர்த்தாஷ்டம ராகு என்பதால் எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்வதுநல்லது.

பத்தாமிடத்து கேது பதவியைத் தேடித்தருமா?

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது முத்தான வாழ்வு அமையவும், முன்னேற்றம் கூடவும் வழியமைத்துத் தரும். பத்தோடு பதினோறாவது ஆளாக இருந்த நீங்கள் தனி முத்திரையைப் பதிப்பவராகவும், முதல் ஆளாகவும் வர எடுத்த முயற்சி வெற்றி தரும். இதுவரை பணிகளில் ஏற்பட்ட தொய்வு நிலை அகலும். பொருளாதார வசதி பெருகும். இந்த நேரத்தில் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தாயின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு அகலும். விலங்கு வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டுத் தொழிலைத் தனித்தொழிலாக மாற்ற நினைப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தோடு பொன்னான பாதையை அமைத்துக் கொள்வீர்கள்.

அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். அடுத்தவரை நம்பிச் செய்த சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். சாமி துணையோடு சகல காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இதுபோன்ற காலங்களில் விநாயகர் கவசம் பாடி, விநாயகரை வழிபடுவது நல்லது. நாக கவசம் பாடி ராகு–கேதுக்களை வழிபட்டால் யோக வாய்ப்புகள் வந்து சேரும். மாற்றுக்கருத்துடையோர் எண்ணங்களை மாற்ற முயற்சிக்க வேண்டிய நேரமிது.

பெற்றோர்களின் உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். பிரச்சினை தரும் வாகனத்தை மாற்றிவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவதன் மூலம் பொருளாதார நிலை உயரும். ஞானகாரகன் கேதுவைப் பலப்படுத்த ஆனைமுகப் பெருமான் படத்தை வைத்து வணங்குங்கள். ஞாலம் போற்றும் வாழ்க்கை உங்களுக்கு அமையும்.

பாதசாரப்படி ராகு தரும் பலன்கள்!

ராகு, சிம்ம ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சூரியன், சுக்ரன், கேது ஆகிய மூன்றின் சாரத்திலும் சஞ்சரிக்கிறார். அதன் மூலமாக ஏற்படும் பலன்களை அறிந்து செயல்படுவது நன்மையை வழங்கும்.

சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 10.3.2016 வரை): குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கலாம். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ள மாட்டார்கள். உடன் இருப்பவர்களால் பிரச்சினைகள் வருகிறதே என்று கவலைப்படுவீர்கள். தாய்வழி ஆதரவு ஓர்அளவே கிடைக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் இதுவரை நல்ல விலைக்கு கேட்டும் கொடுக்க மறுத்தவர்கள் இப்பொழுது குறைந்த விலைக்கு விற்க முன்வருவர். அலைச்சல் அதிகரிக்கும். சுய ஜாதகம் வலிமையாக இருந்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்களால் மருத்துவச் செலவு ஏற்படலாம். துர்க்கை வழிபாடு துயரங்களைத் துள்ளி ஓடச்செய்யும்.

ராகு பகவான் சுக்ர சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (11.3.2016 முதல் 16.11.2016 வரை): தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச்செய்வோமா, அதைச்செய்வோமா என்று சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். பழைய தொழிலை முடக்கிவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு இடமாற்றம், இலாகா மாற்றங்களைப் பெற்றுக் கொள்வர். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷச் செய்திகள் வந்து சேரும்.

ராகு பகவான் கேது சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (17.11.2016 முதல் 26.7.2017 வரை): பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. விரயங்கள் கூடும். குடும்பச்சுமை அதிகரிக்கும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு காரியங்கள் பலவும் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். முயற்சிகளில் வெற்றியும், முக்கியப் புள்ளிகளால் நன்மையும் கிடைக்கும் நேரமிது. வடக்கு நோக் கிய விநாயகப் பெருமானை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்!

கேது, கும்ப ராசிக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது குரு, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று சாரங்களிலும் சஞ்சரிக்கின்றார். அப்பொழுது எப்படிப்பட்ட பலன்களை நமக்கு வழங்குவார் என்பதைப் பார்ப்போம்.

குரு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (8.1.2016 முதல் 13.7.2016 வரை): கொடுக்கல்–வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். கடல் தாண்டும் முயற்சியும் ஒருசிலருக்கு கைகூடுவது போல் தோன்றும். அரசியல், பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ராகு சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது (14.7.2016 முதல் 22.3.2017 வரை): வாய்ப்புகள் வாயில் தேடிவரும். கேட்காமலேயே சிலருக்கு உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சொந்தங்களால் வந்த பிரச்சினைகள் அகலும். பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். அசையும் சொத்துக்களையும், அசையா சொத்துக்களையும் வாங்க உகந்த நேரமிது. வாங்கல், கொடுக்கல்களில் சரளமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் செய்ய முன்வருவர். ஜாதக அடிப்படையில் என்ன தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.

கேது பகவான் செவ்வாய் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது (23.3.2017 முதல் 26.7.2017 வரை): விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துக்கொள்வது நல்லது. உடன்பிறப்புகளுக்கான திருமண முயற்சி கைகூடும். வீட்டில் மங்கல ஓசை கேட்பதற்கான வழி பிறக்கும். பத்திரப்பதிவில் இருந்த தடைகள் அகலும். சில மாதங்களுக்கு முன்பு செய்த ஏற்பாடுகள் பாதியிலேயே நின்று போயிருக்கலாம். அது இப்போது துரிதமாக நடைபெறும். பொதுவாக ராகு–கேதுக் களின் பாதசார பலமறிந்து வழிபாடுகளை மேற்கொண்டால் சோகங்களிலிருந்து விடுபட முடியும். அந்த அடிப்படையில் இக்காலத்தில் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும்.

வாழ்க்கை வசந்தமாக வழிபாடு!

நான்காமிடத்து ராகுவால் நலங்களும், வளங்களும் வந்து சேரவும், பத்தாமிடத்து கேதுவால் பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கவும், அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று, திங்கள் தோறும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிரதோஷம் அன்று விரதமிருந்து நந்தியெம் பெருமானை வழிபட்டு வந்தால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும்.