search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரசியலில் ரஜினி, கமல் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: விவேக் வேண்டுகோள்
    X

    அரசியலில் ரஜினி, கமல் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: விவேக் வேண்டுகோள்

    அரசியலுக்கு வருவது எளிது, எனினும் ரஜினி, கமல் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
    பசுமை சைதை திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை தொகுதியில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் கடந்த ஜூலை மாதம் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் பிறந்த நாளில் தொடர்பு கொண்டால் அவர் தனது பெயருடன் அவர்கள் வீட்டருகே மரம் நட்டு தடுப்பு வேலியும் அமைத்து கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் 2000-வது மரம் நடும் நிகழ்ச்சி பன்னீர் செல்வம் நகரில் நேற்றுநடந்தது.

    100 மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெயரில் 100 அரச மரங்களை நடிகர் விவேக் நட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் வலிமைதான் மிகப்பெரிய வலிமை. இயற்கையை பாதுகாப்பதில் மக்கள் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும்.



    அரசை மட்டும் எதிர் பாராமல் எல்லோரும் தங்களால் முடிந்த போது சேவையை செய்ய வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்து வதில் அரசு இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    அரசியல் என்பது ஒரு சேவை. அந்த உணர்வோடுதான் முன்பு தலைவர்கள் அரசியலுக்கு வந்தார்கள். எனக்கு அரசியல் தெரியாது. அரசியலில் இல்லாமலும் சேவை செய்ய முடியும். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். அரசியலில் இல்லாததால் எல்லா கட்சியினரும் என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள்.



    நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது போன்ற அறிகுறியுடன் பேசி வருகிறார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வருவது எளிது. மக்கள் மத்தியில் நிலைத்து நிற்க வேண்டும். அதற்கு தேவை அர்ப்பணிப்பு உணர்வு.

    ரஜினி, கமலும் அரசியலுக்கு வந்தால் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் வேண்டுகோளாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறும்போது சைதாப்பேட்டையில் 3.25 லட்சம் மக்கள் உள்ளனர். 2 லட்சம் பேராவது தங்கள் பிறந்த நாளில் மரம் நடவேண்டும். அவர் எந்த சிரமமும் பட வேண்டிய தில்லை. அழைத்தால் போதும். நாங்களே வீடு தேடி சென்று நடுவோம் என்றார்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ், வக்கீல் ஸ்ரீதர், அன்பரசன், கோட்டூர் சண்முகம், நேருநகர் பாட்சா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×