search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சங்க கட்டிடம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும்: விஷால் பேட்டி
    X

    நடிகர் சங்க கட்டிடம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும்: விஷால் பேட்டி

    நடிகர் சங்க கட்டிடம் ஒரு வருடத்தில் கட்டி முடிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
    நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் அரசு துறைகளிடம் முறையான அனுமதி பெற்றே கட்டிடத்தை கட்ட முன்வந்தோம். எந்த தவறும் நடக்கவில்லை. இதனை கோர்ட்டில் சுட்டிக்காட்டினோம்.

    தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்ட விதிக்கப்பட்ட தடையை ஐகோர்ட்டு நீக்கியிருக்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உடனடியாக கட்டுமான வேலைகளை தொடங்க இருக்கிறோம். அடுத்த வருடம் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் கட்டிடத்தை கட்டி முடித்துவிடுவோம். எனவே ஒரு வருடத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்.

    இந்த கட்டிடத்துக்குள் ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம், கல்யாண மண்டபம், 300 பேர் அமரக்கூடிய ‘மினி’ திருமண மண்டபம், நூலகம், நடிப்பு பயிற்சி மையம் போன்றவை அமைக்கப்படும். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வருமானம் வரக்கூடிய வழிவகைகளும் செய்யப்படும். நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்குள் முதல் நிகழ்ச்சியாக எனது திருமணம் நடைபெறும்.



    கேளிக்கை வரி பிரச்சினையில் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. 5 சதவீதம் கூட வரி செலுத்தமுடியாது என்று தெரிவித்து இருக்கிறோம். எங்களுக்கு சாதகமான முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதம் விதிக்கப்படுகிறது. ரூ.120 வரையிலான சினிமா டிக்கெட்டுகளுக்கு இதே வரியை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு மனு கொடுத்துள்ளோம்.

    நடிகர் கமல்ஹாசன் பிரச்சினையில் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், நிச்சயம் அவருக்கு துணையாக நான் இருப்பேன். திருட்டு வி.சி.டி. மற்றும் திருட்டுத்தனமாக புதிய படங்களை வெளியிடும் இணையதளங்களை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது நடிகர்கள் பொன்வண்ணன், ராஜேஷ், சரவணன், நடிகைகள் கோவை சரளா, சோனியா, குட்டி பத்மினி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×