search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை காவ்யா மாதவனிடம் 6 மணிநேரம் விசாரணை: இன்று கைது ஆவார் என தகவல்
    X

    நடிகை காவ்யா மாதவனிடம் 6 மணிநேரம் விசாரணை: இன்று கைது ஆவார் என தகவல்

    நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவனிடம் ஏ.டி.ஜி.பி. சந்தியா 6 மணிநேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து இன்று நடைபெறும் விசாரணைக்கு பின்னர் காவ்யாமாதவன் கைதாவார் என்று கூறப்படுகிறது.
    கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை நடந்தது.

    இது தொடர்பாக நடிகை அளித்த புகாரின்பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பல்சர் சுனில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நடிகர் திலீப்புக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறினார்.

    அதன்பேரில், போலீசார் திலீப்பிடம் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த 10-ந்தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கும், பல்சர் சுனிலுக்குமான தொடர்பு, ஓடும் காரில் நடிகையை பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய செல்போன் குறித்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில், ஆபாச காட்சிகள் அடங்கிய செல்போனை பல்சர் சுனில் காக்கநாட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கொடுத்தது தெரிய வந்தது. அந்த ஜவுளிக்கடை திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவனுக்கு சொந்தமானது ஆகும். எனவே இந்த சம்பவத்தில் காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.

    இதற்காக அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் அவரும், அவரது தாயாரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் காவ்யாமாதவன் வக்கீல் ஒருவர் மூலம் போலீசார் முன்பு ஆஜரானார்.

    அப்போது காவ்யாமாதவனிடம் நடிகை கடத்தல் சம்பவம் பற்றி மேலோட்டமாக சில கேள்விகளை மட்டும் போலீசார் கேட்டனர். பின்னர் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். நேற்று திடீரென ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டிற்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா சென்றார்.

    அங்கு காவ்யாமாதவன் மற்றும் உறவினர்கள் இருந்தனர். அவர்களிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா பின்னர் நடிகை காவ்யா மாதவனை மட்டும் தனியாக அழைத்துச் சென்று சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    அப்போது ஏ.டி.ஜி.பி. சந்தியா பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை நடிகை காவ்யாமாதவனிடம் கேட்டு அதற்கான பதில்களை பதிவு செய்து கொண்டார். இந்த விசாரணை முடிந்ததும் அவர், உடனடியாக ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்புக்கு சென்றார்.

    அங்கு உயர் அதிகாரிகளிடம் காவ்யாமாதவனிடம் நடந்த விசாரணையும், அதில் காவ்யாமாதவன் அளித்த பதில்கள் குறித்தும் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸ் உயர் அதிகாரிகள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த ஆலோசனையை தொடர்ந்து இன்றும் காவ்யா மாதவனிடம் ஏ.டி.ஜி.பி. சந்தியா விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    விசாரணைக்கு பின்னர் காவ்யாமாதவன் கைதாவார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான நிர்பயா வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணை போலவே இந்த வழக்கிலும் குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படியே போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் இந்த வழக்கின் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும், பாதிப்புக்குள்ளான நடிகையின் வாக்குமூலம் குறித்த விசாரணையும் ரகசியமாக நடக்க வேண்டும்.

    டெல்லியில் நிர்பயா வழக்கு நடந்தது போல இதையும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×