search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: சார்மி - முமைத்கானுக்கு மீண்டும் நோட்டீஸ்
    X

    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: சார்மி - முமைத்கானுக்கு மீண்டும் நோட்டீஸ்

    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ள விவகாரத்தில் நடிகைகள் சார்மி, முமைத்கான் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
    தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு உள்ளிட்ட 12 பேர் பெயர்களை வெளியிட்டனர்.

    இதைத்தொடர்ந்து 12 பேருக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினார்கள். இயக்குனர் பூரி ஜெகன்னாத் போலீசார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடந்தது.

    நடிகை சார்மி வெளியூரில் படப்பிடிப்பில் இருப்பதால் விசாரணைக்கு வர இயலாது என்று பதில் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் முமைத்கானும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று கூறியிருக்கிறார்.

    சார்மிக்கும், முமைத்கானுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி சந்திரவதனன் தெரிவித்து உள்ளார்.

    சார்மி நடித்த ஜோதி லட்சுமி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கெல்வின் கலந்துகொண்டு அவர் அருகில் உட்கார்ந்து இருப்பதுபோன்ற படங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    நடிகை சார்மியின் தந்தை தீப்சிங் உப்பல் கூறும்போது, “என் மகள் கடின உழைப்பால் சினிமாவில் முன்னுக்கு வந்து இருக்கிறார். போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்தால் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்க முடியாது. போதை பொருள் கும்பலுடன் தொடர்புபடுத்துவதால் அவர் நொறுங்கிப் போய் இருக்கிறார்” என்றார்.
    Next Story
    ×