search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன்: சவுந்தர்யா ரஜினிகாந்த்
    X

    நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன்: சவுந்தர்யா ரஜினிகாந்த்

    நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன் என்று ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
    ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளேன். இதில் தனுஷ், அமலாபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் கஜோல் வருகிறார். அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார்.

    அதிரடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகி உள்ளது. இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. எனது இயக்கத்தில் இது முக்கிய படமாக இருக்கும். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு உள்ளது.

    அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். புதிதாக சினிமாவுக்கு வரும் பெண் இயக்குனர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும்.

    கமல்ஹாசன் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன்.

    கமல்ஹாசன் சமீபத்தில் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது. கமல்ஹாசன் உறுதியானவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக உணர்ந்தே அவர் பேசுவார்.

    எனது தந்தையும் அவரும் நீண்டகால நண்பர்களாக இருக்கிறார்கள். என் தந்தை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து கருத்துச்சொல்ல விரும்பவில்லை.

    இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
    Next Story
    ×