search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி
    X

    ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி அரசியலில் குதிப்பது உறுதி

    தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப, அவரது ரசிகர்களை சந்தித்த பின் ரஜினி அரசியலில் குதிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    ஜெயலலிதாவின் மரணம்... கருணாநிதியின் ஓய்வு. இந்த இரண்டும் தமிழக அரசியல் களத்துக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ரஜினி கொடுத்த ஒரே ஒரு வாய்ஸ் அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. அன்று ஜெயலலிதா அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார். ‘‘மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் அந்த ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது’’ என்று கூறிய அவரது ஆவேச வார்த்தைகள் பட்டி தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இதன் காரணமாகவே அந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது என்று இப்போதும் பேசப்பட்டு வருகிறது.



    அரசியலில் இல்லாமலேயே ரஜினி நிகழ்த்திக் காட்டிய இமாலய வெற்றியாகவே இது பார்க்கப்பட்டது. அன்று காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது ரஜினியும் அவருடன் சேர்ந்து அரசியல் பயணத்தை தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு 20 ஆண்டுகளை கடந்தும் அப்படியே நீடித்துக் கொண்டே இருக்கிறது.

    ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் மக்கள் செல்வாக்குமே இதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.

    இப்படி நீ...ண்....ட.... காலமாகவே ரஜினியின் அரசியல் பிரவேசம் கண்ணாமூச்சி ஆட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்று வருவார்.... நாளை வருவார்.... என ரஜினியின் அரசியல் பயணம் பற்றிய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் ரஜினியா? அரசியலுக்கு வர்றதாவது? என்கிற பேச்சுக்கள் எழத்தொடங்கி விட்டன. தனது படங்களின் விளம்பரத்துக்காகவே ரஜினி அரசியல் எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.



    அதே நேரத்தில் ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கு பிறகு ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றும் பேசப்பட்டது. அது போன்ற ஒரு சூழல் இப்போது வந்து விட்டதாகவே ரஜினி உணர்ந்துள்ளார்.

    இதன் காரணமாகவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ரஜினி தனது அரசியல் பயணத்துக்கு அச்சாரம் போட்டுள்ளார். இதன்படியே ரசிகர்களுடனான அவரது சந்திப்பு என்கிற பேச்சும் பலமாகவே எழுந்துள்ளது.

    கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வரும் ரஜினி முதல் கட்ட சந்திப்பை முடித்துள்ளார். 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி.... ‘‘ரசிகர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று ‘பல்ஸ்’ பார்த்தார். அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் அனைவருமே ‘‘தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். தமிழகத்தை ஆள்வார்’’ என்றே நம்பிக்கை தெரிவித்தனர். அந்த நாளுக்காகவே காத்திருக்கிறோம் என்றும் ‘மகிழ்ச்சி’ தெரிவித்தனர்.



    ரசிகர்களுடான சந்திப்பின் போது ‘‘ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால், அதனை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளமாட்டேன் என்று கூறிய ரஜினி, போர் வரும் போது (தேர்தல் நேரத்தில்) பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள் என்றும் ரசிகர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதன் பின்னர் அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி அடக்கியே வாசித்தார். அது தொடர்பான கேள்விகளை கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில் ‘காலா’ படப்பிடிப்புக்காக மும்பை சென்ற ரஜினி, விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் நண்பர்களுடன் அரசியலுக்கு வருவது குறித்து பேசி வருகிறேன். என்னை சந்தித்தவர்கள் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறுவதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளார். வருகிற அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ரஜினி அரசியல் பிரவேசத்தை ஜெட் வேகத்தில் தொடங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×