search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினியை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய மதுரை ரசிகர்கள்
    X

    ரஜினியை அரசியலுக்கு வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய மதுரை ரசிகர்கள்

    ரஜினியை அரசியலுக்கு வரவேற்று மதுரை ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். அப்போது அவர் “நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

    அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிப்பவர்களை அருகில் வைத்துக்கொள்ள மாட்டேன், ஆண்டவன் கட்டளையிட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் வரை காத்திருங்கள்” என்றார். மேலும் மு.க.ஸ்டாலின், சீமான், திருமாவளவன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தார்.

    ரஜினியின் இந்த பேச்சு அவர் அரசியலுக்கு விரைவில் வருவார் என்று பரவலாக பேசப்பட்டது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அரசியல் மந்தமாக உள்ள சூழ்நிலையில் ரஜினியின் இந்த பேச்சு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வந்து விட்டதாகவே போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். ரஜினியின் அரசியல் பேச்சுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்று சென்னையில் அவ ரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக ரஜினி ரசிகர்களும் போராட்டம் நடத்தினர்.


    இந்த நிலையில் மதுரை மாநகர் முழுவதும் ரஜினி ரசிகர்கள் “போருக்கு தயார்” என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். அதில் “தர்மத்தின் தலைவா போருக்கு தயார்! எப்போதெல்லாம் ‘தர்மம்’ அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன்” என்று அதில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளை பொது மக்களும், வாகன ஓட்டிகளும் நின்று பார்த்துச் செல்கின்றனர். இதுகுறித்து மதுரை ரஜினி ரசிகர்கள் கூறுகையில், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காரணத்தால் தமிழக அரசியல் ‘களை’ இழந்து காணப்படுகிறது. நாள்தோறும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அரசியல் வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும்.

    போருக்கு (அரசியலுக்கு) தயாராக இருங்கள். போர் வரும்போது அழைக்கிறேன் என்று கூறி உள்ளது எங்களுக்கு உற்சாகத்தை ஏற் படுத்தி உள்ளது என்றனர்.

    Next Story
    ×