search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மேலூர் தம்பதியின் டி.என்.ஏ. பரிசோதனை மனுவுக்கு தனுஷ் எதிர்ப்பு
    X

    மேலூர் தம்பதியின் டி.என்.ஏ. பரிசோதனை மனுவுக்கு தனுஷ் எதிர்ப்பு

    மேலூர் தம்பதியின் டி.என்.ஏ. பரிசோதனை மனுவுக்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். எங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திடீர் என்று மாயம் ஆகிவிட்டார். தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். எங்களுக்கு வயதாகிவிட்டது. எனவே, எங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ. 65 ஆயிரம் வழங்க தனுசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்த வழக்கு மேலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கதிரேசன்-மீனாட்சி தாக்கல் செய்துள்ள மனு பொய்யானது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    விவாதத்தின் போது மேலூர் தம்பதியர் சார்பில் ஆஜர் ஆன வக்கீல், கதிரேசன், மீனாட்சி தம்பதியர் டி.என்.ஏ பரிசோதனைக்கு தயாராக உள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.


    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் தரப்பு வக்கீல், ‘மேலூர் தம்பதியர் தாக்கல் செய்துள்ள மனுவில் எந்தவித உண்மையும் இல்லை. எனவே டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பரிசோதனை செய்வது தனுசின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று வாதாடினார்.

    தனுஷ் யாருடைய மகன் என்பதை அறிய அவரது பள்ளி சான்றிதழ், அங்க அடையாளங்கள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது தவறானது என்று தம்பதியர் தரப்பு வக்கீல் வாதாடினார் டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயாராக இருக்கிறோம் என்றும் கூறினார். இதற்கு தனுஷ் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். தம்பதியர் தரப்பில் கூறப்படும் ஆதாரங்கள் சரியானவை அல்ல என்றும் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காணாமல் போன கலைச்செல்வன் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பிறந்த தேதி மாறுபடுகிறது. அங்க அடையாளங்களும் மாறுபடுகின்றன என்று கூறினார்.


    அப்போது வாதம் செய்த தம்பதியர் தரப்பு வக்கீல் டைட்டஸ், ‘அங்க அடையாளங்களை முற்றிலும் அழிக்க முடியும் என்று தடயவியல் தகவல்கள் கூறுகின்றன என்றார். இதற்கு தனுஷ் தரப்பு வக்கீல் விளக்கம் அளித்தார். 3 மணிநேரம் நடந்த விசாரனையின் போது தனுஷ் தரப்பில் வக்கீல் ராமகிருஷ்ணன் ஆஜர் ஆனார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

    அப்போது ‘டி.என்.ஏ. பரிசோதனை குறித்து குறிப்பிட்ட நீதிபதி கோர்ட்டு தான் அதை முடிவு செய்யும். இதற்கு மனு தாக்கல் செய்தவர்களின் பதிலும் பெறப்படவேண்டும் என்று தெரிவித்தார்..

    இதுகுறித்து மேலூர் தம்பதி கதிரேசன்-மீனாட்சி ஆகியோர் கூறியதாவது:-

    எங்களுக்கு வயதாகி விட்டது. பணம், விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு இந்த வழக்கை தொடரவில்லை. எங்கள் மகன் கலைச்செல்வன் தான் நடிகர் தனுஷ். அதனை நிரூபிக்கத்தான் போராடி வருகிறோம்.

    எங்களிடம் அதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. ஆனால் எதிர் தரப்பினர் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளனர். எனவே எங்கள் மகன் தனுஷ் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு கூட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களுக்கு எப்படியும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் மகன் தனுஷ் என்பதை நிரூபிக்கும் வரை சட்ட போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×