search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்
    X

    ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்

    ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றத போல, ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று டைரக்டர் கவுதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையை கீழே பார்ப்போம்.
    தமிழீழ படுகொலைக்காக நடத்தப்பட்ட ஐ.நா.வின் 34வது மனித உரிமை ஆணைய கூட்டத்தொடரின் இறுதி அமர்வில், அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலநீட்டிப்பு தரும் தீர்மானம் கொண்டு  வரப்பட்டடுள்ளது.

    இலங்கை அரசு தாங்கள் போர்குற்ற உள்நாட்டு விசாரணை நடத்துவோம் என்று கூறுவது வெறும் கண்துடைப்பு செயலாகும்.  “உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு” பாலியல் வதைமுகாம்களில் தமிழ் பெண்களை அடைத்து வைத்து இலங்கை  ராணுவம் சித்ரவதை செய்த உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.



    கிட்டத்தட்ட 55 முகாம்கள் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 47 ராஜபக்சே காலத்திலும், 8 சிரிசேன காலத்திலும்  நடத்தப்பட்டுள்ளது என்றும் இலங்கை ராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த அமைப்பின்  தலைமை அதிகாரியான “ யாஸ்மின் சூகா” கூறியுள்ளார். இது அனைத்தையும் எடுத்துரைத்தும் மேலும் இரண்டு ஆண்டு  காலநீட்டிப்பு தந்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    தமிழர்களாகிய நாங்கள் “மூன்றரை லட்சம்“ உறவுகளை இழந்து நிற்கிறோம், மேலும் இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு தந்துள்ளது  மன வேதனை அளிக்கும் செய்தி.



    இளைஞர்களும் மாணவர்களும் ஒரு முடிவு எடுத்து நீதியை தாங்களாகவே வென்றெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் . இது  நடக்காமல் இருக்க , உலக நாடுகள் இணைந்து தங்கள் கடமையை செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியிடம் நாங்கள் பலமுறை நேரில் சென்று சட்டசபையில் இந்தியாவிற்கு அழுத்தம் தருகின்ற ஒரு தீர்மானம் நிறைவேற்ற  வலியுறுத்தினோம்.

    ஆனால் அவர் எந்த ஒரு தீர்மானத்தையும் இதுவரை நிறைவேற்றாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈழம் தொடர்பாக வரலாற்று  சிறப்புமிக்க தீர்மானங்களை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி தமிழர்களுக்கு உறுதுணையாக  இருந்தார்.

    அவரை பின்பற்றுபவர்கள் மவுனம் காத்தது, ஜெயலலிதா அம்மையாருக்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். உலகமெங்கும்  வாழும் தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் எப்படி எங்கள் கலாச்சார ஜல்லிக்கட்டை வென்றெடுக்க ஒரு அறவழி போராட்டம்  நடத்தி வென்றார்களோ, அதுபோல் எம் தமிழ் ஈழ உறவுகளுக்கு நீதியை பெற்று தர ஒரு அறவழி போராட்டத்தை முன் எடுக்க  வேண்டும் என்று உரிமையோடு இந்த ஐ.நா மன்றத்தில் இருந்து கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×