search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்
    X

    ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

    ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
    ரஜினிகாந்துக்கு கடந்த 2011-ல் ராணா படப்பிடிப்பில் இருந்தபோது உடல்நல குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு கோச்சடையான் அனிமேஷன் படத்திலும், லிங்கா படத்திலும் நடித்தார். ஆஸ்பத்திரிகளில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டார்.

    பின்னர் கபாலி படத்தில் நடித்து முடித்தார். தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருந்த போது குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 2 மாதங்கள் ஓய்வு எடுத்தார். அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். வெர்ஜினியாவில் உள்ள சச்சிதானந்த லோட்டஸ் கோவிலுக்கு சென்றும் சாமி கும்பிட்டார்.

    கடந்த ஜூலை மாதம் சென்னை திரும்பிய அவர் 2.0 படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வந்தார். இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் ‘ரெமோ’ படத்தை பார்த்து விட்டு சிவகார்த்திகேயனுக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். ‘ரெமோ படம் மூலம் நீங்கள் முழுமையான நடிகராகி விட்டீர்கள். நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு போய் இருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார்.

    படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவுக்கும் போன் செய்து, ‘குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பிடித்த படமாக ரெமோவை எடுத்து இருக்கிறீர்கள்’ என்று வாழ்த்தினார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றியும் விசாரித்தார். அடுத்து சென்னை பூந்தமல்லி அருகே நடந்து வரும் ‘2.0’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி வந்தார்.

    இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் அவர் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 10 நாட்கள் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து விட்டு சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×