search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் உயிர் தப்பினார்கள்
    X

    இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் உயிர் தப்பினார்கள்

    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.
    இசை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு காரில் திரும்பும்போது, இளையராஜாவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் பயங்கர விபத்தில் சிக்கி, அதிசய மாக உயிர் தப்பினார்கள்.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் இசைக் குழுவில் இளையராஜா பணியாற்றிய அதே கால கட்டத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பின்னணி பாடகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார்.

    இளையராஜாவும், பாலசுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அந்த "மலரும் நினைவுகள்'' பற்றி இளையராஜா கூறியதாவது:-

    நாராயணன் என்னும் டைரக்டர் இயக்கிய "ஸ்ரீதேவி'' என்ற படத்துக்கு ஜி.கே.வி. இசை அமைத்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எனக்கு நல்ல நண்பன் ஆகியிருந்த நேரம் அது. அவனுக்கு எப்படியாவது ஒரு பாடல் வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது, எஸ்.பி.பி.க்குத் தெரியாது.

    ஸ்ரீதேவி படத்தில் ஒரு "டூயட்'' பாடல் வந்தது. பழைய கதாநாயகர்களுக்கு என்று இல்லாமல், ஒரு இளம் ஜோடி பாடுவது போல்

    அமைந்தது.நாராயண் ரெட்டி இதை எழுதினார். "ராசானு ப்ரேம லேக்க லென்னு'' (எத்தனை எத்தனை காதல் கடிதம் எழுதினேன்) என்று தொடங்கியது அந்தப்பாடல்.

    ட்ïன் கம்போசிங் முடிந்தது. யாரைப் பாட வைக்கலாம் என்று டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான் ஜி.கே.வி.யிடம், "அண்ணே! இந்த பாட்டை நம்ம பாலுவுக்கு கொடுக்கலாம்ண்ணே!'' என்றேன்.

    "ஏன்டா! அவன் நன்றாகப் பாடுவானா? இந்த பாட்டுக்கு சரியாக இருக்குமா!'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அண்ணே! இது இளம் ஜோடி பாடும் பாட்டு! இதற்கு ஏன் பழைய பாடகர்? பாலு, தெலுங்கில் கோதண்டபாணியிடம் பாடியிருக்கிறான். தமிழில் எம்.ஜி.ஆருக்குப் பாடிய `ஆயிரம் நிலவே வா' பாடல் பெரிய ஹிட்!''

    "எம்.ஜி.ஆருக்கு யார் பாடினாலும் ஹிட்டாகும்!''

    "அப்போ சீர்காழி போன்றவர்களுக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை? பாலு புதுசு. இந்த பாடலுக்கு ரொம்பப் பொருத்தமாக இருப்பான். `எத்தனை காதல் கடிதம் எழுதினேன்' என்று, வயதாகி விட்ட கண்டசாலவோ, பி.பி.சீனிவாசோ பாடினால் பொருத்தமாக இருக்குமா?'' என்றேன்.

    "சரி. அவனை ரிகர்சலுக்கு வரச் சொல்!'' என்றார், ஜி.கே.வி.

    பாலு ரிகர்சலுக்கு வந்து, சொல்லிக் கொடுத்ததை உடனே நன்றாகப் பாடி விட்டான். அவனுக்கு இருந்த திறமையைக் கண்டு கொண்டார், ஜி.கே.வி.

    "ஓ.கே.! பாலுவே பாடட்டும்'' என்று அவர் சொல்ல, பாடல் பதிவாகி, படம் வெற்றி பெற்று பாடலும் ஹிட் ஆனது.

    சினிமாவில் பாட எஸ்.பி.பி.க்கு நிறைய வாய்ப்புகள் வந்ததுடன், கச்சேரிகளும் நிறைய வந்தன. ஆந்திராவில் நிறைய கச்சேரிகளுக்கு போக வேண்டியிருக்கும். அப்போது எனக்கு ஜி.கே.வி.யின் இசை அமைப்பில் பின்னணி இசை சேர்ப்பு வேலை இருக்கும்.

    எஸ்.பி.பி.யுடன் ஒரு கச்சேரிக்கு போனால் எனக்கு சம்பளமாக 75 ரூபாய் கிடைக்கும். ஜி.கே.வி.யின் இசை அமைப்புக்கு போனால், ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் நான்கு நாளைக்கு 600 ரூபாய் கிடைக்கும்.

    இதை மனதில் வைத்து, "நான் வர முடியாது'' என்று பாலுவிடம் சொன்னால், "நீ இல்லாமல் நான் எப்படி கச்சேரி செய்வேன்? யாரை வைத்து என்ன செய்ய முடியும்?'' என்றெல்லாம் பேசி, எப்படியாவது என்னை அழைத்துச் சென்று விடுவான்.

    எழுபத்தைந்து ரூபாய்க்காக, அறுநூறு ரூபாய்களை இழந்தது எத்தனை முறை என்று கணக்கு இல்லை. இது பாலுவுக்கு இப்போது ஞாபகம் இருக்குமோ என்னமோ! பாலுவை எந்த அளவுக்கு நேசித்தேன் என்பதற்காக இதைச் சொல்ல வந்தேனே தவிர, வேறொன்றும் இல்லை.

    ஒரு முறை எஸ்.பி.பி.க்கு பொள்ளாச்சியில் கச்சேரி. அடுத்த நாள் எனக்கு இசைக் கல்லூரியின் தேர்வு இருந்தது. அதனால் நான் வரவில்லை என்று கூறிவிட்டேன்.

    ஆனால், நான் கட்டாயம் வரவேண்டும் என்று எஸ்.பி.பி. வற்புறுத்தினான். `கச்சேரி முடிந்ததும், நான் காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்' என்றான்.

    சரி' என்று கச்சேரிக்குப் புறப்பட்டேன்.

    இரவு கச்சேரி முடிந்ததும், பாலுவின் காரில், ஏறிக் கொண்டேன். `கிளாரினட்' பல்லாராவ், `தபேலா' மது ஆகியோரும் எங்களுடன் புறப்பட்டார்கள். பாலுவே காரை ஓட்டினான். சேலம், உளுந்தூர்பேட்டை வழியாக வருவதற்கு பதிலாக, சேலம், அரூர், தர்மபுரி என்று தவறான பாதையில் காரை ஓட்டியதால், வேலூர் வந்து சேருவதற்கே காலை ஐந்து மணி ஆகி விட்டது. விடியப் போகும் நேரம்.

    `அப்பாடா! வேலூர் வந்து விட்டோம். ஏழு மணிக்குள் சென்னையை அடைந்து விடலாம்' எண்ணினேன்.

    காரை ஓட்டி வந்த பாலு, டிரைவரை ஓட்டச் சொல்லி விட்டு பின் சீட்டுக்கு வந்து, என் மடியில் தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான்.

    டிரைவர் சீட்டுக்குப் பின்புறம் நான் இருந்தேன். வேலூர் அவுட்டருக்கு கார் வந்தபோது, ஒரு குழந்தை திடீரென்று காரின் குறுக்கே ஓடிவந்தது. டிரைவர் காரை ஒடிக்க, கார் மணலில் சறுக்கி, 40 அடி பள்ளத்தில் உருண்டது.

    தூங்கிக் கொண்டு வந்த நான் விழித்துப் பார்த்தால், கார் உருண்டு கொண்டிருக்கிறது!

    நான் தயாராகி விட்டேன். `இதோ இப்போது அடி விடும்', `இதோ இப்போது!' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், முன்னால் `ஐயோ, அம்மா!' என்று இருவர் கூச்சலிடும் சப்தம் கேட்டது. `சரி; முன்னால் இரண்டு பேர் காலி' என்று நினைத்தேன்.

    கார், தலை கீழாக பள்ளத்தில் போய் விழுந்தது. சக்கரங்கள் நாலும் மேலே பார்த்தபடி நின்றன! சீட் மட்டும் மாறாமல், நாங்கள் உட்கார்ந்த நிலையில், அப்படியே இருந்தது! முன்புறக் கண்ணாடி வழியாக ரத்தம் வழிவது தெரிந்தது.

    டிரைவர் பக்கத்து கண்ணாடி கதவு திறந்திருந்தது. அதன் வழியாக ஒவ்வொருவராக வெளியே வந்தோம். பார்த்தால், ஒரு பாலத்துக்குக் கீழே இருக்கிறோம் என்பது தெரிந்தது. மேலே, பாலத்தில் பெரிய கூட்டம்! அவர்கள், "என்ன ஆச்சு, என்ன ஆச்சு?'' என்று கத்தினார்கள். என்ன ஆச்சு என்று எங்களுக்கே தெரியவில்லை!

    கார் கண்ணாடியில் வழிந்தது ரத்தம் அல்ல, என்ஜின் ஆயில். ரோடு புழுதி காரணமாக, ரத்தக் கலரில் வழிந்திருக்கிறது.

    "செத்துப் பிழைத்தவன்டா!''

    எப்படியோ தப்பிப் பிழைத்தோம். மேலே வந்ததும், "நான் செத்துப் பிழைச்சவன்டா!'' என்று சத்தம் போட்டுப் பாடினேன்!

    உண்மையில், நானும், மற்றவர்களும் அந்த விபத்தில் உயிர் தப்பியது ஆச்சரியம்தான். நான், கார் கண்ணாடியில் தலையை சாய்த்து வைத்து தூங்கிக் கொண்டுதான் பயணம் செய்தேன். அந்தக் கண்ணாடி முழுவதும் நொறுங்கிப் போயிருந்தது. எனக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை.

    பின்னர், வேலூர் பஸ் அதிபர் ஒருவர் எங்களை தனது வண்டியில் சென்னையில் கொண்டு வந்து விட்டார்.

    இந்த விபத்து காரணமாக, அப்போது இசை தேர்வு எழுத முடியாமல் போயிற்று. பிறகுதான் எழுதினேன்''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    Next Story
    ×