search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் படையெடுப்பு - பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை
    X

    தேர்தல் பிரசாரத்தின்போது போலீஸ் படையெடுப்பு - பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை

    1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள்.
    1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள். அப்போது போலீசார் திடீரென்று வந்து, இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை விதித்தனர்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "1962-ல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில், மதுரையில் கம்ïனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிறைய கூட்டங்களும், கச்சேரிகளும் நடந்தன. இதில் பாவலரின் பாடலைக் கேட்க மக்கள் அதிகம் கூடினார்கள். இதனால் எல்லா வார்டுகளிலும் பாவலரின் கச்சேரியை வைக்க ஆசைப்பட்டார்கள்.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. காங்கிரஸ், தி.மு.க, கம்ïனிஸ்டு என்று மும்முனைப்போட்டி. அது காமராஜரின் ஆட்சிக்காலம்.

    ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் செய்யும் அளவுக்கு அண்ணனுக்கு நெருக்கடி. ஆனால் அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று கச்சேரிகளையுமே செய்தோம்.

    இதில் முதல் கச்சேரி மதுரையில் உள்ள தலைவிரிச்சான் சந்தில் இருக்கும். பாடி முடித்தவுடன் பேச்சாளர்கள் பேசத்தொடங்குவார்கள். அடுத்த கச்சேரி அரசரடியில் இருக்கும். நாங்கள் போகிற நேரத்தில் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் சென்றதும் பேச்சு நிற்கும். கச்சேரி தொடங்கும்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், எங்கள் இசைக்குழுவில் இருந்தது மொத்தம் நாலு பேர் மட்டுமே. இந்தக் குழுவிற்கு சில நேரம் டாக்சி. சில நேரம் ஜட்கா (குதிரை வண்டி).

    முன்பக்கம் வண்டி ஓட்டுபவரின் அருகே பாஸ்கர் உட்கார, ஆர்மோனியம், தபேலா, கிடாரை வைத்துக்கொண்டு அமர் (கங்கை அமரன்) உட் கார, பின்னே நானும் அண்ணனும் கால்களை தொங்கப்போட்டபடி உட்கார்ந்து கொள்வோம்.

    முதல் கச்சேரி முடிந்ததும், ஜட்காவை கூப்பிட்டு வாத்தியங்களை எடுத்து வைத்து உட்கார்ந்து வண்டி ஓடத்தொடங்கும்போது, ஒரு கூட்டம் அப்படியே ஜட்காவை பின்தொடர்ந்தபடி ஓடிவரும்; அடுத்த கச்சேரியை கேட்பதற்காக.

    அடுத்த கச்சேரியிலும் இதே நிலைதான் தொடரும்.

    காங்கிரஸ் தொண்டர்களுக்கோ, அடுத்த கட்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது பொறுக்கவில்லை.

    ஒருநாள் செல்லூரில் கைத்தறி நெசவாளர் வசிக்கும் பகுதியில் கச்சேரி. மூன்று தெருக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் மேடை போட்டிருந்தார்கள். அங்கு வாழ்ந்த அத்தனை நெசவாளர்களும் கம்ïனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று தெருக்களிலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒழுங்காக அமர்ந்து கச்சேரி கேட்கத் தயாரானார்கள்.

    பேச்சாளர்கள் பேசி, அடுத்து பாவலரின் இசை நிகழ்ச்சி என்று அறிவித்ததும், மக்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்.

    நாங்கள் அமர்ந்து `டைட்டில் மிïசிக்' வாசித்து இரண்டு மூன்று பாடல்களை அண்ணன் பாடியிருப்பார். அனைவருக்கும் வணக்கும் சொல்லும் பாடலில், "கடந்த தேர்தலில் காளை மாட்டுக்கு ஓட்டுப்போடாம விட்டவர்க்கும் வணக்கம்'' என்றார். கைதட்டல் சத்தம் வானை எட்டியது.

    கைதட்டு அடங்கும் முன் "அந்தக் காளை மாட்டுக்கு ஓட்டுப்போட்டதை எண்ணி இப்போ கவலைப் படுவோர்க்கும் வணக்கம்'' என்றார். இதற்கும் பலத்த கரகோஷம்.

    இப்படி அண்ணன் இரண்டொரு பாடல்களை பாடி முடித்திருந்த வேளையில் திடீரென ஒரு போலீஸ் "வேன்'' எங்கள் கச்சேரி நடக்கும் இடம் அருகே வந்து நின்றது.

    போலீஸ் வேனில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீசார் பத்துப்பேருக்கு மேல் வரிசையாக அணிவகுத்து, மேடையை நோக்கி சரசரவென வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக இன்ஸ்பெக்டர் நடராஜன் என்பவர் வந்தார். எல்லாரும் வந்து மேடையை சுற்றி வளைத்து நின்றார்கள்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர், அண்ணன் பாவலரைப் பார்த்து, "பாவலர்! நீங்கள் பாடக்கூடாது'' என்றார்.

    "எதுக்கு?'' - பாவலர் கேட்டார்.

    "நீங்க மைக் செட் வைத்துக்கொள்ள போலீஸ் பெர்மிஷன் வாங்கவில்லை'' என்றார், இன்ஸ்பெக்டர்.

    "அப்படியா?'' என்று சாதாரணமாக கூறிய அண்ணன், ஒலிபெருக்கி வைப்பவரை பார்த்து, "மைக்கை ஆப் பண்ணுப்பா''

    என்றார்.மைக்செட்காரரும் அப்படியே செய்தார்.

    இப்போது அண்ணன் எங்களைப் பார்த்தார், "டேய், வாசிங்கடா!'' என்றார்.

    நாங்கள் ரெடியானோம். அண்ணன் `மைக்' இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். கூட்டம் அமைதியாக கேட்டது. நாங்களோ `இன்று கம்ïனிஸ்டு கட்சிக்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலில் நம் பெயரும் இடம் பெறப்போகிறது' என்று வீராவேசத்துடன் வாத்தியங்களை

    அழுத்தினோம்.இன்ஸ்பெக்டரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாவலர் அண்ணன் பேசத்தொடங்கினார். "பார்த்தீங்களா? கமëïனிஸ்டு கட்சிக்கு மக்கள் கூடுவதைக்காண காங்கிரசுக்கு மனம் பொறுக்கவில்லை. கல்யாணத்தில், மணவறைப் பலகையை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்ற சினிமாக் காமெடி போல, இங்கே மைக்செட்டை பிடுங்கி விட்டால் பாட்டு எப்படி நடக்கும் என்று காமெடி செய்கிறார்கள்''

    என்றார்.இதற்கு மக்கள் சத்தம் போட்டு சிரிக்க, "இப்படிப்பட்ட கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்றும் சமயம் பார்த்து ஆணியடித்தார். "இல்லை, இல்லை!'' என்று கூட்டம் கைதட்டியது.

    மைக் இல்லாமலே அடுத்த கச்சேரிக்கு கிளம்பியபோது, கூட்டம் முழுவதும் ஜட்கா பின்னால்  ஓடிவந்தது.

    எந்த ஒரு இசைக்கலைஞன் சரித்திரத்திலும் காணக்கிடைக்காதது இப்படியொரு நிகழ்ச்சி. இதில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.
    Next Story
    ×