search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் ஜாதிமல்லி
    X

    பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் ஜாதிமல்லி

    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.
    டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

    பாலசந்தரும் குஷ்புவை வைத்து "ஜாதிமல்லி'' என்ற படத்தை உருவாக்கினார். சரிதாவின் கணவரான மலையாள நடிகர் முகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார். புகழ் பெற்ற பாடகியாக இப்படத்தில் குஷ்பு நடித்தார். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் ஓட்டம் சுமார்தான்.

    இதே காலக்கட்டத்தில் பாலசந்தர் இயக்கிய "வானமே எல்லை'' சிறந்த படமாக அமைந்தது. ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை இப்படம் அலசியது. ரம்யாகிருஷ்ணன், மதுபாலா சிறப்பாக நடித்தனர்.

    இந்தப் படத்தில் ஒரு விசேஷம்: ஊனமுற்றவர்கள் மனம் தளரக்கூடாது, உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு அதிகாரியாக இருந்த எச்.ராமகிருஷ்ணன், கால் ஊனமுற்றவராக இருந்தும், படித்து முன்னேறி அரிய சாதனைகளை நிகழ்த்திய காட்சி, படத்தில் இடம் பெற்றது.

    இதன் பிறகு பாலசந்தர் இயக்கிய படம் "டூயட்'' (1994) இந்தப் படத்தின் மூலம்தான் பிரகாஷ்ராஜ் தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகமானார். அவருடன் பிரபு இணைந்து நடித்தார்.

    தன்னை அறிமுகப்படுத்திய பாலசந்தர் மீது மிகவும் அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர் பிரகாஷ்ராஜ். தன் படக்கம்பெனிக்கு, தான் நடித்த முதல் படத்தின் பெயரையே ("டூயட்'' மூவிஸ்) சூட்டியுள்ளார்.

    1996-ல் "கல்கி'' என்ற படத்தைத் தயாரித்தார் பாலசந்தர். கதாநாயகியை புரட்சிப் பெண்ணாகப் படைத்தார். அந்த வேடத்தில் ஸ்ருதி நடித்தார்.

    10 ஆண்டுகள் கழித்து சொல்ல வேண்டிய கருத்தை, மிகவும் முன்னதாக சொன்னதால், அதை ரசிகர்கள் ஜீரணிக்க முடியவில்லை. படம் தோல்வி அடைந்தது.

    பாலசந்தர் தயாரித்த சில படங்களை வேறு டைரக்டர்கள் டைரக்ட் செய்தனர். அவற்றில் முக்கியமான படம் "ரோஜா'' (1992). மணிரத்தினம் இயக்கிய இந்தப் படத்தின் மூலமாகத்தான் இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார்.

    காஷ்மீர் தீவிரவாதிகளைப் பற்றிய இப்படத்தில், அரவிந்தசாமியும், மதுபாலாவும் ஜோடியாக நடித்தனர். தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக "ரோஜா'' மதிப்பிடப்படுகிறது.

    இந்தக் காலக்கட்டத்தில், டெலிவிஷன் சீரியல்கள் தயாரிப்பதில் பாலசந்தர் கவனம் செலுத்தினார்.

    "ரெயில் சினேகம்'', "கையளவு மனசு'', "காசளவு நேசம்'', "காதல் பகடை'', "ப்ரேமி'', "அண்ணி'', "சஹானா'' உள்பட சுமார் 12 மெகா சீரியல்களை உருவாக்கியுள்ளார். இவற்றில் "அண்ணி'' 338 நாட்களும், "சஹானா'' 317 நாட்களும் ஒளிபரப்பாயின.

    பாலசந்தரின் நீண்ட திரை உலகப்பயணத்தில், 1982-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடந்த விபத்து, மிக பயங்கரமானதாகும்.

    நினைத்தாலே நெஞ்சை பதறச் செய்யும் அந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

    தமிழில் கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தை, இந்தியில் "ஜராசி ஜிந்தகி'' (வாழ்க்கையின் ஒரு துளி) என்ற பெயரில் தயாரித்தார், பாலசந்தர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமாசலபிரதேசத்தில், இயற்கை அழகு மிக்க "குளு'' பள்ளத்தாக்கில் நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், பாலசந்தர், கமலஹாசன், ஒளிப்பதிவாளர் லோகநாதன் ஆகியோர் விமானம் மூலம் சென்னை திரும்பி விட்டனர்.

    படப்பிடிப்பு குழுவினர் ஒரு பஸ்சில் மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். பஸ்சில் 29 பேர் இருந்தனர்.

    வளைந்து வளைந்து சென்ற மலைப்பாதையில், பஸ் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக இன்னும் ஒரே ஒரு வளைவுதான். அதைத் தாண்டிவிட்டால், சம வெளிக்கு வந்து விடலாம்.

    அந்த சமயத்தில்தான், எதிர்பாராத விதமாக பயங்கர விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த ஒரு காரின் மீது மோதி விடாமல் தடுக்க பஸ்சை திருப்பினார் டிரைவர்.

    பஸ் ஒரு பாறையில் மோதி, உருண்டு, அதள பாதாளத்தில் விழுந்தது.

    இந்த பயங்கர விபத்தில், ஒளிப்பதிவாளர் லோகநாதனின் சகோதரர் உள்பட 8 பேர் மாண்டனர். இணை இயக்குனர் அமீர்ஜான் படுகாயம் அடைந்தார். அப்போது உதவி நடன ஆசிரியையாக இருந்த கலாவும், உதவி இயக்குனராக இருந்த சுரேஷ்கிருஷ்ணாவும் அதிக காயம் இல்லாமல் தப்பினர்.

    இறந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை. எட்டுப் பேர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டன.

    இந்த பயங்கர விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள பாலசந்தருக்கு நீண்ட காலம் பிடித்தது.
    Next Story
    ×