search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிங்கப்பூர் தொழில் அதிபரை மணந்த லதா
    X

    சிங்கப்பூர் தொழில் அதிபரை மணந்த லதா

    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார்.
    ஒரு கட்டத்தில் படங்களில் நடித்தது போதும் என்ற எண்ணம் ஏற்பட்டபோது லதா திருமணம் செய்து கொண்டார். கணவர் சபாபதி, சிங்கப்பூரில் பிஸினசில் இருந்ததால் கணவருடன் அங்கே போனார். கணவரின் பிஸினஸ் லண்டன், பிரான்ஸ், மலேசியா என்று விரிவுபடுத்தப்பட, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளிலேயே இருந்தார்.

    லதா தம்பதிகளுக்கு 2 மகன்கள். லதா கணவருடன் வெளிநாடுகளில் இருக்க நேர்ந்தாலும் மகன்கள், சென்னையில் பாட்டி வீட்டில் தங்கி படித்தார்கள். சென்னை கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த கார்த்திக், அதன் பிறகு மேல் படிப்புக்காக லண்டன் போனார்.

    அதே பள்ளியில் பத்தாவது வரை படித்து விட்டு சீனிவாஸ் மேற்படிப்புக்காக லண்டன் போனார். மூத்தவர் கார்த்திக் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கணித நிர்வாகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு இரண்டாண்டுகள் `பேங்கிங்' படிப்பை தொடருகிறார்.

    இளையவர் `லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் கல்லூரியில்' இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பை தொடர்ந்து வருகிறார்.

    இப்படி 10 ஆண்டுகள் கடந்த நிலையில் லதாவின் அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் `கேன்சர்' என்பது உறுதியானதும் லதாவுக்கு தகவல் பறக்க, அடுத்த விமானத்தில் பறந்து சென்னை வந்தார் லதா.

    மீண்டும் சென்னை விஜயம் பற்றி லதா கூறியதாவது:-

    "கணவரின் தொழில், பிள்ளைகளின் படிப்பு என்று வெளிநாட்டு வாழ்க்கை 10 வருடமாக தொடர்ந்தது. இடையிடையே ஊருக்கு வந்து போவதுண்டு. ஆனால் அம்மாவுக்கு கேன்சர் என்றதும் மனம் தாங்காமல் சென்னை வந்துவிட்டேன்.

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நான் சென்னை வந்த நேரத்தில் எம்.ஜி.ஆரும் சிகிச்சை முடிந்து பூரண சுகம் பெற்று சென்னை திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்ததும் என் அம்மாவின் உடல்நிலை அவருக்கு சொல்லப்பட, உடனே அம்மாவை பார்க்க ஆஸ்பத்திரிக்கே வந்து விட்டார். அப்போது அவர் மூன்றாவது முறையாக முதல்-அமைச்சர் ஆகியிருந்தார்.

    என்னைப் பார்த்ததும், "அம்மாவுக்கு இப்படி இருப்பதை என்னிடம் ஏன் முன்பே சொல்லவில்லை?'' என்று கேட்டார். நான் லண்டனில் இருந்து சென்னை வந்ததே அம்மாவை கவனித்துக் கொள்ளத்தான் என்பதை சொன்னேன். சிகிச்சை முறைகளை டாக்டர்கள் மூலம் தெரிந்து கொண்டவர், சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார். அமெரிக்க சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு சரியாக பேச்சு வராத நேரம். அப்படியிருந்தும் அக்கறை எடுத்துக்கொண்டு நேரில் வந்து அம்மாவை பார்த்த அவரது அன்பை இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

    கேன்சர் முற்றிவிட்டதால், அம்மா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதனால் என் கடைசித் தங்கைக்கு நான் தாயாகும் நிலை ஏற்பட்டது.

    அம்மா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக என் தங்கை தேவி திருமணத்தை நடத்தி வைப்பார்களோ, அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அவள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்பினேன். தங்கைக்கேற்ற வரன் தேடியபோது ஓட்டல் பார்க் ஷெரட்டன் அதிபரின் மகன் கவுரவ் கோயல் கிடைத்தார். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தேன். அன்றைய தினம் அவள் தாய்போல நான் மன நிறைவு பெற்ற நாள்.

    என் தம்பிகளில் ராஜ்குமார் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் படித்த ஹோலிகிராஸ் கான்வென்ட் பெண்களுக்கானது என்றாலும், முதல் ஐந்து வகுப்புகளில் மட்டும் ஆண் -பெண் சேர்ந்து படித்து வந்தனர். இந்த வகையில் தம்பி ராஜ்குமார் ஹோலிகிராஸ் கான்வென்டில் சேர்ந்தான்.

    நான் நடிக்க வந்த நேரத்தில் ராஜ்குமார் முழு எம்.ஜி.ஆர். ரசிகனாகவே மாறிவிட்டான். ஒருமுறை அவன் வீட்டில் இருந்த நேரத்தில் டெலிபோன் ஒலித்திருக்கிறது. எடுத்துப் பேசியபோது, "நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்'' என்று எம்.ஜி.ஆர். சொல்ல, அவரிடம் பேசி முடித்துவிட்டு அன்று முழுக்க அவன் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

    அப்போது, "ரிக்ஷாக்காரன்'' படம் ரிலீசாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. ராஜ்குமாரின் வகுப்பாசிரியர் அன்று மாணவர்களிடம், "எதிர்காலத்தில் யார் யார் என்னென்னவாக வரப்போகிறீர்கள்?'' என்று கேட்டிருக்கிறார். மாணவர்களில் பலரும் "டாக்டராவேன்'', "என்ஜினீயராவேன்'', "பைலட்டாவேன்'' என்று சொல்ல, ராஜ்குமார் முறை வந்தபோது அவன் எழுந்து, "நான் ரிக்ஷாக்காரன் ஆவேன் சார்'' என்றிருக்கிறான்.

    மாணவர்கள் குபீரென சிரித்து வகுப்பறையை அலற வைத்திருக்கிறார்கள். ஆசிரியரும் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை என்பதால், "ஏன் அப்படி?'' என்று கேட்டிருக்கிறார். அப்போது, ரிக்ஷாக்காரன் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் கேரக்டர் அந்த அளவுக்கு ஒரு நல்ல கேரக்டராக ராஜ்குமார் மனதில் பதிந்திருப்பதை ஆசிரியர் தெரிந்து கொண்டார்.

    மறுநாள் படப்பிடிப்பில், பள்ளியில் `ரிக்ஷாக்காரன்' ஆக விரும்பிய தம்பியின் எதிர்கால ஆசை பற்றி எம்.ஜி.ஆரிடம் சொன்னேன். ஆச்சரியமாக கேட்ட எம்.ஜி.ஆர், "பார்த்தியா லதா! இதுதான் நம் உழைப்புக்கான மரியாதை. ரிக்ஷா ஓட்டுபவர் தனது நேர்மையான கேரக்டர் மூலம் உன் தம்பி மனதில் பதிந்திருக்கிறார். ஒரு கேரக்டர் மக்கள் மனதில் நல்லவிதமாய் பதிய வேண்டும் என்பதற்காகத்தானே அவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு கிடைத்த பலன்தான் உன் தம்பியின் மனதில் பதிந்த `ரிக்ஷாக்காரன்' ஆசை'' என்று விளக்கம் தந்தார்.

    ராஜ்குமார் பின்னாளில் நடிகராகி, நடிகை ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொண்டு 2 பிள்ளைகளுக்கு அப்பா ஆனாலும், இப்போதும் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்.''

    இவ்வாறு லதா கூறினார்.
    Next Story
    ×