search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவகாமியின் செல்வன் - சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்
    X

    சிவகாமியின் செல்வன் - சிவாஜியுடன் லதா நடித்த ஒரே படம்

    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.
    நடிகை லதா, எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தாலும் சிவாஜியுடன் "சிவகாமியின் செல்வன்'' என்ற படத்தில் மட்டுமே நடித்தார்.

    இதுபற்றி லதா கூறியதாவது:-

    "15 வயதில் நடிக்க வந்து விட்டாலும் என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் எம்.ஜி.ஆர். எனக்கு போன் செய்து வாழ்த்துவதுண்டு. என் 18-வது பிறந்த நாளன்றும் காலையிலேயே போனில் வாழ்த்தினார். "மதியம் ஆபீசுக்கு வரமுடியுமா?'' என்று கேட்டார்.

    போனேன். என்னைப் பார்த்ததும், "உங்கம்மாவுக்கு நான் பண்ணின வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். இப்ப நான் ஒண்ணு கேக்கறேன். செய்வியா?'' என்று கேட்டார்.

    அவர் கேட்ட கேள்வி எனக்குப் புரியவில்லை. அவரே விளக்கினார். "லதா! உனக்கு 18 வயது பிறந்து விட்டது. இப்போது நீ மேஜராகி விட்டாய். உங்கம்மா உன் நடிப்பு தொடர்பாக முன்பு போட்டுக் கொடுத்திருந்த காண்டிராக்ட் இனி செல்லுபடியாகாது. இப்போது நான் போட்டிருக்கும் புதிய காண்டிராக்டில் கையெழுத்து போடுவாயா?'' என்று விளக்கி என் பதிலை எதிர்பார்த்தார்.

    நான் எதுவும் பேசாமல், அவரிடம் இருந்த காண்டிராக்ட் பேப்பரை வாங்கி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

    என்ன ஏதென்று கூட கேட்காமல் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது, அவருக்கு மிக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனாலும், பட உலகத்தில் அவர் என்னை அவரது படங்களில் ஜோடியாக நடிக்க வைத்திராவிட்டால் நான் ஏது?

    ஆனால் புது ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால், மற்ற நடிகர்கள் படங்களில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை நான் ஏற்க முடியாமல் போயிற்று. சிவாஜி படத்தில் கூட "டாக்டர் சிவா'', "அவன்தான் மனிதன்'' என்று என்னைத் தேடி வந்த 2 படங்களில் நடிக்க முடியாமல் போயிற்று.

    ஆனாலும், எம்.ஜி.ஆர். என்னிடம், மற்றவர்கள் படங்களில் நடிக்கக் கூடாது என்று ஒருபோதும் சொன்னதில்லை. "என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு நடி. அப்படிச் செய்தால் படப்பிடிப்பு தேதிகள் இடிக்காமல் இருக்கும்'' என்றுதான் சொல்லியிருந்தார்.

    சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போதுதான் சிவாஜி நடிக்கும் "சிவகாமியின் செல்வன்'' படம் தயாராக இருந்த நேரம். படத்துக்கு 2 கதாநாயகிகள். ஒரு கதாநாயகி வாணிஸ்ரீ. இன்னொரு கதாநாயகியின் கேரக்டர் படத்தின் பிற்பகுதியில்தான் வரும் என்றார்கள். அதாவது பெரிய சிவாஜியின் மனைவி வாணிஸ்ரீ. அவரின் வாரிசாக உருவாகும் சிவாஜிக்கு யாரைப் போடலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார்கள்.

    இந்த தகவல் என் காதுக்கு வந்ததும் இந்த கேரக்டரையாவது ஏற்று நடிப்போமே என்று தோன்றியது. அதோடு மிகக்குறைந்த நாட்களே கால்ஷீட் கேட்டார்கள். அதனால் சிவாஜி படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் அந்த கேரக்டரில் நடிக்க `ஓ.கே' சொல்லிவிட்டேன்.

    செட்டில் என்னை ரொம்ப மரியாதையாக நடத்தினார், சிவாஜி. "அண்ணனுடன் (எம்.ஜி.ஆர்) நடிக்கிறீங்க. என் கூட இது முதல் படம். நடிப்பில் எந்த மாதிரி சந்தேகம்னாலும் தயங்காம கேளுங்க'' என்று சொன்னவர், "உங்க அப்பா என்னோட நல்ல நண்பர் தெரியுமா?'' என்றும் சகஜமாக பேசி, பதட்டமில்லாமல் நடிக்க வைத்தார். ஆனாலும் தொடர்ந்து அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது.

    அதுபற்றி லதா கூறியதாவது:-

    "நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன்.

    இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும்.

    எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

    நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார். "கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும்'' என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன்.

    நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, "நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும்'' என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜ×, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள்.

    "சிரித்து வாழவேண்டும்'' என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார். 
    Next Story
    ×