search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் - லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்
    X

    வெளிநாடுகளில் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் - லதா வெளியிட்ட சுவையான தகவல்கள்

    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்'' படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.
    எம்.ஜி.ஆரின் "உலகம் சுற்றும் வாலிபன்'' படம் மகத்தான வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க எம்.ஜி.ஆருடன் பல நாடுகளில் லதா சுற்றுப்பயணம் செய்தார்.

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படப்பிடிப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்ற லதா, அங்கே பள்ளி மாணவிக்கே உரிய மனநிலையில் அந்த இயற்கை சூழ்நிலையை அனுபவித்தார்.

    ஒருமுறை, இஷ்டத்துக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆரிடம் மாட்டிக்கொண்டார்.

    அந்த அனுபவம் பற்றி லதா கூறியதாவது:-

    "ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ரூமில் நானும், மஞ்சுளாவும் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். அப்போது `ஐஸ்கிரீம்' சாப்பிடலாமா என்று கேட்டார், மஞ்சுளா. எனக்கும் ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. எனவே, "சாப்பிடலாமே'' என்றேன்.

    உடனே ரூமில் இருந்த இன்டர்காமில் ஐஸ்கிரீம் ஆர்டர் கொடுத்தேன். நான் கேட்ட `வெண்ணிலா' ஐஸ்கிரீம் கிடைத்தது. நானும், மஞ்சுளாவும் சேர்ந்து இஷ்டத்துக்கு ஐஸ்கிரீமை வெட்டினோம்.

    இரண்டாவது நாளும் படப்பிடிப்பு முடிந்து வந்ததும், இதே கதைதான். இப்போது ஆர்டர் கொடுத்த ஐஸ்கிரீம், அறைக்கு வந்து சேர்ந்ததும், ஆர்வத்துடன் சாப்பிடத் தொடங்கினோம்.

    அப்போது பார்த்து கதவு `தட் தட்' என தட்டப்பட்டது. திறந்து யாரென்று பார்த்தால், வெளியே எம்.ஜி.ஆர். நின்று கொண்டிருக்கிறார்!

    எனக்கு அதிர்ச்சி. எம்.ஜி.ஆரை பார்த்ததும் பயந்துபோன மஞ்சுளா, அந்த பதட்டத்திலும் ஐஸ்கிரீமை மறைத்து வைத்து விட்டார்.

    உள்ளே வந்த எம்.ஜி.ஆர், "ஐஸ்கிரீம்னா ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறதே'' என்று சொல்லி எங்கள் இருவர் முகத்தையும் பார்த்தார். நாங்கள் எதுவுமே நடக்காததுபோல் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டிருந்தோம்.

    நாங்கள் ஆர்டர் கொடுத்து, ஐஸ்கிரீம் வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டுதான் அவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார்.

    அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு உட்கார்ந்தார், எம்.ஜி.ஆர். என்னை அருகில் அழைத்தார். "என்ன லூசு! நீங்க ரூம்ல இருந்து ஏதாவது வேணும்னு ஆர்டர் கொடுத்தால், அதுக்கான பில் எங்ககிட்ட தானே வரும். எனக்கும் ஐஸ்கிரீம் அதுவும் வெண்ணிலா ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். சரி சரி! ஒளிச்சு வெச்சிருக்கிறதை எடுங்க! சேர்ந்து சாப்பிடலாம்'' என்றபோது எங்கள் முகத்தில் ஈயாடவில்லை.

    இப்படி ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் எங்கள் குழந்தை மனதை தெரிந்து கொண்டவர், அவரும் குழந்தை மாதிரி எங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் மனசுக்குள் `ஜில்'லென்ற அனுபவமாக இருக்கிறது.''

    இவ்வாறு லதா கூறினார்.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக வெளிநாட்டில் முதலில் எடுத்தது `சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' பாட்டுதான். இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர், நாகேஷ், வெளிநாட்டு குழந்தைகளுடன் லதாவும் ஆடிப்பாடி நடித்தார்.

    இந்தப் பாடல் காட்சியின்போது ஏற்பட்ட அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-

    "நடிகர் நாகேஷ் திறமையான நடிகர். ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பது தெரியும். ஆனால், நகைச்சுவை என்பது எப்போதும் அவரிடம் குடிகொண்டிருக்கிறது என்பதை அவருடன் பங்குகொண்ட அந்த படப்பிடிப்பின்போதுதான் அனுபவரீதியாக உணர்ந்து கொண்டேன். திடீர் திடீரென அவர் அடிக்கிற கமெண்டுகளுக்கு எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

    எம்.ஜி.ஆர் - நான் - நாகேஷ் இருக்கிற நேரங்களில் இப்படி நாகேஷ் அடிக்கிற ஜோக்குகளுக்கு நான் சத்தம் போட்டு சிரித்து விடுவேன். இரண்டொரு முறை இதை கண்டு கொள்ளாமல் விட்ட எம்.ஜி.ஆர், அடுத்த முறை நான் சிரித்தபோது, "என்ன நீ! வயசுப்பொண்ணு இப்படியா சத்தமா `கெக்கேபிக்கே'ன்னு சிரிக்கிறது?'' என்று கேட்டார். கேள்வியில் கொஞ்சம் கோபம் இருந்தது. அப்புறம் நான் ஏன் வாயை திறக்கப்போகிறேன்?

    "உலகம் சுற்றும் வாலிபன்'' படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் அந்தப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி பெற்றதை அறிந்தேன்.

    ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் "வெளிநாட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். எனவே தயாராக இரு'' என்றார்.

    வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் வெற்றிக்காக மறுபடியும் வெளிநாடு போகும் வாய்ப்பு என்பது எனக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்தது. பாரீஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, ரஷியா என இந்த வெற்றிப்பயணம் தொடர்ந்தது. ரசிகர்களிடம் எம்.ஜி.ஆர். எத்தனை அன்பு கொண்டவர் என்பதை இந்தப் பயணத்தில் கண்கூடாக உணர முடிந்தது.

    இந்தப் பயணத்தில் நான் பட்ட ஒரே சிரமம், சாப்பாட்டு கஷ்டம்தான். அதுவும் ரஷியாவில் சாப்பாடு காரமோ காரம். இங்குள்ள `ஆந்திர உணவு'தான் நமக்கு காரமாக தெரியும். ஆனால் ரஷிய உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்கள் ஆந்திர உணவை `காரம்' என்று சொல்லவேமாட்டார்கள். அந்த அளவுக்கு காரமானது ரஷிய உணவு.

    இந்த சாப்பாட்டு விஷயத்தில் 2 நாள் சமாளித்துப் பார்த்தேன். பிறகு முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் சண்டைக்கே போய்விட்டேன். "போதும்! இனியும் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது. என்னை ஊருக்கு அனுப்பி வெச்சிருங்க'' என்று அழாத குறையாக முறையிட்டேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நீ வெளியே சொல்கிறாய். என்னால் இந்த கஷ்டத்தை வெளியே சொல்ல முடியவில்லை. எனக்காக கொஞ்சம் பொறுமையாக இரு'' என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு வழியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த இந்திய உணவகத்துக்கு அழைத்துப்போன எம்.ஜி.ஆர், "இப்போது உன் சாப்பாட்டுக் கவலை தீர்ந்தது. உன் இஷ்டத்துக்கு எது வேண்டுமானாலும் சாப்பிடு'' என்றார். அவரும் இந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.

    சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்தின் போதுதான் `தாய்மை'க் குணம் கொண்ட எம்.ஜி.ஆரை பார்த்தேன். அங்கிருந்த பனிமலையை சுற்றிப் பார்க்க எம்.ஜி.ஆருடன் செருப்பு அணிந்தபடி கிளம்பினேன். போன பிறகுதான் `ஷூ' இல்லாமல் நடக்க முடியாது என்று தெரிந்தது. பனிமலை பயணத்தில் குளிர் தாக்கி நடுங்கவும் ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் போட்டிருந்த கோட்டை கழற்றி என்னை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

    இப்படி பாதி தூரம் கடந்த நிலையில், `இனி என்னால் நடக்க முடியாது' என்றேன். என் நிலையை புரிந்து கொண்டவர், என்னை அலாக்காக தூக்கியபடி நடந்து, பாதுகாப்பான இடம் வந்ததும் இறக்கி விட்டார். அவர் மட்டும் அன்றைக்கு இப்படி செய்திராவிட்டால், அந்த குளிரிலேயே விரைத்துப் போயிருப்பேன்.''

    இவ்வாறு லதா கூறினார். 
    Next Story
    ×