search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரீபிரியா டைரக்டர் ஆனார்!
    X

    ஸ்ரீபிரியா டைரக்டர் ஆனார்!

    புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கியபோதே, சில படங்களை ஸ்ரீபிரியா டைரக்ட் செய்தார். நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார்.

    நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.

    தமிழில் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும், கதை நன்றாக இருப்பதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் கதை உரிமையை அனைத்து மொழிகளுக்கும் ஸ்ரீபிரியாவிடம் டைரக்டர் கே.பாலசந்தர் வாங்கினார். இது, ஸ்ரீபிரியாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

    கதையை வாங்கியதும், தெலுங்கில் சரிதாவை வைத்து படத்தை இயக்கினார் பாலசந்தர். அங்கே படம் மிகப்பெரிய வெற்றி. "ஒரு தோல்விப்படத்தை எப்படி வெற்றிகரமாக மாற்றமுடியும்'' என்பதை அன்றே செய்து காட்டினார், கே.பாலசந்தர். இதில் கதை என்னுடையது என்பதில் எனக்கொரு பெருமை. அவ்வளவுதான்'' என்கிறார், ஸ்ரீபிரியா.

    இதே காலகட்டத்தில் டைரக்டராகவும் தன்னை வெளிப்படுத்தினார், ஸ்ரீபிரியா. "சாந்தி முகூர்த்தம்'' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஸ்ரீபிரியாவை ஒரு தரமான இயக்குனராக நிலைநிறுத்த, தொடர்ந்து "நானே வருவேன்'' என்ற படத்தை இயக்கினார். இதே படத்தை கன்னடத்திலும் இயக்கினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், தெலுங்கில் பிரபல இயக்குனராக திகழ்ந்த தாசரி நாராயணராவ் தெலுங்கில் இயக்கிய "சிவரஞ்சனி'' படம் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழில் "நட்சத்திரம்'' என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தில் ஸ்ரீபிரியா நடிகையாகவே நடித்திருந்தார். இந்தப்படம் தெலுங்கில் பெற்ற வெற்றியை, தமிழில் எட்டவில்லை.

    டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "இளமை ஊஞ்சலாடுகிறது'' படம் ஸ்ரீபிரியாவுக்கு இன்னொரு திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் கமலஹாசனின் காதலியாக இருந்து ரஜினியின் மனைவியாக மாறும் கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தக் கேரக்டரில் ஸ்ரீபிரியா நடிப்பதாக இல்லை. அதுபற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "படத்தில் ஜெயசித்ரா நடித்த கேரக்டரில்தான் நான் நடிப்பதாக இருந்தது. கதைப்படி அந்த கேரக்டருக்கு அத்தனை முக்கியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப்படத்தை தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் அப்போது புகழின் உச்சியில் இருந்த ஜெயசுதா நடித்தார். நான் ஸ்ரீதரிடம், "படத்தில் நீங்கள் எனக்கு தருவதாக சொன்ன கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. மெயின் ரோல் தந்தால் பண்ணுகிறேன். சின்ன கேரக்டரில் நான் நடிக்க விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வந்து விட்டேன்.

    நான் இப்படி மனதில் இருப்பதை படபடவென கொட்டிவிட்டு வந்தது ஸ்ரீதர் சாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும் என்று எண்ணினேன். ஆனால் என் தைரியத்தைப் பார்த்தோ, அல்லது நம்பிக்கை வந்தோ அந்த மெயின் கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார். நான் நடிக்க மறுத்த கேரக்டரில் சில நாட்களில் ஜெயசித்ரா நடித்தார்.

    படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆடை நேர்த்திக்காக இந்தப் படத்தில்தான் நான், பேசப்பட்டேன். ஸ்ரீதர் சாரின் கலை அழகுணர்வுக்கு கிடைத்த மரியாதையாக இந்தப் பாராட்டை எடுத்துக் கொண்டேன்.

    இந்தப்படம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. ராஜேஷ்கன்னா, சத்ருகன்சின்கா நடித்தார்கள். என் கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். என்ன காரணத்தாலோ இந்தியில் படம் சரியாக ஓடவில்லை.''

    இவ்வாறு கூறினார், ஸ்ரீபிரியா.

    நடிகர் பாலாஜி அப்போது பட அதிபராகவும் மாறி நிறைய படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் புகழ் ஏறுமுகமாக இருந்தபோது, அவரை கதாநாயகனாக்கி "பில்லா'' என்ற படத்தை தயாரித்தார். படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    இந்தப் படத்தில் தனது கேரக்டர் சின்னதாக இருப்பதாக கூறி ஆரம்பத்தில் நடிக்க மறுத்திருக்கிறார், ஸ்ரீபிரியா. படத்தில் தனது கேரக்டர் வலுவில்லாததாக இருக்கிறது என்று அவர் கதை வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கூறினார்.

    ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னதும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், "வேண்டுமானால் பார். படத்தில் உன் கேரக்டரும் பேசப்படும். அதற்கு நான் பொறுப்பு'' என்றார்.

    இந்தப்படத்தில் நடித்தது பற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "தயாரிப்பாளர் பாலாஜி எப்போதுமே என் போன்ற கலைஞர்களின் மரியாதைக்குரியவர். அவர் கம்பெனியில், சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற பேதம் கிடையாது. ஒவ்வொரு நடிகர் - நடிகைக்கும் நாற்காலி போட்டு அதில் எம்பிராய்டரியில் அவர்கள் பெயரை பதித்து இருப்பார்கள்.

    அதுமாதிரி சம்பள விஷயத்திலும் அவர்களின் அணுகுமுறை புதுமையானது. யார் நடிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் சம்பளப் பணத்தையே கொடுப்பார்கள். அதுவரை நான் நடித்த படங்களில் என் சம்பளத்தை அம்மாவிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். முதன் முதலாக இந்தப் படத்தில்தான் என் சம்பளத்தை நான் வாங்கினேன்.

    அப்போது கூட பாலாஜி சாரிடம், "அம்மாவிடம் கொடுத்து விடுங்களேன் சார்'' என்று சொல்லிப் பார்த்தேன். அவரோ, "என் படத்தில் நடிப்பவர் யாரோ, அவர்தான் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்'' என்று கூறிவிட்டார்.

    பாலாஜி சாரின் "பில்லா'' படம் இந்தியில் வந்த `டான்' படத்தின் ரீமேக். அமிதாப்பச்சனும், ஜீனத் அமனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டியபோது முழுவதும் பார்க்காமல் தூங்கிவிட்டேன். கடைசியில் என் கேரக்டர் இதுதான் என்று வந்தபோது `சின்ன ரோல்' என்று தயங்கினேன்.

    கதை வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன், இந்தியில் சின்னதாக இருந்த கேரக்டரை, தமிழில் பெரிதாக உருவாக்கித் தருகிறேன் என்றார்.

    ஆனாலும் படம் வந்தபோது என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றவே செய்தது. என்றாலும் அந்த கேரக்டரில் நான் பேசப்பட்டேன். ஏ.எல்.நாராயணன் சார் சொன்னது உண்மையாயிற்று.

    இந்தப் படத்தில் என் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்பதை தயாரிப்பாளர் பாலாஜி சாரும் தெரிந்தே வைத்திருந்தார். "பில்லா'' படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தவர், "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய கேரக்டர் உண்டு'' என்று சொன்னார்.

    இப்படி எல்லோருமே நம்பிக்கையூட்டுகிற விதமாக சொல்லவே செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். பாலாஜி சார் அப்படியில்லாமல், அவரது அடுத்த படத்தில் எனக்கு பெரிய கேரக்டரே கொடுத்தார். "சவால்'' என்ற அந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடித்தேன். இப்போதுகூட மறக்க முடியாத கேரக்டர் அது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.
    Next Story
    ×