search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாக்யராஜ் படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார் ரோஜா!
    X

    பாக்யராஜ் படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார் ரோஜா!

    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.
    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.

    டைரக்டர் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை நாயகியாக்கி இயக்கிய படம் "பாரிஜாதம்.'' இந்தப் படத்தில் கதாநாயகன் பிருத்விராஜக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ரோஜா.

    இந்தப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, ரோஜாவை அதுவரை நாயகியாக மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தார்கள். தங்கள் இதயத்தில் `நாயகி'யாக குடிகொண்டிருக்கும் ரோஜா, அதற்குள் எப்படி அம்மாவாக நடிக்கலாம் என்று கோபப்பட்ட ரசிகர்கள் ஏராளம்.

    சிலர் கடிதங்கள் எழுதி திட்டினார்கள். சிலர் டெலிபோன் மூலம் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டினார்கள்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "எனக்கும் அம்மா கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லைதான். ஹீரோ பிரித்விராஜ×க்கு அம்மா என்பதும் எனக்குத் தெரியாது. செட்டில் பிரிதிவிராஜை பார்த்தபோதுதான் `திக்'கென்றது. ஆனாலும், டைரக்டர் பாக்யராஜ் கேட்டு "முடியாது'' என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. எனவே, அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டியதாயிற்று. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த அம்மா கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவது'' என்றார்.

    இந்த நட்பு பின்னணியில்தான் டைரக்டர் ராமநாராயணனின் "பாசக்கிளிகள்'' படத்தில் வில்லனின் மனைவியாக நடித்ததையும், விஜய் நடித்த "நெஞ்சினிலே'' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நேர்ந்ததையும் குறிப்பிட்டார்.

    ரோஜா அப்போது பிசியாக இருந்த நேரம். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவேண்டும் என்று கேட்டு வந்த "நெஞ்சினிலே'' பட வாய்ப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.

    தவிரவும், இந்தப் பாடல் முழுக்க ரோஜாவை புகழ்ந்து எழுதப்பட்டது. அதுவும் விஜய்யே பாடியிருந்தார். "தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா'' என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே ரோஜாவை நடனக் காட்சிக்கு உடனடியாக தயார் செய்து விட்டது.

    தமிழ்ப்படங்களில் ரோஜா ஜோடி சேராத ஹீரோ என்று பார்த்தால், அதில் கமல் மட்டுமே இருக்கிறார்.

    கமலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், சூழ்நிலை காரணமாக அதை ஏற்கவில்லை.

    ஒரு கட்டத்தில் படங்கள் குறையத் தொடங்கியதும் ரோஜா ஆந்திர அரசியலோடு தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அணியில் ரோஜா முன்னணியில் இருக்கிறார். மேடையில் பேச அழைத்தால் போகிறார். தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கேட்க வீடு வீடாகச் செல்கிறார். மக்களுடன் சரளமாக உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

    "குறுகிய காலத்தில், கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விட்டீர்கள். `நடிகை' என்ற தகுதிதான் இதற்குக் காரணமா?'' என்று கேட்டதற்கு ரோஜா கூறினார்:

    "ஒரு தனி மனிதர் கட்சியில் சேருகிறார். படிப்படியாக வளருகிறார். கட்சியில் அவர் எல்லோருக்கும் தெரிந்த முகமாகி, முக்கிய பொறுப்புக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 10 வருடமாகி விடுகிறது. என் போன்றவர்கள் சினிமா மூலம் ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தவர்களாகி விடுகிறோம். இதனால் கட்சி எங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. பொறுப்புக்களையும் தருகிறது.

    தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே என் மரியாதைக்குரியவர். என் திருமணம் திருப்பதியில் நடந்தபோது, அவர் ஆந்திர முதல்- மந்திரியாக இருந்தார். திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டதும், சந்தோஷமாய் சம்மதித்தார். வந்து வாழ்த்தினார்.''

    இப்படிச் சொல்லும் ரோஜா, கட்சியில் சேர்ந்த புதிதில் சிவபிரசாத் என்ற வேட்பாளர் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரம் செய்து வெற்றியும் ஈட்டித் தந்தார்.

    கடந்த பொதுத்தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர். அவர் குறைந்த ஓட்டில்தான் ஜெயிக்க முடிந்திருக்கிறது.

    `அரசியலில் வெற்றி -தோல்வி சகஜம். அரசியலை தேர்ந்தெடுத்த பிறகு எக்காலத்திலும் அதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை' என்பதை, தனது அரசியல் கொள்கையாகவே வைத்திருக்கிறார், ரோஜா.

    அரசியலில் ஈடுபட்டாலும் நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார். சமீபத்தில் "மேக சந்தேசம்'' தெலுங்கு சீரியலில் நடிக்க நடிகை ராதிகா அழைத்திருந்தார். 4 பெரிய பையன்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! மறுத்துவிட்டார், ரோஜா.

    "ரோஜா ரோஜாதான் என்று ரசிகர்கள் சொல்கிற மாதிரி கேரக்டர்கள் வரவேண்டும். முகத்தைக் காட்டிவிட்டுப் போகிற மாதிரியெல்லாம் நடிப்பது என்றால், அந்த வாய்ப்பு வேண்டவே வேண்டாம். பணத்தேவைக்காக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை''- இப்படி தெளிவுபடுத்தும் ரோஜாவுக்கு அம்சவதனி என்ற 4 வயது மகளும், கிருஷ்ணகவுசிக் என்ற ஒரு வயது மகனும் வாரிசுகள்.

    "பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "இப்படித்தான் வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் வாழ்க்கைக்கு சரி வராது. அவர்களின் ஆர்வம் எதுவோ, முன்னேற்றம் எதுவோ அதிலே அவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். பிள்ளைகளின் விஷயத்தில் எங்கள் ஆர்வத்தை திணிக்கிற பெற்றோராக நானும் செல்வாவும் ஒருபோதும் இருக்க மாட்டோம்'' என்றார், ரோஜா.
    Next Story
    ×