search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படுத்த படுக்கையில் இருந்த தன்ராஜ் மாஸ்டருக்கு இளையராஜா உதவி
    X

    படுத்த படுக்கையில் இருந்த தன்ராஜ் மாஸ்டருக்கு இளையராஜா உதவி

    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா.
    தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா. மாஸ்டருக்கு உடல் நலக்குறைவு என்று கேள்விப்பட்டதும், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து 3 நாட்கள் தங்கியிருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூகாம்பிகை மீது நான் பாடிய கன்னடப் பாடல்களை, சினிமாவில் எனக்கு இசையமைப்பாளர் அங்கீகாரம் கொடுத்த பஞ்சு அருணாசலம் சாரிடமும் போட்டுக்காட்ட விரும்பினேன்.

    அப்போதே இரவு 10-30 மணி ஆகியிருந்தது. இருந்தாலும் போனேன். பாடல்களைக் கேட்டவர் பிரமை பிடித்தவர் போலானார். "பக்திப்பாடல் இப்படிக்கூட ஜீவனை உலுக்குவதாக அமையுமா என்ன? இதுபோல பக்திப்பாடல் வருவது இதுதான் முதல் தடவை. இது முற்றிலும் உண்மையான தெய்வீக நிலையில் பாடிய பாடல்கள் என்றார்.

    அங்கேயே அண்ணி (பஞ்சு அருணாசலத்தின் மனைவி) இருவருக்குமாக டிபன் எடுத்துக்கொண்டு வந்து பரிமாறினார்கள். சாப்பிடத் துவங்கும்முன் அவரிடம், "அண்ணி! இந்தப் பாடல்களை கேட்டீர்களா?'' என்று கேட்டேன்.

    "அய்யோ! கேட்கும்போதே உடம்பெல்லாம் என்னவோ பண்ணுது'' என்றார்.

    நான் அவர்களிடம், "அண்ணி! அது யாருன்னு நினைச்சீங்க? அது என் அம்மா'' என்றேன். அதோடு நில்லாமல், "நான் கூப்பிட்டால் இப்ப இங்கே வருவாங்க'' என்று விரலை சொடுக்கினேன்.

    நான் விரலை சொடுக்கிய அந்த வினாடியில் அண்ணிக்கு ஆவேசம் வந்துவிட்டது. சத்தமாக "ஏய் நான்தாம்ப்பா அது'' என்று குரல் கொடுத்தார்கள்.

    அவர்கள் சத்தமாக `ஏய்' என்ற நொடியில் என் கைகள் தானாக கூப்பியது. கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது. உள்ளம் கரைந்து கசிந்தது. சிறிது நேரம் அப்படியே இருந்து மனம் சாந்தமானதும் வீட்டுக்குப் புறப்பட்டேன்.

    இந்தப் பாடல்களை வருடத்தின் முதல் நாள் அம்மாவின் சன்னதியில் ஒலிக்கச் செய்யவேண்டும் என்று விரும்பினேன். இதற்காக டிசம்பர் 31-ந்தேதி மூகாம்பிகை போய்விட்டேன். இரவு தங்கி காலை 4 மணிக்கு சவுபர்ணிகாவில் குளித்து, நிர்மால்ய சேவை பார்த்துவிட்டு காலை 6 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு டேப் ரிக்கார்டருடன் போனேன்.

    அங்கே தரிசனத்துக்கு நிற்கும் பகுதியையொட்டிய திண்ணையில் ஒரு பக்கத்தில் டேப் ரிக்கார்டரை வைத்து அந்த பாடலில் இரண்டு பாடல்களை போட்டேன். சிறிதளவே பக்தர்கள் இருந்த அந்த சூழ்நிலையில் மனம் ரம்மியமானது. உள்ளம் அன்னையிடம் ஏங்கியது. "அம்மா! இந்தப் பாடலை நீ ஏற்றுக்கொண்டாயா என்பதை எனக்குப் புரியுமாறு நீ தெரிவிக்க வேண்டும்'' என வேண்டிக்கொண்டேன்.

    இந்நிலையில் இரண்டாவது பாடல் முடிந்து `டேப்'பை `ஆப்' செய்தேன்.

    ஆனால் நான் பாடிய ஸ்ருதி மட்டும் என் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. இது எங்கிருந்து கேட்கிறது என்று யோசித்தேன். அப்போதுதான் கோவிலில் காலை 7 மணியை அறிவிக்கும் கோவில் மணியை அடிக்கிறார்கள்; அந்த ஓசை அடங்காது அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கிறது என்பது புரிந்தது.

    அடடா! அம்மா அல்லவா என் வேண்டுகோளுக்கு பதில் சொல்லி இருக்கிறாள். "பார்த்தாயா நீ பாடிய ஸ்ருதி என் கோவிலின் மணிச்சுருதியில் இருந்து இம்மிகூடப் பிசகாமல் அப்படியே பின்னிப் பிணைந்திருப்பதை!'' என்று எனக்கு உணர்த்துவதைப் போலிருந்தது.

    மெதுவாக கேட்ட அந்த கோவில் மணி ஓசையின் ஸ்ருதியை என் பாடலுடன் இணைத்துப் பார்த்தேன். ஆச்சரியம். எள்ளளவும் பிசகாத அதே

    ஸ்ருதி.அம்மாவின் கருணையை எண்ணி ஆனந்தமானேன்.''

    இவ்வாறு கூறினார், இளையராஜா.

    தனது இசை குரு தன்ராஜ் மாஸ்டருக்கு சேவை செய்த அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தன்ராஜ் மாஸ்டருக்கு உடல் நிலை சரியாக இல்லை என்ற செய்தி வந்தது. நானும் `வயலின்' கல்யாணமும் போனோம். அவர் உட்கார பயன்படுத்தும் ஈஸி சேரில் எழுந்திருக்க முடியாத நிலையில் படுத்திருந்தார். அதிலேயே `பாத்ரூம்' வேறு போயிருந்தார். கைத்தாங்கலாக பிடித்து அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்தோம்.

    நோய் உபாதையிலும் இசைக்குள் ஆழ்ந்துபோன அவரது குணநலன் வெளிப்பட்டது. அவரைத் தூக்கும்போது `மெதுவாக மெதுவாக' என்பதற்கு பதில் `அன்டான்டே அன்டான்டே' என்றார். இது, "இசையில் மெதுவாக வாசிக்கவும்'' என்பதை குறிக்கும் இத்தாலிய மொழிச்சொல்.

    இசையை மட்டுமே அறிந்த அவர், உடல் செயலிழந்து போனாலும், உயிரில் கலந்து போன இசையைக்கொண்டே தனது தேவையை சொன்னபோது நெகிழ்ந்து போனேன்.

    அவரை பெஞ்சில் படுக்க வைத்து ஈஸி சேரை சுத்தம் செய்து காயப்போட்டோம். ரூமில் இருந்த பேனை வேகமாக ஓடவிட்டோம். காலை அமுக்கிவிடச் சொன்ன வார்த்தைகள் முனகல் போல கேட்டது. கண்களை மூடியபடியே படுத்திருந்தார்.

    வலது காலை நானும், இடது காலை கல்யாணமும் ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து அமுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். விரல்களை பிடித்து விடுமாறு சொன்னார். பெருவிரலை பிடித்தேன். `அன்டாண்டே' என்றார். மெதுவாக பிடித்து விடவேண்டுமாம்!

    அப்படியே அடுத்த விரல்களை பிடித்து விட்டேன். "டேய் இ ஸ்ட்ரிங்' என்றார். "சார்'' என்றேன். அவர் சொல்ல வருவதை முழுமையாக புரிந்து கொள்ளும் நோக்கில்.

    "கிட்டாரில் ஓப்பன் ஸ்ட்ரிங் எது?'' என்று கேட்டார்.

    "இ ஸ்ட்ரிங் சார்'' என்றேன்.

    "ம்... அதை பிடித்துவிடு'' என்றார்.

    அவரது, கால் பெருவிரல்தான் கிட்டாரின் கீழ் ஸ்தாயி கணக்கில் `இ ஸ்ட்ரிங்'காம். இந்த வகையில் சுண்டு விரல் முதல் ஸ்ட்ரிங்காம். விரல்கள் எல்லாமே கிட்டார் வாத்தியத்தின் தந்திகள் ஆகிவிட்டன!

    உலகத்தின் எந்த இசை மேதை வாழ்விலும் இப்படியொரு சம்பவத்தை நான் அறிந்ததில்லை.

    நாங்கள் அங்கிருந்த நேரத்தில் சாயி லாட்ஜ் முதலாளி, மாஸ்டரை பார்க்க வந்திருந்தார். அவர் எங்களிடம், "நீங்கள் இவரை அவசியம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச்செல்ல வேண்டும். இது சாதாரணமாக வரும் தேக அசவுகர்யம் இல்லை. அதிகமாக குடித்ததால் சேரியில் எங்கேயோ விழுந்து கிடந்திருக்கிறார். சேரி ஆட்கள் தூக்கி வந்து வீட்டில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள். காலில் அடிபட்டிருக்கிறது. கைகளைப் பாருங்கள், சிராய்ப்பு எப்படி இருக்கிறது? ஆஸ்பத்திரிக்குப் போனால்தான் "ஈரல்'' ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்'' என்றார். தொடர்ந்து அவரே, "உடனடியாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள்'' என்றும் யோசனை சொன்னார்.

    நாங்களும் தாமதிக்கவில்லை. ஒரு டாக்சியை வரவழைத்தோம். ரூமில் இருந்து அவரை தூக்கி குறுகலான படிகள் வழியாக இறக்கி, டாக்சியில் ஏற்றுவதற்குள்ளாகவே சிரமப்பட்டுப் போனோம்.

    மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு நானும் கல்யாணும் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் உடனிருந்து மாஸ்டரை

    கவனித்துக்கொண்டோம்.மறுபடியும் அவரை சாயி லாட்ஜ் 13-ம் நம்பர் அறையில் கொண்டு போய் சேர்த்தோம்.

    உடல் நலிவு சரியாகிவிட்டது. ஆனால் சோர்வாக இருந்தார். ஆனால் இன்னும் அன்டாண்டே, அடாஜியோ போன்ற இத்தாலிய இசைக் குறிப்பு வார்த்தைகள் அவரிடம் இருந்து வந்து கொண்டிருந்தன.

    அன்டாண்டே என்றால் `மெதுவாக' என்று சொல்லிவிட்டேன். அடாஜியோ என்றால் என்னவென்று தெரிய வேண்டுமல்லவா, அதற்கு `இன்னும் மெதுவாக' என்று அர்த்தம்.

    கொஞ்சம் அவர் பழைய நிலைக்கு திரும்பும்வரை சாயி லாட்ஜில் இருந்து விட்டு, டாக்டர் கொடுத்த மருந்துகளை எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும் என்று விளக்கி சொல்லிவிட்டு விடை பெற்றோம். சாயி லாட்ஜ் மானேஜரிடமும் கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    குரு பக்தி ஒருபுறம் இப்படி என்றால், `அம்மா' மூகாம்பிகை மீதான பக்தி இன்னொரு புறம் ஆழமாக போய்க்கொண்டிருந்தது. அம்மா மீதான பக்தி மேலீடு அதிகரித்த பிறகு தனது இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டார், இளையராஜா.

    அதுபற்றி கூறுகிறார்:-

    "அம்மா மீதான என் ஈடுபாடு அதிகரித்த பிறகு திரை வாழ்விலான என் போக்கிலும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன் யாரிடமும் உற்சாகமாக உரையாடுவது, நகைச்சுவை விஷயங்களை சிலாகித்து மகிழ்வது என்றிருந்த என் போக்கு அடியோடு மாறிற்று. நடை, உடை, பாவனைகளில் கூட மாறுதல் தெரிந்தது.

    கதை சொல்ல டைரக்டர் என்று யார் வந்தாலும், கதையுடன் `பாடல் சிச்சுவேஷன்' கேட்பதோடு சரி. பேச்சுவார்த்தை முடிந்து

    போகும்.அம்மா பக்தியில் என் ஆன்ம பலம் கூடியிருந்த போதிலும், திரை வாழ்க்கையில் என் வேலையிலும் கவனமாகவே இருந்தேன். கவிக்குயிலை தொடர்ந்து, அவர் எனக்கே சொந்தம், உறவாடும் நெஞ்சம், பத்ரகாளி என படங்கள் தொடர்ந்தன. ஒவ்வொன்றிலும் புதிதாக செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று தேடிக்கொண்டிருப்பேன்.

    கவிக்குயில் படத்தில் `சின்னக்கண்ணன் அழைக்கிறான்' பாடல் இருந்தாலும், "காதல் ஓவியம் கண்டேன்'' என்றொரு பாடலை படத்தின் பிற்பகுதியில் சேர்க்க பஞ்சு சார் விரும்பினார். இந்தப் பாடலை சுஜாதா என்ற 10 வயது சிறுமியைக்கொண்டு பாட வைத்தோம். குழந்தைதானே தவிர, குரல் என்னவோ பி.சுசிலா, எஸ்.ஜானகி போல பெரியவர்களின் தரத்தை ஒத்திருந்தது.

    இந்தப் பாடலில்தான் முதன் முதலாக இசை மேதை `பாக்'கின் காலத்திய இசையைப்போல கொடுத்து, அதன் மேல் நம் நாட்டு இசையான `வீணை'யை வாசிக்க வைத்து பாடலை பதிவு செய்திருந்தேன். சினிமா இசையில் இரு வேறு பாணி இசைகள் ஒன்றாக கலந்தது அதுவே முதல் முறை. அது நன்றாகவும் அமைந்ததில் வெற்றி கிடைத்தது.

    ஆனால், இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே வினியோகஸ்தர்கள் சிலர் கேட்டுவிட்டு, "படத்தில் இந்தப்பாடல் வரும்போது, ரசிகர்கள் புகை பிடிக்க வெளியே போய் விடுவார்கள்'' என்று கமெண்ட் அடித்தார்கள்.

    அதோடு நின்று விடாமல் "அவர்கள் புகை பிடிப்பதற்காக நாம் ஏன் பாடல் போடவேண்டும்?'' என்று படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு சாரிடமும் கேட்டுவிட்டார்கள்.

    இது விஷயம் என் காதுக்கு வந்தபோது நொந்து போனேன். புதிய விஷயம் ஒன்று கிடைத்துவிட்டது என்று நான் உற்சாகமாக பணிபுரிந்த நேரத்தில், மட்டமான அவர்கள் பேச்சு என் இதயத்தில் குத்துவது போல் இருந்தது.

    Next Story
    ×