search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா திருமணம் சிறப்பாக நடந்தது
    X

    இளையராஜா திருமணம் சிறப்பாக நடந்தது

    இளையராஜா - ஜீவா திருமணம், சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக, அதே சமயம் எளிமையாக நடந்தது.
    இளையராஜா - ஜீவா திருமணம், சொந்த ஊரில் சீரும் சிறப்புமாக, அதே சமயம் எளிமையாக நடந்தது.

    திருமணம், தன் இசை வாழ்வுக்கு இடைïறாக இருக்கும் என்று கருதி, நீண்ட காலமாக திருமணத்தைத் தள்ளிப்போட்டு வந்த இளையராஜா, முடிவில் தாயாரின் விருப்பத்தை தட்ட முடியாமல் திருமணத்துக்கு சம்மதித்தார்.

    திருமணநாளை நினைவு கூர்கிறார், இளையராஜா:

    நாதசுரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் தெருமுனையில் இருந்து தொடங்கி, வீடு வரை வந்தது. மாப்பிள்ளை (அதாவது நான்) சிறுவயதில் விளையாடிய தெருவில், கழுத்தில் மாலையுடன் வந்தார்!

    இரண்டு நாற்காலிகளைப் போட்டு, பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்காரச் சொன்னார்கள். அதன்படி அவர்களும் உட்கார்ந்தார்கள்.

    அம்மா, அண்ணன், மதனி, அவர்கள் குழந்தைகள், அத்தான், அக்கா, மனைவியின் தம்பிகள், பாஸ்கர், அவர் மனைவி சுசீலா, தம்பி அமர், அவன் நண்பன் ராஜேந்திரன் ஆகியோர் சூழ்ந்து நின்றார்கள்.

    மற்றும் என் நண்பர் என்ஜினீயர் எம்.சுப்பிரமணி, தேவாரம் ராமராஜ், கோம்பை நண்பர்கள், பள்ளித்தோழன் மைத்துனன் ஜெயகரன், அவனுடைய குடும்பத்தார் குழுமியிருந்தார்கள்.

    முகூர்த்த நேரம் நெருங்கியது. "...ம்... தாலியைக் கொண்டு வாங்கப்பா!'' என்று ஒருவர் குரல் கொடுக்க, ஒரு தட்டில் தாலி வந்தது. அதைப் பெரியவர்கள் தொட்டு ஆசி வழங்க, "தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுங்கப்பா'' என்று ஒரு குரல் கேட்டது.

    தாலியை என் கையில் கொடுத்தார்கள். "கெட்டி மேளம்... கெட்டி மேளம்'' என்று யாரோ முழங்க, கெட்டி மேளம் முழங்கியது. தாலியைக் கட்டினேன். பின்னால் நின்றிருந்த சுப்பிரமணியனின் மனைவி, ராமராஜின் மனைவி, மற்ற பெண்கள், தாலியின் மற்ற முடிச்சுகளைப் போட்டார்கள். பூ தூவினார்கள்.

    "மாலை மாற்றிக் கொள்ளுங்கள்'' என்று சொல்ல, மாலை மாற்றிக்கொண்டோம்.

    பிறகு ஊர்ப் பெரியவர்கள் பேசினார்கள். வழக்கம் போலவே, "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது'' - என்று அவர்கள் கூறியபோது, நான், பாஸ்கர், தோழன் ஜெயகரன், சுப்பிரமணியன், ராமராஜ் எல்லோரும் சிரித்து விட்டோம். ஏனென்றால், நாங்கள் போகும் கல்யாண வீடுகளில் எல்லாம், இதையேதான் பேச்சாளர்கள் பேசுவார்கள். அதுபற்றி கிண்டல் செய்வோம்.

    அதே அனுபவம் எனக்கும் நேரிட்டதால், எங்களை அறியாமல் சிரிப்பு வந்தது.

    மாலையில், மதுரையில் இருந்து வந்த இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரி நடந்தது.

    அன்றைக்கே சாந்தி முகூர்த்தம்!

    ஆம்; முதல் இரவு.

    முதல் இரவு, முதல் இரவுதான்!

    மறுநாள், சென்னையில் இருந்து நாங்கள் வந்திருந்த டாக்சியில், குடும்பத்தாருடன் சுருளிதீர்த்தம் சென்று நீராடிவிட்டு வந்தோம்.

    மாலையே சென்னை திரும்புவதாக இருந்தது.

    எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு, அண்ணன் பாவலரிடமும் விடைபெற்றுக்கொண்டு, மாலை 6 மணிக்கு பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டோம். மறுநாள் காலை 6 மணி அளவில், சென்னைக்கு வந்து சேர்ந்து, வீட்டை அடைந்தோம்.

    காலையில் குளித்து, டிபன் சாப்பிட்டு விட்டு, ஜி.கே.வெங்கடேஷ் அவர்களின் வீட்டுக்குச் சென்று, ஜி.கே.வி. அண்ணன், அண்ணி, ஆகியோரின் காலில் விழுந்து ஆசி பெற்றோம். திரும்பும் வழியில் சாயி லாட்ஜ் சென்று தன்ராஜ் மாஸ்டர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம்.

    அம்மாவுக்கு சமையல் பாரம் குறைந்தது. அண்ணியும், ஜீவாவும் அதை பார்த்துக்கொண்டார்கள்.

    அடுத்த நாள் முதல் என் வழக்கமான பணிகள் தொடங்கின. கர்நாடக சங்கீதம், ஜோசப்பிடம் மேற்கத்திய இசை பாடம் ஆகியவற்றை கற்பது தொடர்ந்தது.

    காலையில் நான் குளிப்பதற்கு வெந்நீர் கலந்து வைக்குமாறு ஜீவாவிடம் அம்மா கூறினார்கள்.

    அதன்படி வெந்நீர் வைத்தாள். நான் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றிக்கொண்டதும், "போ! போய் முதுகு தேய்த்து விடு!'' என்று ஜீவாவிடம் அம்மா கூறினார்கள்.

    இந்த மாதிரி காட்சிகளை கிராமங்களிலும், சிறு ஊர்களிலும் நான் கண்டிருக்கிறேன். ஆனால் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

    "வேண்டாம்'' என்று சொன்னேன்.

    அம்மா, "பரவாயில்லை. தேய்த்து விடு'' என்று சொன்னார்கள்.

    ஜீவா ஒரு சொம்பு வெந்நீர் ஊற்றி முதுகு தேய்த்து விட்டாள்.

    மேற்கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அம்மாவோ, ஜீவாவோ இதுபற்றி என்ன நினைப்பார்கள் என்று நான்

    எண்ணிப்பார்க்கவில்லை.''மேற்கண்டவாறு இளையராஜா குறிப்பிட்டார்.

    கங்கை அமரன் திருமணம்

    இளையராஜாவின் திருமணத்துக்குப்பின், அவர் தம்பி கங்கை அமரன் திருமணம் நடந்தது.

    மணமகள் பெயர் கலா. தந்தை எஸ்.எஸ்.பி.லிங்கம், பேரறிஞர் அண்ணாவின் நெருங்கிய நண்பர்.

    கங்கை அமரன் - கலா திருமணம் மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் சிறப்பாக நடந்தது. வரவேற்பு, உட்லண்ட்ஸ் ஓட்டலில்

    நடந்தது.வரவேற்புக்கு அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி, மற்ற அமைச்சர்கள், பிரமுகர்கள் வந்திருந்து

    வாழ்த்தினார்கள்.
    Next Story
    ×