search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இசை அமைப்பு நுட்பங்கள் இளையராஜாவின் திறமை: ஜி.கே.வெங்கடேஷ் வியப்பு
    X

    இசை அமைப்பு நுட்பங்கள் இளையராஜாவின் திறமை: ஜி.கே.வெங்கடேஷ் வியப்பு

    இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.
    இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.

    பல்வேறு வாத்தியங்களை இசைக்க, தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா பயிற்சி பெற்று வந்த காலக்கட்டம் அது.

    அப்போது நடந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷிடம் இருந்து ஒருவர் வந்தார். இசை `கம்போஸ்' செய்ய என்னை அழைத்து வருமாறு ஜி.கே.வி. கூறியிருப்பதாக, அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கூறினார்.

    மாஸ்டர் என்னைப் பார்த்து, "கோடம்பாக்கம் போறியா?'' என்று கேட்டார்.

    "நீங்க போகச்சொன்னா போகிறேன் சார்!'' என்றேன்.

    "அங்கே போனா, மிïசிக் போயிடும். உருப்பட மாட்டானுங்க!'' என்று கூறிய மாஸ்டர் "உன்னை அப்படி நினைக்கவில்லை. போய் வா!'' என்றார்.

    அவர் முழு மனதுடன் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். "பாடல் பதிவு நடந்த அன்றைக்கு, என்னை மிïசிக் டைரக்டர் என்று ஜி.கே.வி.க்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். அதனால்தான் என்னை அவர் அழைத்திருக்கிறார்'' என்றேன்.

    "சரி, போயிட்டு வா!'' என்றார், மாஸ்டர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு படக்கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே ஜி.கே.வெங்கடேஷ், `தபேலா' கன்னையா, தயாரிப்பாளரும் டைரக்டருமான பகவான்துரை ஆகியோர் இருந்தனர்.

    ஆபீஸ் நடுவில், ஒரு ஜமுக்காளத்தில் ஹார்மோனியம், தபேலாவுடன் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ராஜ்குமார் நடிக்கும் "கோவாவில் சி.ஐ.டி. 999'' என்ற கன்னடப்படத்தில் வரும் பாடலுக்கான காட்சியை டைரக்டர் விவரித்தார்.

    "ட்ïனை கம்போஸ் செய்து வையுங்கள். எங்களுக்கு வேலை இருக்கிறது. மாலையில் வந்து டிïனை கேட்கிறோம்'' என்று கூறிவிட்டு டைரக்டர் போய்விட்டார்.

    பாடலை ஜி.கே.வெங்கடேஷ் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, "ஸ்வரத்தை நோட்ஸ் எழுதிக்கோ!'' என்று என்னிடம் கூறினார்.

    "ஸ்வரம் எல்லாம் எனக்குத் தெரியாது சார்!'' என்றேன்.

    "பின்னே எப்படி ஆர்மோனியம் வாசிச்சே?'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அதெல்லாம் மனப்பாடம் செஞ்சது'' என்றேன்.

    "காதடியா?'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    (ஸ்வரம் தெரியாமல், காதில் கேட்பதை வைத்து வாசித்தால், அதற்குப் பெயர் "காதடி'')

    "இப்படியெல்லாம் வாத்தியம் இல்லாமல் நீ வரவேண்டாம். மாஸ்டர் ரூமில் இருந்து கிட்டார் எடுத்து வா!'' என்று ஜி.கே.வி. கூறினார்.

    கிட்டார் வாசித்து ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் பழக்கம் இருந்ததால், மதியம் மாஸ்டர் ரூமில் இருந்த கிட்டார்களில் ஒன்றை, மாஸ்டரிடம் கேட்டு வாங்கி வந்தேன். ஜி.கே.வி. முன் போய் நின்றேன்.

    "டேய்! நீ ஸ்வரம் எல்லாம் எழுதவில்லை என்றால், நான் கம்போஸ் பண்ணினதை நீ எப்படி திரும்ப எனக்குச் சொல்ல முடியும்?'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    "சார்! எனக்கு ட்ïனை இரண்டு தடவை கேட்டா மனப்பாடம் ஆயிடும். அப்படியே திரும்பச் சொல்லிடுவேன்!'' என்றேன்.

    "அதெல்லாம் சரிப்படாது!'' என்று கூறிய ஜி.கே.வி., பிறகு "சரி. பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, ட்ïன்களை கம்போஸ் செய்யத் தொடங்கினார். கிடுகிடுவென்று, பத்து ட்ïன்களை கம்போஸ் செய்து விட்டார்.

    அதற்குள் டைரக்டர் பகவான்துரை வந்துவிட்டார். "வெங்கடேஷ்! ட்ïன்களைப் போடுங்கள், கேட்போம்!'' என்றார்.

    "முதல் ட்ïன் எது?'' என்று என்னிடம் கேட்டார், ஜி.கே.வி.

    நான் பாடினேன். உடனே அதை ஞாபகப்படுத்திக்கொண்டு ஜி.கே.வி. பாடிக்காட்டினார்.

    "இரண்டாவது ட்ïன்?'' என்று ஜி.கே.வி. கேட்க, அதைப் பாடினேன்.

    இப்படியே மூன்றாவது, நான்காவது என்று, பத்து ட்ïன்களையும் நான் ஞாபகத்தைக்கொண்டே பாடிக்காட்டினேன். ஜி.கே.வி.க்கு ஒரே ஆச்சரியம்! தபேலா கன்னையாவைப் பார்த்து, "என்னடா இவன்!'' என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "நீ என்ன, டேப் ரிக்கார்டரா?'' என்று கேட்டார்.

    சிறிய டேப் ரிக்கார்டர் வராத காலம் அது.

    ஜி.கே.வி. ஆச்சரியம் தீராதவராக பகவான் துரையைப் பார்த்து, "துரை! இந்தப் பையனைப் பாருங்க!'' என்றார்.

    "ஆமாம், ஆமாம். ஆச்சரியமாகத்தான் இருக்கு!'' என்றார், பகவான் துரை.

    அவர் கன்னடக்காரராக இருந்தாலும் தெளிவாகத் தமிழில் பேசினார்.

    "வெங்கடேஷ்! இது நம் படத்தில் நீச்சல் குளத்தில் ஒரு பெண் நீச்சல் உடையில் பாடுகிற பாட்டு! நீங்கள் மூன்றாவதாக போட்டிருக்கும் ட்ïன் ரொம்ப நல்லா இருக்கு...'' என்று பகவான் துரை கூற, "அப்ப, அதையே வச்சுக்கலாம்'' என்றார், ஜி.கே.வெங்கடேஷ்.

    பிறகு அவர் என்னிடம், "நீ இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காதே. நீதான் இந்தப் பாடலுக்கு உரிய ஸ்வரங்களை வாத்தியம் வாசிப்பவர்களுக்கு சொல்லணும்'' என்றார்.

    அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. `இங்கேதான் ட்ïன் தொடங்குகிறது. இதுதான் ஸட்ஜமாக இருக்க வேண்டும். இதுதான் ரி...க...ம...ப...த..நி... என்று, ஒவ்வொரு ஸ்வரமாகத் தேடிக் கண்டுபிடித்து, அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தேன்.

    எல்லாம் சரியாக இருந்தது.

    பிறகு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, கோல்டன் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் நடந்தது.''

    இவ் வாறு இளையராஜா கூறினார்.
    Next Story
    ×