search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இசை நிகழ்ச்சியில் இளையராஜா போட்ட மாறுவேடம்
    X

    இசை நிகழ்ச்சியில் இளையராஜா போட்ட மாறுவேடம்

    இசை நிகழ்ச்சிக்கு பாவலர் வரதராஜன் வராமல் போனதால், வரதராஜனாக பாஸ்கரும், பாஸ்கராக இளையராஜாவும் நடிக்க நேரிட்டது.
    இசை நிகழ்ச்சிக்கு பாவலர் வரதராஜன் வராமல் போனதால், வரதராஜனாக பாஸ்கரும், பாஸ்கராக இளையராஜாவும் நடிக்க
    நேரிட்டது.இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "மேடையில் கடைசியாகப் பேசிய கம்ïனிஸ்ட்டு கட்சித் தோழர், தனது முடிவுரையில் பாவலரை பற்றி ஒரு அறிமுக உரையாற்றினார். அப்போதைக்கப்போது மக்கள் கைதட்டினார்கள். `இப்படியாகப்பட்ட பாவலர் சகோதரர்களின் இசை இப்போது தொடங்கும்' என்று அறிவித்தார்.

    எத்தனை சாமர்த்தியம் பாருங்கள்! இவர்தான் பாவலர் என்று அறிமுகப்படுத்தாமல் `பாவலர் சகோதரர்கள்' என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார். கச்சேரியின்போதோ, முடிந்த பிறகோ `எப்படி நீங்கள் பாஸ்கரை பாவலர் என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றலாம்?' என்று யாரும் கேள்வி கேட்க முடியாதல்லவா!

    பாஸ்கர் துண்டோடு மேடையேறினார். மேடையில் ஏற போடப்பட்டிருந்த மரப்படிகளில் கால் வைக்கும்போது கால் இடறியது. நல்ல வேளையாகக் கீழே விழாமல் மேலே ஏறிவிட்டார்.

    அவரைத் தொடர்ந்து நான் ஏறினேன்.

    டைட்டில் மிïசிக் முடிந்தது. செங்கொடிப் பாடல் முடிந்தது. அடுத்து `வணக்கம்' பாடலைத் தொடங்கினோம்.

    `வணக்கம்' பாடலில் குறைந்தது நாலு இடங்களிலாவது எல்லா ஊரிலும் கைதட்டல் கிடைக்கும். அன்றைக்கோ, இதோ இப்போது கிடைக்கும், இல்லை இப்போது கிடைக்கும் என்று முழுப்பாடலும் முடியும்வரை எதிர்பார்த்தோம்.

    ஊஹும். ஒரு இடத்தில்கூட கைதட்டல் கிடைக்கவில்லை.

    அப்போதே நன்றாக ஊதிவைத்த பலூனில் `புஷ்' என்று காற்றுப்போனது போலாயிற்று.

    பாவலர் போல பேச பாஸ்கர் ஆயத்தமானார். பாஸ்கர் போல பேச நான் தயாரானேன்.

    பாவலர் மாதிரி பாஸ்கர் பேசத்தொடங்கினார்.

    சிவாஜியின் வசனத்தை ஆயிரம் நடிகர்கள், பத்தாயிரம் ரசிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனங்களை எப்படி ஏற்றி இறக்கிப் பேசுவார் என்பது எல்லாருக்கும் அத்துப்படி.

    ஆனால் அவர் மாதிரி நமக்கும் வரும் என்று பேசிப் பார்க்கும்போதுதான், அடடா! இது அல்ல அது. அவர் பேசுவது வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு' என்பது புரியும்.

    பாவலர் பேசியதையெல்லாம் பாஸ்கர் பேசினார். பாஸ்கர் பேசியதை நான் பேசினேன்.

    இருந்தாலும் இருவருக்கும் `ஏதோ ஒன்று' குறைந்திருப்பது புரிகிறது. நூற்றுக்கு நூறு தெரியும் என்ற நம்பிக்கையோடு தொடங்க, பூஜ்யம் அளவு கூட அது இல்லை என்பது தெரிய வந்ததும், அந்த இரண்டு மணி நேரக் கச்சேரி ஒரு ஜென்மம் முழுக்க நீண்டு போவதைப் போலிருந்தது.

    அண்ணனுடன் பாஸ்கர் பேசும்போது இடையிடையே ஏதாவது `காமெடி' பண்ணி மக்களை சிரிக்க வைத்து விடுவார்.

    நானும் பாஸ்கர் மாதிரி கைதட்டல் வாங்கி விடுவேன் என்று நம்பி, அதையே செய்தால், எனக்கு வரவேயில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் அது காமெடியாகவும் இல்லை; வேறு விதமாகவும் இல்லை.

    உதாரணத்துக்கு மேடையில் அண்ணன் பாவலர் ஏதோ சொல்ல, "ஆமாண்ணே'' என்று சொல்லி விட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் சோடாவை எடுத்து `மடக்... மடக்' என்று குடிப்பார் பாஸ்கர். மக்கள் சிரிப்பார்கள்.

    இந்தப் பாணி எனக்கு வரவில்லை. கைதட்டும் கிடைக்கவில்லை. அதனால் சோடாவும் உள்ளே போக மறுத்து `தும்மலை'

    வரவைத்துவிட்டது.இதெல்லாம் எனக்குத்தான் காமெடியாக இருந்ததே தவிர, ஜனங்கள் கண்டுகொள்ளவில்லை.

    ஊருக்குள் நுழையும்போது, உற்சாகமாக `பாவலர் வாழ்க' என்று கோஷம் போட்ட இந்த ஜனங்களுக்கு என்னதான் ஆயிற்று?

    இப்போது எனக்கு புரியத்தொடங்கியது. இயல்பான தன்மை குறையும்போது, அது உள்ளங்களைத் தொடுவதும் இல்லை; கவருவதும் இல்லை.

    கைதட்டல் இல்லாமலே அன்றைய கச்சேரி முடிந்தது. இன்னும் 6 நாட்கள் இதே போல் இருந்தால் என்னாவது? அண்ணன் வந்துவிடமாட்டார்களா என மனசு ஏங்கியது.

    இப்படியே மூன்று நாட்கள் நாங்கள் கச்சேரி முடித்தோம். நாலாம் நாள் ஒருவழியாக அண்ணன் வந்துவிட்டார். `அப்பாடா' என்று உயிர்

    வந்தது.ஆனால் இன்னுë என் ஆர்மோனியப் பெட்டி வரவில்லையே? உயிர் வந்ததும், வராத மாதிரியல்லவா இருக்கிறது?

    இன்னொரு ஆர்மோனியத்தை அதிக விலை கொடுத்துக்கூட வாங்கி விடலாம். ஆனால் அதெல்லாம் அந்த ஆர்மோனியம் போல வருமா?

    அடுத்த மூன்று நாட்கள் கச்சேரியையும் அண்ணனுடன் முடித்துவிட்டு மதுரை வந்து கட்சி ஆபீசுக்கு சென்றால், என் `உயிர்' அங்கே இருந்தது. நான் ரெயிலில் தவறவிட்ட அதே என் ஆர்மோனியம்.

    போன உயிர் திரும்ப வந்தது போல் எனக்குள் அப்படியொரு சந்தோஷம்!

    மதுரையில் இந்தப் பெட்டியை வாங்கிக்கொள்ள வந்த வெள்ளைக்காரர், அது தன்னுடையது இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் இந்தப்பெட்டி யாருடையது என்று தெரிந்து கொள்வதற்காக பெட்டியை உடைத்திருக்கிறார்கள். ஆர்மோனியத்தின் மேல் மூடியில் அரிவாள் சுத்தியல் படத்துடன் பாவலர் வரதராஜன் என்றும் எழுதியிருந்ததைப் பார்த்து நேராக கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் கொண்டு சேர்த்து விட்டார்கள்.

    நான் ஆர்மோனியப் பெட்டியைப் பார்த்தேன். "என்னடா பசங்களா? நான் இல்லாம கச்சேரியா பண்ணிட்டு வர்றீங்க?'' என்று கேட்பது போல் இருந்தது.

    ஆர்மோனியப் பெட்டியின் பூட்டை உடைத்திருந்தார்கள். பரவாயில்லை. வேறு பூட்டு கிடைக்கும்.

    ஆனால் அது தொலைந்ததால் உடைந்து போன என் மனம், இப்போது உடைந்த அடையாளமே தெரியாமல் நன்றாகிவிட்டதே!

    தொடர்ந்து கச்சேரிகள், கலகலப்பு என்று போய்க்கொண்டிருந்த இந்த மாதிரியான ஒரு நாளில் பாரதிக்கு நாடக ஆர்வம் இருப்பதை அண்ணன் தெரிந்து கொண்டு விசாரித்திருக்கிறார். பாரதியுடன் நாங்களும் நாடகம் போட்டதை தெரிந்து கொண்டவர், மதுரையில் நடந்த கம்ïனிஸ்டு கட்சி மாநாட்டில் நாடகம் நடத்த பாரதிக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து கிடைத்த நாடக அனுபவங்கள் பாரதிக்கு புது உத்வேகம் கொடுத்தது உண்மை.
    Next Story
    ×