search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படிப்பைத் தொடர வேலைக்குப் போன இளையராஜா
    X

    படிப்பைத் தொடர வேலைக்குப் போன இளையராஜா

    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

    எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.

    ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.

    எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.

    இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.

    அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

    இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''

    - இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.

    அதுபற்றி அவரே கூறுகிறார்:

    "ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்

    நடக்கவில்லை.பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.

    இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.

    அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

    அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.

    அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.

    என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.

    வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

    அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.

    பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.

    ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.

    ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.

    ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.

    இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

    ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?

    சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.

    இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.

    Next Story
    ×