search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    படப்பிடிப்பின்போது மூண்ட கலவரம்: திறமையாக தீர்வு கண்டார் விஜயகுமார்
    X

    படப்பிடிப்பின்போது மூண்ட கலவரம்: திறமையாக தீர்வு கண்டார் விஜயகுமார்

    "முதல்வன்'' படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
    "முதல்வன்'' படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.

    டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.

    எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.

    எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-

    "டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார்.

    டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.

    புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.

    முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.

    அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.

    சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால்  அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.

    இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

    சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.

    விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.

    ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.

    ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.

    ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.

    ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.

    இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.

    இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.

    ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.

    எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.

    பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.

    ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.

    மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.

    அர்ஜீனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.

    டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.

    இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    Next Story
    ×