search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜயகுமார் முதலமைச்சர்களுடன் பழகிய அனுபவங்கள்
    X

    விஜயகுமார் முதலமைச்சர்களுடன் பழகிய அனுபவங்கள்

    பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என 5 முதல்வர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவர், நடிகர் விஜயகுமார்.
    பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என 5 முதல்வர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றவர், நடிகர் விஜயகுமார்.

    காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் சென்னையில் நாடகங்களில் நடித்து வந்த விஜயகுமார் அவரை சந்தித்து அவரது அன்பை பெற்றார்.

    அதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்போது சிவாஜி மன்றத்தில் செயலாளர் பொறுப்பில் இருந்த பல்ராம் எனது நண்பர். எனவே நாடகத்தில் நடித்தபடி சினிமா வாய்ப்புக்காக முயன்று கொண்டிருந்த அந்த நாட்களில் பல்ராமுடன் சேர்ந்து சென்னை திருமலைப்பிள்ளை ரோட்டில் உள்ள பெருந்தலைவர் வீட்டுக்குப்போவது வழக்கம். தன்னை சந்திக்க வருபவர்களை அவர் சந்திப்பதே தனி அழகு. "வாங்க! என்ன விஷயம்ண்ணேன்?'' என்பார். வந்தவர்கள் கேட்கும் கோரிக்கையில் நியாயம் இருந்தால் உடனே "இதுபற்றி அதிகாரிகளிடம் பேசுகிறேன்'' என்பார். முகஸ்துதியை அறவே விரும்பாதவர். யாராவது வந்த விஷயத்தை விட்டு விட்டு, புகழாரத்தை தொடங்கினால் "விஷயத்துக்கு வாங்கண்ணேன்'' என்று கூறி விடுவார்.

    ஒருமுறை தென்மாவட்ட ஊரில் இருந்து வந்த ஒருவர் பெருந்தலைவரிடம், "நீங்கள் எங்கள் இல்லத் திருமணத்துக்கு வந்தாக வேண்டும்'' என்று அடம் பிடித்தார். பெருந்தலைவர் சொல்லிப் பார்த்தார். வந்தவர் கேட்பதாக இல்லை. தலைவருக்கு அப்போது கோபம் வந்துவிட்டது. "ஒரு முதல்-அமைச்சருக்கு வேறு வேலையே இல்லைன்னு நினைச்சீராங்காணும்?'' என்று ஒரு போடு போட்டார். வந்தவர் ஓடியே போய்விட்டார். அவர் போன பிறகு எங்களிடம், "உண்மையை சொல்லணும்ணேன். வரேன்னு சொல்லிட்டுத்தான் போகாம இருந்துடக் கூடாதுண்ணேன்'' என்றார்.

    அந்த நேரத்தில் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை நேருவிடம் கொடுத்ததுடன், முதல் ஆளாக முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சிப்பணியில் இறங்கினார். இதனாலும் எனக்கு அவர் மீது அபரிமித மரியாதை.

    ஆரம்பத்தில், சிவாஜி மன்றத்தில் இருந்து வருபவனாக எண்ணிக் கொண்டாலும், போகப்போக என் நடிக்கும் ஆர்வத்தையும் தெரிந்து கொண்டார். "எதைச் செய்தாலும் அதை சரியா செய்யணும்ணேன்'' என்பார். நான் சினிமாவுக்கு வந்த பிறகு, அவர் சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டேன்.

    என் உறவினர் பிரம்மநாயகம் மூலமாகத்தான் அண்ணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்காக நடிக்க சிபாரிசு செய்தவர் என்ற முறையில் அன்றே டாக்டர் கலைஞர் மீது எனக்கு மரியாதை உண்டு.

    நான் நடிகனான பிறகு, என் மீது தனி அக்கறை கொண்டிருந்தவர் அண்ணன் எம்.ஜி.ஆர். தனியாக கட்சி ஆரம்பித்த அவர், ஆட்சி அரியணையில் ஏறிய 

    2 வாரம் கழித்து அவரது தோட்டத்துக்கு போயிருந்தேன். என்னுடன் காலை டிபன் முடித்தவர், "முதல்-அமைச்சர் பதவி என்பது எத்தனை பெரிய பொறுப்பு தெரியுமா? வேலையும் அதிகம். அதே நேரத்தில், பவரும் அதிகம்'' என்றார்.

    இப்படிச் சொன்னதோடு நின்றுவிடாமல், தனது பிரத்தியேக அறை ஒன்றை திறக்கச் செய்தார். அந்த அறை முழுக்க பைல்கள் நிரம்பியிருந்தன. "இத்தனை பைல்களையும் நான் இரவு பகலாக படித்துப் பார்த்து கையெழுத்து போடவேண்டும். எல்லாமே என்னை இந்த ஆட்சி பீடத்தில் அமர வைத்த மக்களின் நல்வாழ்வு சம்பந்தப்பட்டவை. எனவே, நிதானமாக படித்துப் பார்த்து அதற்கான துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் பெற்ற பிறகே ஓ.கே. செய்கிறேன்'' என்றார்.

    இந்த சம்பவத்திற்கு பிறகு சில நாள் கழித்து சிவாஜி சாரை பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சிவாஜி சார் வீட்டுக்கு போவதுண்டு. அதுமாதிரி அன்றும் போனபோது, சிவாஜி சார் முகத்தில் விவரிக்க முடியாத ஒரு சோகம்.

    "அண்ணே! ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?'' என்று கேட்டேன்.

    "வேறொன்றுமில்ல விஜயா! நம்ம சாந்தியின் (சிவாஜியின் மகள்) நாகப்பட்டின வீட்டில் ஒருத்தன் வாடகைக்கு இருந்தான். அவனோட நடவடிக்கை பிடிக்காமல் வீட்டை காலி பண்ணச் சொன்னப்போ, பேருக்கு இரண்டொரு தலையணை, பாயை மட்டும் வெச்சிட்டு வீட்டை பூட்டிவிட்டு, சாவியுடன் போய்விட்டான். இப்போது, கேஸ் போடுவேன்னு சொல்லி டென்ஷன் பண்றானாம்'' என்றார், சிவாஜி.

    "அண்ணன் (எம்.ஜி.ஆர்.) கிட்ட இதுபற்றி எதுவும் சொன்னீங்களா?'' என்று கேட்டேன்.

    "அண்ணன் இப்ப முதல்-அமைச்சர். எவ்வளவோ வேலை இருக்கும். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணணும்?'' என்றார்.

    "இல்லண்ணே! இதையெல்லாம் உரிமையோட அவர்கிட்ட சொல்லலாம்'' என்றேன். அதோடு நில்லாமல் நானே எம்.ஜி.ஆர். அண்ணனின் பர்சனல் போனில் அவருடன் தொடர்பு கொண்டேன். அவரே போனை எடுத்துப் பேசினார். சிவாஜி சாரின் கவலையை சொன்னேன்.

    என்னிடம் முழு விஷயமும் கேட்டுத் தெரிந்து கொண்டவர், "தம்பி (சிவாஜி) பக்கத்துல இருக்காரா?'' என்றார். "ஆமாண்ணே'' என்றேன். கொடுக்கச் சொன்னார். "ஏன் தம்பி! இவ்வளவு நடந்திருக்கு. என்கிட்ட சொல்றதுக்கென்ன?'' என்றவர், "சரி! ஒரு 20 நிமிஷத்தில திரும்பவும் போன்ல வரேன்'' என்று சொல்லி வைத்து விட்டார்.

    சரியாக 15 நிமிடத்தில் மறுபடியும் அண்ணனே பேசினார். "அந்த வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு, புது பூட்டு போட்டு பூட்டியாகிவிட்டது. இனி பிரச்சினை இருக்காது'' என்றார். சிவாஜி சாரும் மனமுருக நன்றி சொன்னார்.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார். 
    Next Story
    ×