search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    810 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தி
    X

    810 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தி

    தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் `வெண்ணிற ஆடை' மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
    தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் `வெண்ணிற ஆடை' மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

    மூர்த்தி, எடுத்த எடுப்பிலேயே நடிக்க வந்துவிடவில்லை. வக்கீல் வேலைக்கு படித்தார். கோர்ட்டில் தனது கட்சிக்காரர்களுக்காக `யுவர் ஆனர்' என்று ஆரம்பித்திருக்க வேண்டிய இவரது `சட்ட' வாழ்க்கை, சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு கலைத்துறைக்குள் பயணிக்க நேர்ந்தது முற்றிலும் எதிர்பாராத விஷயம்.

    சொந்த ஊர் சிதம்பரம். அப்பா கே.ஆர்.நடராஜன் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கிரிமினல் வக்கீலாக இருந்தார். அப்பா, தன் வழியில் மகன் மூர்த்தியையும் வக்கீலாக்கிப் பார்க்க விரும்பியிருக்கிறார்.

    தனக்கென்று வேறு எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், மூர்த்தியும் வக்கீலுக்கு படித்து பாஸ் செய்தார்.

    அப்பாவிடமே ஜுனியராக சேர்ந்திருந்தால் கடலூர் மாவட்டத்துக்கு இன்னொரு பிரபல கிரிமினல் வக்கீல் கிடைத்திருப்பார். ஆனால் மூர்த்தி சட்டப்படிப்பை முடித்த நேரத்தில் அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போக, வேறொரு சீனியரிடம் ஜுனியராக பிராக்டிஸ் செய்ய மூர்த்தியின் மனம் ஒப்பவில்லை. இதனால் அப்போது சர்வதேச அளவில் வியாபித்திருந்த "ரெமிங்டன்'' டைப்ரைட்டர் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலைக்குப் போனார். ஒரு வருடம் இந்தப் பணி தொடர்ந்திருக்கிறது.

    பிறகு எப்படி மூர்த்தி நடிகரானார்? இந்த வகையில் அவரை நடிப்பு பக்கம் திருப்பியதே ஜாதகம்தான்.

    அதுபற்றி மூர்த்தி கூறுகிறார்: "ரெமிங்டன் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதி வேலையில் ஊர் ஊராக சுற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படி `நாளொரு பயணம்; பொழுதொரு ஊர்' என்ற நிலை எனக்கு ஒத்துவரவில்லை. அதனால் அந்த வேலையை விட்டு விட்டு, சுமார் 6 மாதம் சும்மா இருந்தேன்.

    அப்போது நான் சென்னையில் "ஒய்.எம்.சி.ஏ'' விடுதியில் தங்கியிருந்தேன். ஒருநாள் சாப்பிட்டு முடித்துவிட்டு கடைத்தெரு வழியாக வரும்போது ஜோதிடம் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகம் என் கண்ணில் பட்டது. வாங்கி படித்தேன்.

    அதில் ஜோதிடரிடம் ஒருவர் "எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?'' என்று கேட்டிருந்தார். பதிலுக்கு அந்த ஜோதிடர் "வருகிற ஜுலை மாதம் 10-ந்தேதிக்குள் திருமணம் நடந்தே தீரும்'' என்று எழுதியிருந்தார்.

    எனக்கு ஆச்சரியம். இத்தனை தெளிவாக தேதி வாரியாக ஒருவரின் வாழ்க்கை நிலையை தீர்மானிக்க ஜோதிடத்தால் முடியுமா? இந்தக் கேள்வியை அந்த ஜோதிடரிடம் நேரில் சென்று கேட்டு விடுவது என்று முடிவு செய்து, அந்தப் பத்திரிகையில் அவர் கொடுத்திருந்த போன் நம்பரில் தொடர்பு கொண்டேன். "உங்களை சந்திக்க வேண்டும்'' என்றேன். "சைதாப்பேட்டையில் இருக்கிறேன். மதியம் வாருங்கள்'' என்றார்.

    போனேன். சாதாரண ஓட்டு வீட்டில் இருந்தார். அறை முழுக்க ஜோதிட புத்தகங்கள். பார்த்த மாத்திரத்தில் மரியாதை தரும்

    தோற்றம்.என்னைப் பார்த்ததும், "நீங்கதான் போன் பண்ணினீங்களா?'' என்று கேட்டார். பேச்சு சகஜமாக வளரத் தொடங்கிய நேரத்தில், "ஒருத்தருக்கு கல்யாணம் எப்போ நடக்கும்? வேலை எப்ப கிடைக்கும்? இதெல்லாம் ஜோதிடம் எப்படி முடிவு செய்ய முடியும்? நீங்கள் இதில் இன்னும் ஒருபடி மேலே போய் "இந்த தேதிக்குள் நடக்கும் என்று சொல்வதெல்லாம் சரிதானா?'' என்று கேட்டேன்.

    என் கேள்வியை புரிந்து கொண்டவர் என்னிடம், "தம்பி! ஜோதிடம் என்பது மேஜிக் விஷயம் அல்ல. அது கணிதம். சரியாக குறித்தோமானால் நேரம் தப்பாது'' என்றார்.

    "அப்படியானால், எதிர்காலத்தில் நான் என்னவாக வருவேன் என்பதை சொல்ல முடியுமா, உங்களால்?'' என்று கேட்டேன்.

    "உன் ராசி, லக்னத்தை சொல்லு'' என்றார்.

    நானும் "கன்யா ராசி; துலாம் லக்னம்'' என்று சொன்னேன்.

    குறித்துக் கொண்டவர், என் பிறந்த தேதி, நேரம் ஆகியவற்றையும் கேட்டுக்கொண்டார். பிறகு ஏதேதோ கணக்கு மாதிரி எழுதினார். `என்ன சொல்லப் போகிறாரோ' என்ற ஆர்வத்தில் இருந்த என்னிடம், "தம்பி! உங்களுக்கு `மேக்கப்' வாழ்க்கைதான் அமையும். சினிமாவில் நடிப்பீங்க. ஜனங்களை சிரிக்க வைப்பீங்க. ஆனால் அதுல நம்பர் ஒன்ல வரமாட்டீங்க. நம்பர் டூ-திரிக்குள் இருப்பீங்க. வயதாகி குச்சி ஊன்றும் காலம் வரை நடிப்பில் உங்கள் இடம் நிரந்தரமாக இருக்கும்'' என்றார்.

    நான் நடிப்பேனா? எனக்கு அதிர்ச்சியாக இருந்தது! பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகத்தில் நடித்த அனுபவம் மட்டுமே இருக்கிறது. அப்புறமாய் அதைக்கூட மறந்தாச்சு. பிறகு எப்படி நடிக்க வாய்ப்பு? அதுவும் சினிமாவில்?

    இந்த மாதிரி கேள்விகள் எனக்குள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்த நேரத்தில்கூட அவரை விடவில்லை. "நீங்கள் சொன்னதை எனக்கு எழுதித்தர வேண்டும். அதுவும் எவ்வளவு நாளைக்குள் இது நடக்கும் என்று எழுதித் தரவேண்டும்'' என்றேன்.

    "ஏன், என் மேல் நம்பிக்கை இல்லையா?'' என்று கேட்டார் ஜோதிடர்.

    "நீங்கள் சொன்ன தேதிக்குள் நடிகனாகி விட்டால் உங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டுமே. அதற்குத்தான் தேதி கேட்டேன்'' என்றேன்.

    நான் ஜோதிடரை சந்தித்தது 1964-ம் ஆண்டு பிப்ரவரியில்.

    அவர் என்னிடம் "வருகிற அக்டோபர் 30-ந்தேதிக்குள் நடிகனாகி விடுவாய்'' என்று எழுதி கையெழுத்து போட்டு தந்தார். அவர் சொன்னதை விடவும் 7 நாளுக்கு முன்பே அதாவது அக்டோபர் 23-ந்தேதியே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. டைரக்டர் ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' படம்தான் என் ஜோதிடத்தை மெய்யாக்கி என்னையும் நடிகனாக்கி விட்டது. ஒரு 7 நாள் தள்ளிப் போயிருந்தால் சினிமா உலகம்  தப்பிச்சிருக்கும்!''

    நகைச்சுவையாகவே சொன்னார், வெண்ணிற ஆடை மூர்த்தி.

    மூர்த்திக்கு ஸ்ரீதர் சினிமா வாய்ப்பு அளித்தது எப்படி?

    மூர்த்தி, ஜோதிடரை சந்தித்த சில நாட்களுக்குப்பிறகு, ஸ்ரீதரின் உதவியாளராக இருந்த என்.சி.சக்ரவர்த்தியை தற்செயலாக சந்தித்திருக்கிறார். அப்போது அவர் ஸ்ரீதரின் உதவியாளர் என்று தெரிந்ததும், "டைரக்டர் ஸ்ரீதரிடம் ஒருநாள் என்னை அறிமுகப்படுத்தி வையுங்கள்'' என்று

    கேட்டார்.`அதற்கென்ன' என்று சர்வசாதாரணமாக சொன்ன சக்ரவர்த்தி, அடுத்த சந்திப்பிலேயே மூர்த்தியை ஸ்ரீதர் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்.

    நடிக்க வேண்டும் என்று நினைத்ததுமே டைரக்டர் ஸ்ரீதரின் பட வாய்ப்பு கிடைத்து விடும் போலிருக்கிறதே என்று மூர்த்திக்கும் ஆச்சரியம்.

    "இப்போது நான் எடுப்பது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம். உங்களுக்கு எந்த மாதிரி நடிப்பு வரும்?'' என்று ஸ்ரீதர் கேட்டார்.

    "எனக்கு காமெடி நல்லா வரும்னு நினைக்கிறேன்'' என்றார் மூர்த்தி.

    "நீங்கள் வக்கீலுக்கு படித்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில்கூட `படித்தவர்' என்ற களை தெரியுது. நீங்கள் எப்படி நடிப்பில் சிரிக்க வைக்க முடியும்?'' என்று கேட்டார், ஸ்ரீதர்.

    தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மூர்த்திக்கு புரிந்து விட்டது. "பரவாயில்லை சார்! எனக்கு வாய்ப்பு தருவதாக இருந்தால் உங்க மானேஜர் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்கள்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

    அப்போதுதான் எதிர்பாராத திருப்புமுனை ஏற்பட்டது. அதை மூர்த்தியே சொல்கிறார்:

    "நடிக்க வாய்ப்பு இல்லை, ஆனால் முகத்தில் நல்ல `களை' இருக்கிறது என்று ஸ்ரீதர் சார் சொன்னது என் மனதில் ஆழப்பதிந்து விட்டது. எனவே, அவரிடம் விடைபெற்று வாசல் வரை வந்தபோது மறுபடியும் அவர் பக்கமாக திரும்பினேன். "சார்! `ஒருத்தருக்கு நல்ல முகம் அமைஞ்சா அதுவே அதிர்ஷ்டமாகவும் ஆகிவிடும்' என்பது ஆங்கிலப் பழமொழி. ஆனால், என் விஷயத்தில் மட்டும் இந்தப் பழமொழி பொய்யாகி விட்டது. பரவாயில்லை சார். நான் வருகிறேன்'' என்று அறைக் கதவை திறந்தேன்.

    நான் சொன்னது ஸ்ரீதர் சாரை பாதித்து விட்டது போலும். எனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். எனக்கு மீசை வைத்து மேக்கப் போட்டு, படம் எடுத்தார்கள். அப்போது நான் `திருதிரு'வென விழித்ததில், எனக்குள் இருந்த காமெடி நடிகனை கண்டு கொண்டார், ஸ்ரீதர். ஸ்ரீதர் சாரின் `வெண்ணிற ஆடை' படம் மூலம் காமெடி நடிகன் ஆனேன். சாதாரண மூர்த்தி `வெண்ணிற ஆடை' மூர்த்தி ஆனது

    இப்படித்தான்.''இவ்வாறு "வெண்ணிற ஆடை'' மூர்த்தி கூறினார்.
    Next Story
    ×