search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை: வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார் கருணாநிதி
    X

    மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை: வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார் கருணாநிதி

    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.
    கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    சொந்தப்படம் எடுத்ததால் சொத்துக்களை இழந்த மருதகாசி, எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு மறுபிரவேசம் செய்தார். தன்னம்பிக்கையுடன், குடும்பத்தாருடன் மீண்டும் சென்னையில் குடியேறினார்.

    தேவர் படங்களுக்கு பாட்டு எழுதினார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த "தசாவதாரம்'', "காஞ்சி காமாட்சி'', "நாயக்கரின் மகள்'' ஆகிய படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

    மறுபிரவேசத்தில், டப்பிங் படங்கள் உள்பட சுமார் 100 படங்களுக்கு பாடல் எழுதினார்.

    இளைய தலைமுறையினர் படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். அதில் முக்கியமானது, தேவர் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்.''

    இதில் இடம் பெற்ற "நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு'' என்ற பாடல் மருதகாசி எழுதியதாகும்.

    பொதுவாக, பட உலகில் ஒரு முறை தோற்றவர்கள் மீண்டும் தலை தூக்குவது மிகவும் கடினம். மருதகாசி அயராது உழைத்து, இழந்தவற்றை மீண்டும் பெற்றார். பழைய புகழோடு, 1989-ம் ஆண்டு, நவம்பர் 29-ந்தேதி காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 69.

    மருதகாசிக்கு 6 மகன்கள். 3 மகள்கள்.

    மூத்த மகன் இளங்கோவன் விவசாயத்தை கவனிக்கிறார். இரண்டாவது மகன் ராமதாஸ் "பி.ஏ'' பட்டதாரி. குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மூன்றாவது மகன் பொன்முடி, ஓவியர்.

    4-வது மகன் மதிவாணன் "மெட்ரோ வாட்டர்'' நிறுவனத்திலும், அடுத்தவர் கிருஷ்ணமூர்த்தி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் நிறுவனத்திலும் வேலை பார்க்கிறார்கள்.

    6-வது மகன் மருதபரணி, தந்தையின் திரை உலக வாரிசாக விளங்குகிறார். பிற மொழிப் படங்களை தமிழில் மொழி மாற்றம் ("டப்பிங்'') செய்து வருகிறார். இவர் மனைவி உமா பரணி திரைப்படங்களுக்கு, பின்னணியில் குரல் கொடுக்கிறார்.

    மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும், கடந்த மே மாதம் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும், ரூ.5 லட்சத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

    மருதகாசியுடன் நெருங்கிப் பழகியவரான பட அதிபர் ஏ.கே.வேலன் கூறியதாவது:-

    "வியாபார நோக்கமின்றி, கலை நோக்குடன் சினிமாவுக்கு பாடல்களை எழுதியவர் மருதகாசி. கற்பனை வளம் மிகுந்தவர்.

    அவர் எழுத்திலே தமிழ் மரபு இருக்கும்; தமிழின் தரம் இருக்கும்; புதிய பார்வையும் இருக்கும்.

    என்னுடைய "தை பிறந்தால் வழி பிறக்கும்'' படத்துக்கு அவர் எழுதிய "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடல், ஒவ்வொரு பொங்கல் நாள் அன்றும், தொலைக்காட்சியிலும், வானொலியிலும் ஒலிக்கிறது.''

    இவ்வாறு ஏ.கே.வேலன் கூறினார்.

    கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-

    "கவிஞர் மருதகாசி என்ற பெயர், கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படத் துறையில் கோலோச்சிய பெயர்.

    இன்றைய புதிய விளைச்சல்களுக்கு எல்லாம், முன்னோடியாய் இருந்த நாடறிந்த நாற்றங்கால்.

    அவருடைய பாடல்கள், காற்றையும், காலத்தையும் வென்று, இன்றும் அன்றலர்ந்த மலர்களைப் போல நின்று நிலவுகின்றன.

    கவிஞர் மருதகாசி அவர்கள், திரை உலகில் ஒரு சகாப்தம் படைத்தவர்.

    கால் சட்டை போட்ட பருவம் முதல் இன்று வரை இவரது திரை இசைப் பாடல்களில் எனக்கொரு சுக மயக்கம் உண்டு. மருதகாசியின் பெயர், காற்றைப் போல காலம் எல்லாம் நிலைத்து நிற்கும்.''

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
    Next Story
    ×