search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எம்.ஜி.ஆர்., சின்னப்ப தேவர் மூலம் திரை உலகில் மருதகாசி மறுபிரவேசம்
    X

    எம்.ஜி.ஆர்., சின்னப்ப தேவர் மூலம் திரை உலகில் மருதகாசி மறுபிரவேசம்

    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.
    சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

    இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-

    "1950-ம் ஆண்டில் என் அண்ணன் "மந்திரிகுமாரி''க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.

    அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

    கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

    கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.

    1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.

    1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். "பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்'' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். "நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் "மறுபிறவி.'' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.

    "மறுபிறவி'' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, "தேர்த்திருவிழா'' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.

    தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.''

    இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.

    மருதகாசிக்கு கவிஞர் கா.மு.ஷெரீப் நெருங்கிய நண்பர். ஆரம்பத்தில் மருதகாசியும், கா.மு.ஷெரீப்பும் இணைந்து, பல பாடல்களை எழுதினார்கள். பிறகு தனித்தனியாக எழுதினார்கள்.

    தமிழரசு கழகத்தின் முக்கிய பிரமுகராகவும், பேச்சாளராகவும் கா.மு.ஷெரீப் விளங்கினார். கட்சிப்பணி காரணமாக, அவர் அதிக பாடல்களை எழுதவில்லை. பாடல்கள் எண்ணிக்கை குறைவு என்றாலும், கருத்தாழம் மிக்க பாடல்கள்.

    புலவர் ஏ.கே.வேலனும், மருதகாசியும் சம காலத்தவர்கள். இருவரும் தேவி நாடக சபையில் ஒன்றாக பணியாற்றினார்கள்.

    ஏ.கே.வேலன் வசன கர்த்தாவாக உயர்ந்து, அருணாசலம் ஸ்டூடியோவை உருவாக்கி "தை பிறந்தால் வழி பிறக்கும்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதற்கு, "தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்'' என்ற பாடலை மருதகாசி எழுதினார்.

    அதன் பிறகு, ஏ.கே.வேலன் தயாரித்த பல்வேறு படங்களுக்கும் ஏராளமான பாடல்களை மருதகாசி எழுதினார். "பொன்னித்திருநாள்'' என்ற படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார்.

    உடுமலை நாராயணகவியை தன் குருவாக நினைத்தவர், மருதகாசி. "என்னுடைய 2 ஆயிரம் பாடல்கள், கவிராயரின் 2 பாடல்களுக்கு ஈடாகாது'' என்று மனந்திறந்து பாராட்டுவார்.

    அத்தகைய உடுமலை நாராயணகவி, மருதகாசி மீது அளவற்ற பாசமும், அன்பும் வைத்திருந்தார். அவருக்கு வந்த வாய்ப்புகள் பலவற்றை அவர் ஏற்க மறுத்த சந்தர்ப்பங்களில், "இதற்கு பொருத்தமானவர் மருதகாசிதான். அவரை எழுதச் சொல்லுங்கள்'' என்று கூறியிருக்கிறார்.

    குறிப்பாக, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிரமாண்டமாகத் தயாரித்த "தசாவதாரம்'' படத்துக்கு பாடல் எழுத முதலில் அழைக்கப்பட்டவர் உடுமலை நாராயணகவிதான். அவர், "மருதகாசிதான் இதற்கு நன்றாக எழுதக்கூடியவர். அவரைக் கூப்பிடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

    இதன் காரணமாக "தசாவதாரம்'' படத்துக்கு எல்லாப் பாடல்களையும் மருதகாசி எழுதினார்.
    Next Story
    ×