search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன்
    X

    சிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன்

    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

    தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, "பால்குடம்'' கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

    அதே சமயம், "பால்குடம்'' கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

    பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.

    தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் - ஜெயபாரதி நடித்த "புதிய வாழ்க்கை'', சிவாஜிகணேசன் நடித்த "மனிதருள் மாணிக்கம்'', "ஜெயலலிதா- முத்துராமன் நடித்த "திக்குத் தெரியாத காட்டில்'' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். "முடிசூடா மன்னன்'', "கல்யாணமாம் கல்யாணம்'', "எங்களுக்கும் காலம் வரும்'', "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன'' ஆகியவை, அவற்றில் சில.

    தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.

    அதைத்தொடர்ந்து "கோமாதா என் குலமாதா'', "மாணவன்'', "ஆட்டுக்கார அலமேலு'', "அன்புக்கு நான் அடிமை'', கமலஹாசன் நடித்த "தாயில்லாமல் நான் இல்லை'', ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்'', "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'' முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

    முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த "தவப்புதல்வன்'' படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த "பொல்லாதவன்'' படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

    ஜாவர் சீதாராமன் எழுதிய "பணம், பெண், பாசம்'' என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.

    நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.

    இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.

    இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

    நண்பர் சக்திவேலுடன் இணைந்து "எஸ்.டி.கம்பைன்ஸ்'' என்ற பட நிறுவனத்தை தொடங்கி, "விடியும் வரை காத்திரு'' என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்

    நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், "ஆன்டி ஹீரோ''வாக - அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் "விடியும் வரை காத்திரு'' படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே

    ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க "கேள்வியும் நானே பதிலும் நானே'' படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

    எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

    அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. "படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்'' என்றார்.

    அந்தப்படம்தான் "அன்புள்ள ரஜினிகாந்த்.'' எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.

    1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

    இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-

    "ரஜினி சார் நடித்த "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'', "அன்புக்கு நான் அடிமை'', "ரங்கா'' முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் "அன்புள்ள ரஜினிகாந்த்.''

    கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.

    படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். "கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்'' என்ற பேனரில், "அன்புள்ள ரஜினிகாந்த்'' தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.''

    இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.

    ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த "வைதேகி காத்திருந்தாள்'' அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார்.

    விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, "அழகு மலராட...'' நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.

    1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

    விஜயகாந்த் - ராதிகா நடித்த "நானே ராஜா நானே மந்திரி'', கவுண்டமணி கதாநாயகனாக நடித்த "தலையாட்டி பொம்மைகள்'' ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

    தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் "உள்ளம் கவர்ந்த கள்வன்.'' இந்தியில் வெளியான "சிட்சோர்'' படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.

    படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 41 தான்.

    தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் "பி.காம்'' படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

    டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். "அபர்ணா'' அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.

    ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார். 
    Next Story
    ×