search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்
    X

    எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்

    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர்.
    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். "வைதேகி காத்திருந்தாள்'', "அன்புள்ள ரஜினிகாந்த்'' உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

    திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர்

    "தூயவன்.''இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் "பி.ஏ'' பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர்.

    ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

    தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

    "தினத்தந்தி'', "ராணி'', "ஆனந்தவிகடன்'', "தினமணி கதிர்'' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

    1967-ம் ஆண்டில், "ஆனந்த விகடன்'' அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.

    "தூயவன்'' எழுதிய "உயர்ந்த பீடம்'' என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

    அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

    தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.

    உடனே மேஜர், "நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை... என்ன எழுத்து!'' என்றார்.

    அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், "நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!'' என்று நிதானமாகக் கூறினார்.

    மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

    மேஜருக்காக "தீர்ப்பு'' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.

    இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் "பால்குடம்.'' இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

    "தீர்ப்பு'' நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    "நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்'' என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    "பால்குடம்'' நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

    இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக - எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

    "தினமணி கதிர்'' வார இதழின் ஆசிரியராக "சாவி'' இருந்த நேரம் அது. "தூயவன்'' எழுதிய "சிவப்பு ரோஜா'' என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், "செல்வி'' என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

    "செல்வி'' என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.

    உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.

    இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

    திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.

    Next Story
    ×