search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா இசை அமைப்பில் செந்தூரப்பூவே பாடலை எழுதினார் கங்கை அமரன்
    X

    இளையராஜா இசை அமைப்பில் செந்தூரப்பூவே பாடலை எழுதினார் கங்கை அமரன்

    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:-

    "அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.

    ஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.

    அமரும் டிïனைக் கேட்டுவிட்டு "செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.

    "செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.

    செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா?

    இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.

    "சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.

    படம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.

    `அடடே! பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா?' என்று பிரமித்துப் போனேன்.

    அவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.

    இந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.

    இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

    இந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

    16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.

    கேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.

    அந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.

    இசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், "அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.

    பதிலுக்கு நான், "என்ன... என்ன? என்னடா எந்த இடத்துல?'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.

    அமர் தயங்கியபடி "இல்லே! இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...

    அவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.

    "இது உன் ஐடியாவா?''

    "இல்ல... பாரதியுடையது!''

    திரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், "ஏன்யா! ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன?'' என்று கேட்டேன்.

    "ஒங்கிட்டயா? நானா? சொன்னா சும்மா விட்டுருவியாக்கும்? உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்! மானம் போயிடாது!'' என்று சொன்னார், பாரதி.

    Next Story
    ×