search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    16 வயதினிலே பாடல் பதிவு: மலேசியா வாசுதேவன் பாடினார்
    X

    16 வயதினிலே பாடல் பதிவு: மலேசியா வாசுதேவன் பாடினார்

    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.
    "16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

    "16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன்.

    நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு எழுதிட்டு வரலாம்'' என்று புறப்பட்டு நேராக வந்துவிட்டார்.

    பாடல் வரவேண்டிய இடத்துக்கான காட்சியை கவிஞரிடம் பாரதி விவரித்து சொன்னார். உடனே என்னைப் பார்த்த கவிஞர் "என்ன டிïன்?'' என்று கேட்டார்.

    நான் பக்கவாத்தியங்களோடு அந்த மெட்டை பாடிக்காட்டினேன். பாரதி, அரைகுறை மனதுடன் "ஓகே'' செய்த மெட்டு அது.

    "16 வயதினிலே'' கிராமத்து பின்னணியில் அமைந்த படம் என்பதை மனதில் கொண்ட கவிஞர், சிறிது நேரம் யோசித்துவிட்டு, "செவ்வந்திப்பூ முடிச்ச சின்னக்கா ஹோய் சின்னக்கா'' என்று எழுதினார்.

    இரண்டாவது பாடல், மயிலிடம் சப்பாணி பாடுவதுபோல் வருகிறது. சந்தைக்குப் போகும் சப்பாணியும் மயிலும் நடந்து போகும் வழியில் பாடும் பாட்டு. மயில் வருத்தத்தில் இருக்க அவளை சப்பாணி சந்தோஷப்படுத்த முயற்சிக்கிற மாதிரியான பாட்டு.

    இதில் சப்பாணி (கமலஹாசன்) பாடிக்கொண்டே போக, இடையில் ஒரு ஹம்மிங்கோடு ஒரு பெண் குரல் ஒன்று ஒலிக்கிறது.

    மயிலும் சப்பாணியும் எங்கிருந்து வருகிறது அந்தப் பெண் குரல் என்று தேடித்தேடி பார்க்கிறார்கள். கடைசியில் ஒரு கிழவி பாடுவதாக காட்டப்படும் என்று பாரதி, கவிஞரிடம் விளக்கினார்.

    நானும் பாரதியும் ஏற்கனவே இந்தப் பாட்டி பற்றி யோசித்து வைத்திருந்தோம். "என்ன பாட்டி! மஞ்சக் குளிச்சிருக்கியே!'' என்று கேட்டு, "பழைய நினைப்புடா பேராண்டி'' என்று சொல்லும் கிராமத்துப் பேச்சை நினைவில் வைத்திருந்தோம். அதாவது, இப்படி கிழவி சொல்கிற மாதிரி முடிந்தால் நன்றாக இருக்கும் என்பது எங்கள் கருத்து. ஆனால் அதை கவிஞரிடம் சொல்லவில்லை.

    கவிஞரோ பாடலை "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' என்று தொடங்குவதாக அமைத்து கிழவி காட்டப்படும்போது "பழைய நினைப்புடா பேராண்டி... பழைய நினைப்புடா!'' என்று அவள் சொல்வது போல் முடித்தார்.

    நாங்கள் சொல்லாமலே, கவிஞர் எங்கள் மனதில் இருந்ததை எழுதியது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கவிஞருக்கு இருந்த சரஸ்வதி கடாட்சம் அது.

    "செவ்வந்தி பூ முடிச்ச'' பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை பாட வைக்கலாம் என்று முடிவு செய்து, ரிகர்சலுக்கு அழைத்தோம். பாலு வந்தார். ரிகர்சல் எல்லாம் முடிந்து கிளம்பும்போது பாலுவை தனியாக அழைத்தேன். "பாலு ராத்திரியெல்லாம் வெளியே சுத்தறதை விட்டுடு. நண்பர்களுக்காக வெளியே போனேன். விடிய விடிய ஊர் சுத்தினதுல தொண்டை கட்டிக்கிட்டுதுன்னு சொல்லாதே. இல்லேன்னா இந்தப் பாடல் வேறு யாருக்காவது போய்விடும்'' என்று சொன்னேன்.

    பாலுவும் `சரி' என்று சொல்லிப் போனதோடு சரி.

    மறுநாள் காலை 7 மணிக்கு ஏவி.எம்.மில் பாடலுக்கான மிïசிக்கையெல்லாம் கம்போஸ் செய்து விட்டேன். `டிபன் பிரேக்'கை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் பூஜை தொடங்கியது.

    ரிகர்சல் தொடங்கி பாடலுக்கான வடிவங்களை தயார் செய்த நிலையில் 11 மணி.

    பாலு அப்போதும் வரவில்லை. ஆளாளுக்கு தேடினோம். 11-30 மணிக்கு பாலு என்னிடம் நேராக வந்து, "டேய்! தொண்டையெல்லாம் கட்டிப் போச்சுடா...'' என்று, கட்டைக்குரலில் விஷயத்தை சொன்னான்.

    "பார்த்தியா? நேத்தே நான் சொன்னேன் இல்லையா? அதையே செஞ்சிட்டு வந்து நிக்கறியே'' என்றேன்.

    என்னிடமும் பாரதியிடமும் `சாரிடா' என்று சொல்லிவிட்டு பாலு கிளம்பிவிட்டான்.

    எல்லாம் ரெடியாகிவிட்டது. ஜானகி கோரஸ் ரிகர்சல் கூட முடிந்து விட்டது.

    பாலுவுக்குப்பதிலாக யாரை பாட வைப்பது? அப்போது  `டிராக்'கை தனியாக ரெக்கார்டு செய்யும் பழக்கம் கிடையாது. மேலும் அது பூஜையின்போது பதிவு செய்யப்படும் பாட்டு. பாடுபவர் இருக்க வேண்டும்.

    யோசித்தேன். என் கண்ணில் பூஜைக்கு வந்த மலேசியா வாசுதேவன் பட்டார்.

    மலேசியா வாசுதேவனை அழைத்தேன். "இந்தப் பாட்டை கத்துக்கோ'' என்று பாடலை சொல்லிக் கொடுத்தேன்.

    அதன்படி வாசுவும் பாட, பாடலை பதிவு செய்தேன்.

    மதிய உணவுக்குப்பிறகு, "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு'' பாடலை பதிவு செய்யவேண்டும்.

    இதை சப்பாணி போலவே பாட வைக்க வாசுவை தயார் செய்தேன்.

    ஆனால் வாசுவோ ரிகர்சலில் எல்லாம் சரியாக பாடிவிட்டு, "டேக் போகும்போது மாற்றி பாடிவிட்டார். `பாடத் தெரியாதவன் போல் பாடினால் நமக்கு பாடத்தெரியாது என்று எல்லோரும் நினைத்து விடுவார்களோ' எனப்பயந்து, சாதாரண பின்னணி பாடகர் போல

    பாடிவிட்டார்.இதுவரை வராத பாடலாக இருக்க வேண்டும் என நான் எடுத்த முயற்சியெல்லாம் இப்போது விழலுக்கிறைத்த

    நீராகிவிட்டது.இப்போதும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டுப் பாருங்கள். ஒரு அறியாத பட்டிக்காட்டான் பாட்டில் வரும் எளிமைத்தனம் அதில் இருக்காது. விவரம் புரிந்த கிராமத்தான் பாடுவது போல்தான் இருக்கும்.

    இதுபோன்ற இழப்புகள் ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஏராளம்.

    அடுத்த பாடல் ரெக்கார்டிங் செய்யவேண்டிய நேரம் வந்தது.

    மயில் (ஸ்ரீதேவி) தன் கற்பனையில் தனக்கு வரும் காதலன் எப்படி இருப்பான் என்று கனவு காணும் மனநிலையில் பாடும் பாட்டு என்று பாரதி சொன்னார்.

    அப்போதெல்லாம் எந்த டைரக்டரும் இசையமைப்பாளரிடம் `இந்தப்பாடல் இதுபோல இருக்கலாம். அல்லது இந்த மாதிரி இருக்கலாம்' என்று அபிப்ராயமோ, ஆலோசனையோ சொல்வது கிடையாது. பாடல் சூழ்நிலையை விளக்கிவிட்டு, அத்துடன் விட்டுவிடுவார்கள். இசையமைப்பாளரும், கவிஞரும் என்ன கொடுக்கிறார்களோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்.

    தேவைப்பட்டால் சிறுசிறு மாற்றம் வேண்டுமென்று கேட்பார்கள். அதை அவர்களும் உடனே செய்து விடுவார்கள்.

    அந்தப் பாடல் காட்சிக்கு சில டிïன்களை போட்டேன். எதுவும் பாரதிக்கு பிடித்த மாதிரி தெரியவில்லை. பின்னர் ஒரு டிïனை போட்டு, "பாரதி! இது நன்றாக இருக்கும்'' என்று வற்புறுத்தினேன். அதுதான் "செந்தூரப்பூவே...'' பாடல் மெட்டு. மெட்டு நன்றாக அமைந்துவிட்டதால் மேற்கொண்டு `டிïன்' எதுவும் கம்போஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். அதனால் அந்த டிïன்தான் அந்தக் காட்சிக்கென்று முடிவாகிவிட்டது.

    "இந்த மெட்டுக்கு கவிஞரை வைத்து பாட்டு எழுதச் சொல்லலாமா?'' என்று பாரதியிடம் கேட்டேன். "புதிதாக யாரையாவது வைத்து எழுதலாம்'' என்றார் பாரதி. அதோடு நில்லாமல், "ஏன் அமரனே எழுதட்டுமே'' என்றார்.

    அமர் உள்பட எங்கள் எல்லோருக்குமே கவிஞர் கண்ணதாசன் மட்டுமே கவிஞராகத் தெரிந்தாரேயன்றி, வேறு யாரையும் கவிஞராகக் கருத முடியவில்லை. `அமரன் எழுதட்டும்' என்று பாரதி சொன்னதற்கு நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அமரன் வேண்டாம் என்று தடுக்கவும்
    இல்லை.
    Next Story
    ×