search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜாவின் அண்ணன் பாவலர் மரணம்
    X

    இளையராஜாவின் அண்ணன் பாவலர் மரணம்

    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.
    இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

    இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக இளையராஜா பணியாற்றி வந்தபோது, இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு நாள் மதுரையில் அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) உடல்நலமில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்கிறார்கள் என்றும், செலவுக்கு பணம் வேண்டும் என்றும் மூத்த மகன் ஜீவதுரை வந்தான்.

    அவ்வளவு சீரியசாக இருக்காது என்று நான் நிச்சயமாக நம்பினேன். பணத்தை, தேவையானபோது அனுப்பலாம் என்று சாதாரணமாக இருந்து விட்டேன்.

    அடுத்த நாள், ஜி.கே.வி.யின் ரெக்கார்டிங்குக்குப் போனேன். காலை 7 மணிக்கு, விஜயா ரெக்கார்டிங் தியேட்டரில் ஜி.கே.வி.யுடன் அமர்ந்தேன்.

    அண்ணன் இறந்துவிட்டார்கள் என்று செய்தி வந்தது. அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

    `பணம் கொடுத்திருந்தால் ஒருவேளை பிழைத்திருப்பாரோ?'

    குற்ற உணர்ச்சி, அண்ணன் போய்விட்ட வேதனை எல்லாம் சேர்ந்து, என்னை ஸ்தம்பிக்க வைத்து, துயரத்தில் மூழ்கடித்தன.

    அம்மா, பாஸ்கர், அமர் ஆகியோருடன் நானும், மனைவியும், குழந்தையும் வாடகைக் காரில் கிளம்பினோம். போகும்போது யாருக்கும் பேச்சு வரவில்லை. அம்மா புலம்பிக் கொண்டே வந்தார்கள்.

    உடலை மதுரையில் இருந்து பண்ணைபுரத்துக்கு பிள்ளைகள் கொண்டு போனார்கள்.

    அண்ணன் உடலைப் பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைத்தது. துயரத்தைத் தாங்க முடியவில்லை. அப்பா உயிர் பிரியும்போது, எங்கள் கைகளைப் பிடித்து, அவரிடம் தானே ஒப்படைத்தார்! அண்ணன்தானே எங்களை வளர்த்து ஆளாக்கினார். `எங்கள் வளர்ச்சியைக் காணாமல் போய்விட்டீர்களே' என்று கதறி அழுதோம்.

    இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது, துக்கமும், அழுகையும் அதிகமாகியது. உடலை குழிக்குள் இறக்கியபோது, கண்கள் வற்றும்வரை கண்ணீர் கொட்டியது.

    நான் அழவேண்டியது எல்லாம், அன்றோடு முடிந்தது. அதற்குப் பிறகு, அத்தனை வேதனையோடு நான் என்றும் அழவில்லை.

    திரும்பி வந்தோம். ரெக்கார்டிங்குக்கு போனபோது, ஜி.கே.வி.யை பார்த்ததும், அழுகை அதிகமாக வந்தது. "எங்களுக்கு இனி இந்த உலகில் அண்ணன் என்பது நீங்கள்தான் அண்ணே'' என்று கதறியபடி கூறினேன். அவர் ஆறுதல் சொன்னார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    அண்ணன் - தம்பி போல் ஜி.கே.வெங்கடேசும், இளையராஜாவும் பழகுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களைப் பிரிக்க முயற்சி நடந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    இசையமைப்பாளர் கோவர்த்தனும், நானும் சேர்ந்து இசையமைப்பதும், ஆர்க்கஸ்ட்ரா ரிகர்சல் நடத்துவதும், ஜி.கே.வியின் இன்சார்ஜ் சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை.

    `நம்ம ரெக்கார்டிங் எல்லாம் ராஜாவுக்குப் பெரிது இல்லை, அவனும் கோவர்த்தனும் மிïசிக் பண்றாங்க! அதோட வெளிநாட்டில் இருக்கும் குரூப்போல ஆர்க்கஸ்ட்ரா கச்சேரியும் பண்ணப்போகிறார்களாம் என்று சொல்லிவிட்டார். "அவன் பிசியா இருந்தா விட்டுடுடா'' என்று ஜி.கே.வி.யை சொல்ல வைத்து விட்டார்.

    இதனால், வழக்கமாக என்னை அழைத்துப்போக வீட்டுக்கு வரும் டாக்சி 2 நாட்களாக வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

    ஜி.கே.வியின் அண்ணன் மகன் வித்யா, வயலின் வாசிப்பவன், என் வீட்டிற்கு வந்து "நீ ஏன் வரவில்லை'' என்றான். அதற்கு நான் "வண்டி என்னை பிக்அப் பண்ண வரவே இல்லை'' என்றேன்.

    பின்னர் நான் ஜி.கே.விக்கு ஒரு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்து விட்டேன். அதில், "நான் ஏதோ தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதைப்போலவும், செய்யத்தகாத நடவடிக்கையைச் செய்துவிட்டதைப் போலவும் அதனால் என்னைத் தண்டிப்பதாகவும் நினைத்துக்கொண்டு, என்னை, அப்படியே விட்டுவிடு என்று சீனிவாசனிடம் சொன்னதாக அறிந்தேன். அண்ணா.. உங்களை நம்பி நான் சென்னைக்கு வரவில்லை. இனிமேல் வேலையே இல்லாமல் போனாலும், பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர உங்களிடம் வந்து எனக்கு வேலை வேண்டும் என்று நிற்கமாட்டேன். இப்படிக்கு ராஜா'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

    இந்தக் கடிதம் கிடைத்ததும், என்னை அழைத்து வர ஆள் அனுப்பினார், ஜி.கே.வி.

    முதலில் அந்த சீனிவாசனே வந்தான். நான் "வரமுடியாது'' என்றேன். பிறகு வித்யா வந்தான்.

    "வாடா! என்ன இருந்தாலும் அவர் பெரியவர்'' என்றான். போனேன்.

    "என்னடா இது லெட்டர்!'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    நடந்ததை சொன்னேன். அவர் வருத்தப்பட்டார்.

    "சரி, சரி! போனது போகட்டும். வாடா!'' என்று அழைத்துப்போனார்.

    கம்போசிங்கிலும், ரெக்கார்டிங்கிலும் `உம்' என்று இருந்தேன்.

    நான் சரியாவதற்கு இரண்டு மூன்று நாட்களாயிற்று.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    Next Story
    ×