search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாட்டுப்பாடி இளையராஜாவை அழ வைத்த நடிகை
    X

    பாட்டுப்பாடி இளையராஜாவை அழ வைத்த நடிகை

    ஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.
    ஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.

    மதுரையில் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா விவரிக்கிறார்:-

    "மதுரையில் சித்திரைத் திருநாள் வந்தால் போதும். மதுரை நகரம் முழுக்க கூட்டம் அலைமோதும். கோவிலில் மட்டுமல்ல, தெருக்களிலும் இதே நிலைதான்.

    சித்திரைப் பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும்போது சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் கூட்டத்தின் எண்ணிக்கை சொல்லி முடியாது.

    இந்த வைபவம் முடிந்த பவுர்ணமி இரவுகளில், தண்ணீர் இல்லாத வைகை ஆற்று மணல் வெளியில் பாரதி, பாஸ்கர், நான், சுப்பிரமணியன், செல்வராஜ் என ஐவர் குழுவாக விடிய விடிய உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

    திருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கச்சேரி இல்லாத நாட்களில் அங்கே சென்று, பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விட்டு வருவோம்.

    மதுரை ரீகல் தியேட்டரில், ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப் படம் பார்த்து விட்டு அவரைப் போலவே நடிக்கும் பாஸ்கரை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயம் ஓட்டல்களில் சர்வர்களிடம் பேசும்போது அவராக வேறுவித ஸ்டைலில் நடிப்பார். அதை நாங்கள் ரசிப்போம்.

    சில நேரம் பொருட்காட்சியில் பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் தாண்டிப் போயிருக்கும். கடைசி பஸ்சை தவறவிட்டு நடந்தே மீனாட்சி நிலையம் ரூமிற்கு வந்ததுண்டு.

    அந்த நேரத்தில் ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது. நான், பாஸ்கர், பாரதி மூவரும் சத்தம் போட்டு பேசி சிரித்தபடி, பல சமயங்களில் உரத்த குரலில் பாடிக்கொண்டே நடந்து வருவோம்.

    இதில் பாஸ்கர்தான் எங்களுக்கு ஹீரோ. அவரை வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கும் பாரதிக்கும் பிடித்தமான ஒன்று.

    ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் தங்கும் விடுதியில் உள்ள மீனாட்சி நிலையத்தில் தங்கியிருந்தபோது ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு நடிகை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.

    இந்தியாவிற்கு `டிவி' வரும்முன் "டிவி'' என்பது எப்படி இருக்கும்? டிவி நிகழ்ச்சிகள் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்பதை விளக்க, ஒரு வடநாட்டு கோஷ்டி மதுரை பொருட்காட்சியில் ஸ்டால் போட்டிருந்தது. அதில் ஒரு பெண் மேக்கப்புடன் ஆட, அதைக் காமிரா படம் பிடிக்க, பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த டிவி ஸ்கிரீனில் அதை எல்லாரும் காணும்படி ஒளிபரப்பினார்கள்.

    இந்த டிவி நடிகைக்கு நாங்கள் தங்கியிருந்த மீனாட்சி நிலையத்தில் ரூம் கொடுத்திருந்தார்கள். அதுவும் எங்கள் ரூமுக்கு அடுத்த ரூம்.

    நாங்கள் பகல் வேளையில் ரூமில் பயிற்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் வாசித்து பழகிக்கொண்டிருப்போம்.

    அப்போது சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு'' படம் ரிலீசான நேரம். ஆதலால் அந்தப் படத்தின் பாடல்களையும் பாடி வாசித்துக் கொண்டிருப்போம்.

    இப்படி வாசிக்கிற நேரத்தில் அந்த டிவி பெண்ணும் அடிக்கடி எங்கள் கண்ணில் படும். ஆனால் பேச வேண்டுமென்றோ, பழகவேண்டுமென்றோ எந்தவிதமான எண்ணமும் எங்களில் யாருக்கும் கிடையாது.

    ஒருமுறை பொருட்காட்சியை சுற்றி விட்டு நான், பாஸ்கர், பாரதி, காமராஜ் (இன்னொரு நண்பர்) என நால்வரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். அங்கே புறப்படத் தயார் நிலையில் இருந்த பஸ்தான் கடைசி பஸ் என்று யாரோ சொல்லிவிட, ஓடிப்போய் ஏறிக்கொண்டோம்.

    கடைசி வரிசையில் 3 சீட் காலியாக இருந்தது. என்னைத்தவிர மற்ற மூவரும் அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.

    எனக்காக ஒரு சீட் தேடிப் பார்த்தேன். டிரைவருக்குப் பின் இருந்த சீட்டில் அந்த டிவி பெண் உட்கார்ந்திருக்க, காலியாக இருந்த ஒரேயொரு எதிர் சீட்டில் நான் உட்கார்ந்தேன்.

    என்னைப் பார்த்ததும் அந்தப் பெண் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே பாவமன்னிப்பு படப்பாடலான "அத்தான் என்னத்தான்'' பாடலை மெதுவான குரலில் பாடத் தொடங்கினாள். அந்தப்பெண் பாடகி அல்ல; எனவே, குரல் சாதாரணமாக கீழ் ஸ்தாயியில் ஒலித்தது.

    அதைக் கேட்ட மாத்திரத்தில் நான் "ஓ'' என்று கதறி அழ ஆரம்பித்தேன். அத்துடன் நில்லாமல், பாஸ்கர், பாரதி இருந்த கடைசி சீட்டுக்கு, அழுதபடி வேகமாக ஓடினேன்.

    பஸ்சில் இருந்த எல்லாரும் "என்னவோ ஏதோ'' என்று  பார்த்தார்கள். நான் எதற்காக அழுகிறேன் என்பது அந்தப் பெண்ணுக்கும்

    புரியவில்லை.கேவிக்கேவி அழுதவாறு வந்த என்னை, "ஏய்! என்ன? என்னாச்சு?'' என்று அவர்களும் புரியாமல் கேட்டார்கள்.

    இப்போதும் நான் அழுகையை மட்டும் தொடர, "சொல்லித் தொலையடா'' என்றார் பாஸ்கர், ஆத்திரமாய்.

    நான் அந்தப் பெண்ணை சுட்டிக் காட்டினேன். "அதோ அந்த அம்மா பாடுறாங்க'' என்றபடி அழுகையை தொடர்ந்தேன்.

    இப்போது, என் குசும்பு பாரதி, பாஸ்கர் ஆகியோருக்குப் புரிந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்தார்கள்.

    "என் டென்ஷன் உங்களுக்கெல்லாம் சிரிப்பாய் போச்சுதா?'' என்று நான் அழுவதற்கு மறுபடியுமாய் குரலை உயர்த்தியபோது, கண்டக்டர் அருகில் வந்தார். என் தோளில் கைபோட்டவர். "அண்ணே! விடுண்ணே'' என்றார்.

    என்னுடைய இந்த கிண்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு அப்போது எப்படி இருந்ததோ தெரியாது...

    திடீரென ஒருநாள் அந்தப் பெண்ணின் ப டம் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களில் காணப்பட்டது.

    படத்தில் அவர் பெயரைப்போட்டு `கதாநாயகியாக நடிக்கும்' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

    "ஏய்! இது அந்த டெலிவிஷன் பொண்ணுல்ல?'' என்று அதிசயித்தோம்.

    அந்தப்படம் வெளிவந்து அதன் மூலம் பெரிய கதாநாயகியாகிவிட்ட அந்த நடிகையை யாரென்று சொல்ல நான் விரும்பவில்லை.
    Next Story
    ×