search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சத்யராஜின் மகன் சிபி நடிக்க வந்தது எப்படி?
    X

    சத்யராஜின் மகன் சிபி நடிக்க வந்தது எப்படி?

    படிப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்த தன் மகன் சிபி, நடிக்க வந்தது எப்படி என்பதை நடிகர் சத்யராஜ் விளக்கினார்.

    சத்யராஜ் குடும்பத்தில் எல்லோருமே படித்து பட்டம் பெற்றவர்கள்.

    சத்யராஜ் கோவை அரசு கலைக்கல்லூரியில் "பி.எஸ்சி'' பட்டப்படிப்பை முடித்தவர். அதன் பிறகே நடிக்க வந்தார். மனைவி மகேஸ்வரி, உடுமலைப்பேட்டை விசாலாட்சி கல்லூரியில் "பி.ஏ'' பட்டம் பெற்றார். `கல்லூரியில் படிப்பை முடித்து செல்லும் சிறந்த மாணவியாக கல்லூரி நிர்வாகம் இவரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்தது.

    சத்யராஜ் தம்பதிகளுக்கு ஒரு மகள், ஒரு மகன்.

    மகள் திவ்யாவும் நிறைய படித்தவர். அயல்நாட்டு வர்த்தகப் படிப்பு, மனிதவள மேலாண்மைத் துறை படிப்பு, அதோடு மனோதத்துவ கவுன்சிலிங்கில் எம்.பில். முடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி நாட்களில் படிப்பில் முதல் மாணவியாகவே இருந்திருக்கிறார்.

    மகள் பற்றி சத்யராஜ் கூறும்போது, "பெரியார் கண்ட புதுமைப்பெண் என்று திவ்யாவை தாராளமாக சொல்லலாம். இன்றைய சமுதாயத்தின் பெண்ணியவாதியாகவும் பார்க்க முடிகிறது'' என்றார், பெருமிதத்துடன்.

    "மகன் சிபி நடிக்க வந்தது எதிர்பாராதது'' என்கிறார், சத்யராஜ். அப்படியானால் நடிப்பு ஆர்வம் சிபிக்குள் எப்போது, எப்படி வந்தது?

    சத்யராஜ் கூறுகிறார்:-

    எங்கள் வீட்டில் படிப்பை சாதாரணமாக நினைத்துக் கொண்டது நான் மட்டும்தான். பார்டரில் பாஸ் பண்ணினால் போதும் என்பதுதான், சிறுவயது முதலே என் கல்விக் கொள்கையாக இருந்தது.

    நான் பள்ளியில் சேர்ந்ததே இரண்டாம் வகுப்பில் இருந்துதான். முதல் வகுப்புக்கு போகவில்லை. வயது அடிப்படையில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். நிறைய மார்க், முதல் மாணவன் என்ற கனவெல்லாம் கிடையாது. ஒருமுறை பள்ளியில் பரீட்சை வந்தது. முதல் பரீட்சை கணக்குப் பரீட்சை. ஒரு மணி நேரம் வரை கணக்கு போட்டுக்கொண்டிருந்த நான், அதுவரை போட்ட கணக்குகளுக்கு எவ்வளவு மார்க் கிடைக்கும் என்று கூட்டிப்பார்த்தேன். 40 மார்க்குக்கு மேல் வரும் என்பது தெரிந்ததும் உடனே பேப்பரை மடித்து ஆசிரியர் கையில் கொடுத்து விட்டு வீட்டுக்குப் போய் விட்டேன்.

    பரீட்சை தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள் நான் வீட்டுக்குப் போனது அம்மாவுக்கு அதிர்ச்சியாகி விட்டது. நானாகவே அம்மாவுக்கு விளக்கம் கொடுத்தேன். "மொத்தம் நூறு மார்க்குக்கு 40 மார்க் வரை சரியாக எழுதிட்டேன். பாஸ் ஆனா போதாதா? அதுதான் பேப்பரை ஆசிரியர் கிட்ட கொடுத்துட்டு வந்திட்டேன்'' என்றேன்.

    படிப்பில் நான் இப்படி என்றால், சிபி எனக்கு நேர் எதிர். எப்போதும் முதல் ரேங்க்தான் வாங்குவான். அவன் படிப்பில் `நம்பர் ஒன்னாக இருந்ததால் 6-ம் வகுப்பில் டபுள் புரமோஷன் கொடுத்தார்கள். அதன்படி 7-வது வகுப்புக்கு போகாமலே 8-வது வகுப்புக்கு போய்விடலாம். ஆனால் சிபி அப்படிப்போக மறுத்து விட்டான்.

    "போயிருக்கலாமே'' என்று நான் சொன்னபோது, சிபியோ, "வரிசையாகவே வரேன். இப்ப நான் `திடுதிப்பென 8-வது போய்விட்டால் அங்கே இதுவரை முதல் இடத்தில் இருக்கிற பையனோடு படிப்பில் மல்லுக்கட்ட வேண்டிவரலாம்'' என்றான்.

    ஒருமுறை எப்படியோ முதல் ரேங்க் மிஸ்சாகி இரண்டாவது ரேங்க் வந்தான். அதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. நான் சமாதானப்படுத்திப் பார்த்தேன். அவன் கேட்பதாயில்லை. கட்டிலில் புரண்டு புரண்டு அப்படி ஒரு அழுகை அழுதான். அடுத்த பரீட்சையில் முதலிடம் வந்த பிறகே முகத்தில் மறுபடியும் மலர்ச்சியை பார்க்க முடிந்தது.

    படிக்கிற நாட்களில் விஜய் ரசிகனாக இருந்தான். ஆனால் நடிப்பு அவனை எப்படி, எப்போது ஈர்த்தது என்பது எங்களுக்கே ஆச்சரியம். கல்லூரியில் `பி.காம்' மூன்றாம் ஆண்டு படிக்கிறபோதுதான் அவனது நடிப்பு ஆர்வம் தெரிய வந்தது. தனது நடிப்பு ஆசையை சிபியே எங்களிடம் சொன்னபிறகுதான், மகனுக்குள் இருந்த நடிகனை பார்க்க முடிந்தது.

    நடிக்க வரும்போது சினிமாவுக்கான நடனம், சண்டைப்பயிற்சி என அவரே தயாராகிக் கொண்டார். தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர். நடித்து பெரும் வெற்றியை எட்டிய `ஸ்டூடண்ட் நம்பர் ஒன்' படத்தை தமிழில் ரீமேக் செய்தார், டைரக்டர் செல்வா. கல்லூரி, இளமை, காதல் என்று அமைந்து இளைஞர்களின் விருப்பப்படமாகிய இந்தப்படம் சிபிக்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைக்கச் செய்தது.

    தொடர்ந்து `ஜோர்', `மண்ணின் மைந்தன்', `வெற்றிவேல் சக்திவேல்', `கோவை பிரதர்ஸ்', `லீ' என எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமான கேரக்டர்கள்.

    சிபிக்கு முழுக்க ஆக்ஷன் பரிவாரங்களுடன் ராம.நாராயணன் டைரக்ஷனில் அமைந்த படம் `மண்ணின் மைந்தன்! இந்தப் படத்தில் நடிக்கும்போது சிபிக்கு 22 வயது. படத்தின் தொடக்க விழா கலைஞர் தலைமையில் நடந்தது. படத்தின் நாயகன் என்ற முறையில் சிபியும் மேடையில் பேசவேண்டி வந்தது.

    மேடையில் பேச தயங்கிய சிபியிடம், "கலைஞர் இருக்கிற மேடையில் மட்டும் தைரியமாக பேசி விட்டால், உலகத்தில் எங்கே வேண்டுமானாலும் உன்னால் பேசமுடியும்'' என்று சொன்னேன். இன்று சிபி சினிமா மேடைகளில் சகஜமாக பேசக்காரணமே, அன்று கலைஞர் இருந்த மேடையில் பேசியதால் கிடைத்த தைரியம்தான்.

    படிக்கிற நாட்களில் சிபியிடம் ஒரு வேகம் இருந்தது. நடிக்க வந்த பிறகு, வேகத்தோடு விவேகமும் சேர்ந்திருக்கிறது. இப்போது கதை விஷயத்தில் அதிகம் அக்கறை காட்டுகிறார். ஒரு விளையாட்டு வீரனின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்த "லீ'' படம் சிபிக்கு திருப்பு முனையாகவே அமைந்தது.

    "லீ'' படத்துக்குப் பிறகு கேட்டு வந்த பத்து பதினைந்து படங்களை தவிர்த்திருக்கிறார். கதையும் நன்றாக அமைந்து அதில் தானும் வெளிப்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே ஒப்புக்கொள்கிறார். கதை அவருக்குப் பிடித்தால் என்னிடம் அந்தக் கதை பற்றி விவாதிக்கிறார். எனக்கும் திருப்தி என்றால் ஒப்புக் கொண்டு விடுகிறார்.

    இப்போது வி.என்.சுந்தர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து டைரக்டர்கள் செல்வா, ஜான் (`சச்சின்' இயக்குனர்) படங்களையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

    இந்தியிலும், தெலுங்கிலும் புகழ் பெற்ற தயாரிப்பாளர் - டைரக்டர் ராம்கோபால் வர்மா, சிபியை ஹீரோவாக்கி தமிழிலும் தெலுங்கிலும் ஒரு படம் தயாரிக்கிறார். மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாகவும் சிபியை ஆக்ஷனில் முன்னிறுத்தும் படமாகவும் இது அமையும்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    சத்யராஜ் இப்போது `தங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து

    கூறியதாவது:-"பெரியார்'', "ஒன்பது ரூபாய் நோட்டு'' படங்களில் நடித்த பிறகு இனி புதுசாக என்ன நடித்துவிடப்போகிறீர்கள் என்று என்னிடம் கூட நண்பர்கள் கேட்டார்கள். சமீபத்தில் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் என்னை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கொண்டு சேர்ந்திருந்ததால் ஏற்பட்ட கேள்வி இது. எல்லாவித நடிப்பிலும் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்பவனே நல்ல கலைஞன்.

    இதை மனதில் வைத்து "வேலை கிடைச்சிடுச்சு'' மாதிரியான கதைப் பின்னணியில் காமெடி இணைத்து டைரக்டர் கிச்சா சொன்ன "தங்கம்'' படத்தில் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கவுண்டமணி அண்ணனும் என்னுடன் காமெடிக் கூட்டணி போடுகிறார்.

    படத்தில் நாங்கள் பண்ணும் ஒவ்வொரு காமெடி அலம்பலுக்கும் ரசிகர்கள் வெடிச்சிரிப்பில் குலுங்கப் போகிறார்கள். `கரகாட்டக்காரன்' படத்தில் இடம் பெற்று இன்றைக்கும் பேசப்படும் "வாழைப்பழ காமெடி'' மாதிரி இந்தப் படத்திலும் ஒரு காமெடி இருக்கிறது. இந்தக் காட்சியில் நடித்த போது எங்களாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷலாக எம்.ஜி.ஆரின் "நினைத்ததை முடிப்பவன்'' படப்பாடலான "பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த'' பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். கெட்டப்பிலேயே நடிக்கிறேன். கதைப்படி, தங்கை மீது உயிரையே வைத்திருக்கிற நான், தங்கையின் திருமணம் சிறப்பாக நடப்பதாக காணும் கனவே இந்தப்பாட்டு. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். மேக்கப்பில் வர அவர் நடித்த காலங்களில் பயன்படுத்திய அதே வகை பான்கேக்கை பயன்படுத்தி மேக்கப் போட்டேன். பொருத்தமாக அமைந்தது மேக்கப். பாடல் காட்சியிலும் "நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆரை'' பார்க்க முடியும்.

    நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அந்த உரிமையில் அவர் பாடிய பாடலுக்கு அவர் தோற்றத்தில் நான் ஆடுவதை எனக்குக் கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்.

    நடிப்பை பொறுத்தவரையில் ரசிகர்கள் விரும்புகிற நடிகனாக நடிப்பேன்; நீடிப்பேன் என்ற நம்பிக்கை எப்போதுமே எனக்கு உண்டு.''

    உற்சாகமாகவே சொல்கிறார், சத்யராஜ்.
    Next Story
    ×