search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    `ஒன்பது ரூபாய் நோட்டு தயாரானபோது சத்யராஜ்க்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்கள்
    X

    `ஒன்பது ரூபாய் நோட்டு' தயாரானபோது சத்யராஜ்க்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்கள்

    "ஒன்பது ரூபாய் நோட்டு'' படத்தில் மாதவ படையாச்சியாக வாழ்ந்து காட்டினார், சத்யராஜ்.

    படப்பிடிப்பின்போதும், படம் வெளியான பிறகும் அவருக்கு ஏற்பட்ட அபூர்வ அனுபவங்கள் பல.

    அவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார், சத்யராஜ்:

    "பெரியார் படத்தில் நடித்த காலகட்டத்திலேயே `கண்ணாமூச்சி ஏனடா' என்றொரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். கதையும், அதில் என் கேரக்டரும் வித்தியாசமாக இருந்ததால் ஒப்புக்கொண்டு நடித்தேன்.

    இந்தப் படத்தின் தனிச்சிறப்பே, அதில் பெண்களுக்கு கிடைத்த அதிகபட்ச இடஒதுக்கீடுதான்! படத்தின் தயாரிப்பாளர் ராதிகா, டைரக்டர் பிரியா, கேமராக் கலைஞர் பிரீத்தா -இப்படி முக்கிய பொறுப்புகளை பெண்களே சுமந்த படம்.

    இவர்களில் குறிப்பாக கேமரா கலைஞர் பிரீத்தா கேமராவை தோளில் சுமந்தபடி பல காட்சிகளை உற்சாகமாக படம் பிடித்தபோது, தொழிலை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது புரிந்தது. இந்த வகையில் கலைப்பங்களிப்பிலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பதை படத்தின் வெற்றியிலும் இவர்கள் நிரூபித்தார்கள்.

    ஒரு படத்தில் என் நடிப்பு சிறப்பாக அமைகிறதென்றால், அதற்குப் பின்னணியில் தயாரிப்பு, டைரக்ஷன், கேமரா மற்றும் டெக்னிஷியன்கள் என்று பலரும் இந்த சிறப்புக்கு முன்னாகவும், பின்னாகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த வகையில் பல்வேறு கேரக்டர்கள் மூலம் என்னை வார்த்தெடுத்த "அமைதிப்படை'', "வால்டர் வெற்றிவேல்'', "காக்கிச்சட்டை'', "பூவிழி வாசலிலே'', "பெரியார்'' போன்ற படங்களின் வரிசைக்குப்பின் நிச்சயமாய் அந்தப் படங்களின் இயக்குனர்கள் இருக்கிறார்கள். எனவே எதையும் என் வெற்றி என்று சொல்வதற்கில்லை. ஒரு கூட்டு முயற்சியில் விளைகிற வெற்றி என்றே இதை சொல்வேன்.

    "கண்ணாமூச்சி ஏனடா'' என்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தியது என்றால், என்னை ரசிகர்களிடம் உணர்ச்சிபூர்வமாக கொண்டு சேர்த்த படம் "ஒன்பது ரூபாய் நோட்டு.'' 3 வருடத்துக்கு முன்பே, தங்கர்பச்சானின் இந்தக் கதையை ஆஸ்கார் மூவிஸ் சார்பில் எம்.பாஸ்கர் தயாரிக்க இருந்தார்.

    அந்த சமயத்தில் ஒரு நாள் இரவு 11 மணிக்கு என்னை போனில் தொடர்பு கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான், "உங்களை பார்க்க வேண்டுமே'' என்றார். "உடனே வாருங்கள்'' என்றேன். வந்தவர் என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து, "இது நான் எழுதிய `ஒன்பது ரூபாய் நோட்டு' நாவல். இதில் வருகிற மாதவபடையாச்சி கேரக்டரில் நீங்கள் நடித்தால் என் கற்பனைக்கு உயிர் கிடைக்கும்'' என்றார்.

    நான் அவரிடம், "கதை என்னன்னு சொல்லுங்க. எனக்கு முடிவு சொல்ல வசதியாய் இருக்கும்'' என்றேன். அவரோ விடாப்பிடியாக, "இல்லண்ணே! படிச்சுப்பாருங்க. இதுல வர்ற குடும்பத் தலைவர் மாதவபடையாச்சி கேரக்டர் உங்களை கவர்ந்தால் நடிக்கிறீங்க'' என்றார்.

    ஒரு தலைசிறந்த படைப்பாளி மட்டுமே தான் வாழ்கிற சூழ்நிலையை அப்படியே தனது படைப்புகளில் கொண்டுவரமுடியும். அதை "ஒன்பது ரூபாய் நோட்டு'' நாவலை படித்தபோது என்னால் முழுமையாக உணர முடிந்தது.

    நிஜமாகவே `மண்ணின் மைந்தர்' என்று கொண்டாடும் அளவுக்கு உயிரோட்டமான ஒரு உணர்வுக் குவியலை படைத்திருந்தார், தங்கர்பச்சான். நான் அவரிடம், "பெரியார் படத்தில் நடிக்கும்போது எனக்கு சில பொறுப்புகள் இருந்தன. பெரியாரை சுவாசிக்கும் கலைஞரை திருப்திப்படுத்த வேண்டும். பெரியாரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் வீரமணியை திருப்திப்படுத்தவேண்டும்.

    பெரியாரின் தொண்டர்களை திருப்திப்படுத்தவேண்டும். பெரியார் படத்தில் இது எல்லாமே நிறைவாக அமைந்தது. நான் 30 வருடத்தில் 170 படம் நடித்து முடித்திருக்கிறேன். என்றாலும் "மாதவ படையாச்சி'' எனக்குப் புதுமுகம்தான். நீங்கள் `வா' என்றால் வருவேன். `போ' என்றால் போவேன். `திரும்பு' என்றால் திரும்புவேன். மாதவபடையாச்சிக்கான இலக்கணம் அப்போதுதான் முழுமையாகும்'' என்றேன்.

    கோவை, ஈரோடு மாவட்டங்களில் பேசப்படும் `கொங்குத்தமிழை' பெரியார் படத்தில் பேசினேன். நான் கோவை மாவட்டத்துக்காரன் என்பதால் இப்படிப்பேச எளிதாய் இருந்தது. அதுமாதிரி முந்தைய படங்களில் நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் பேசியிருக்கிறேன். நண்பர் விஜயகாந்த், வடிவேல் போன்றவர்களுடன் பேசிப்பேசி மதுரைத்தமிழ் அத்துப்படியாகி விட்டது. "மந்திரப்புன்னகை'' படத்துக்காக வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் நெல்லைத் தமிழ் கற்றுத்தந்தார்.

    முதன் முதலாக தென்தமிழகத்தில் இருந்து விலகி வட தமிழகப் பகுதியில் நடக்கிற கதை. அவர்களின் தமிழ் உச்சரிப்பு முற்றிலும் எனக்குப் புதுசு. நெல்லையில் `என்ன' என்பதை சென்னை பாஷையில் `இன்னா' என்கிறார்கள். இந்தக் கதையில் வருகிற கேரக்டர்களோ `இன்ஞா' (அதாவது நா-ஞா இரண்டு உச்சரிப்புக்கும் இடைப்பட்ட கலவை) என்கிறார்கள். இந்த உச்சரிப்புக்குள் பழகும்வரை கொஞ்சம் சிரமப்படவே செய்தேன். ஆனாலும் கதைக்குள் வந்த பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை.

    பத்திரக்கோட்டை மண்ணில் விழுந்து நான் அழுகிற காட்சியைத்தான் முதலில் படமாக்கினார் தங்கர்பச்சான். காட்சி படமானதும் ஓடிவந்து என் கையை பிடித்துக்கொண்டவர், "அண்ணா! எனக்கு என் மாதவ படையாச்சி கிடைச்சிட்டார்'' என்றார், குதூகலக் குரலில்.

    அடுத்து நான் கோவணம் கட்டி கிராமத்து குழாயடியில் குளிக்கிற காட்சி. இந்த காட்சியை எடுப்பதற்காக ஊரின் மெயின்ரோட்டில் குழாய் பதித்து விட்டார் தங்கர். இரவு 10 மணிக்கு மேல் இந்த காட்சியை எடுக்கிறார்கள்.

    நான் படப்பிடிப்புக்கு புறப்படும்போது என் உதவியாளர் ஓடிவருகிறார். என் காதருகே, "சார்! இந்தப் படத்தின் படப்பிடிப்பை பார்க்க ஜனங்கள் கயிறு கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். எப்படியும் ஆயிரத்துக்கு மேல் இருப்பார்கள். அதோடு படப்பிடிப்பை பார்க்க பஸ், லாரிகளில் இருந்தும் நிறைய பேர் வந்து `திருவிழா' தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள்'' என்றார்.

    உதவியாளர் எதற்காக இதைச் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும். நான் என் உதவியாளரிடம், "கோவணம் தமிழனின் பூர்வீக உடைதானே! அப்படி நடிக்க நான் ஏன் வெட்கப்படணும்? இந்த உடையில்தானே நம்ம ஊர் விவசாயி `ஏர்' பிடித்து உழுகிறார்! எனவே கோவணம் அணிந்து நடிப்பதில் நான் பெருமைதான் படணும்'' என்றேன்.

    படப்பிடிப்பு முடிந்து `டப்பிங்' பேசும்போது டப்பிங் தியேட்டருக்கு நடிகை அர்ச்சனாவும் வந்திருந்தார். படத்தில் என் மனைவியாக நடித்தது அவர்தானே. நான் நடித்த காட்சிகளை டப்பிங் தியேட்டரில் அவர் பார்த்தபோது, கண் கலங்கி விட்டார். அப்போது அவர் என் கையை பிடித்துக்கொண்டு "உங்களுக்கு எல்லா விருதுகளும் கிடைக்கும்'' என்றார், குரல் தழுதழுக்க.

    நான் பல படங்களில் சிறப்பாக நடித்து முடித்திருந்தாலும்கூட, எனக்கு தேசிய விருது பெற்றுத்தரும் நடிப்புக்கான அளவுகோல் தெரியாது. ஆனால் அர்ச்சனாவோ சிறந்த நடிப்புக்காக 2 முறை தேசிய விருது பெற்றவர். அவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை பாராட்டியபோது, படத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களுக்கும் அப்போதே விருது கிடைத்த சந்தோஷம் எனக்குள்.

    படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என் பேரன் பசியால் துடிக்கிற காட்சியை நடுராத்திரி முந்திரிக்காட்டுக்குள் படமாக்கினார் தங்கர்பச்சான். செருப்புகூட இல்லாமல் மறுபடி சொந்த ஊருக்கு வரும் மாதவபடையாச்சி, பசியால் கதறும் பேரனை பார்த்து கண்கலங்குவது காட்சி. சுற்றிலும் காட்டுப்பகுதியான அந்த இடத்தில், ஒரு குடிசை போட்டு காட்சியை படமாக்கினார்கள். காட்சிக்கு முன் தங்கர்பச்சான் என்னிடம், "சார்! இருட்டில் உங்கள் காலுக்குக்கீழ் ஏதாவது நெளிவதாக உணர்ந்தால் உடனே காலை உதறி விடுங்கள்'' என்றார்.

    நான் எதற்காக அப்படிச் சொல்கிறார் என்பது புரியாமல் அவரை பார்க்க, அவரோ, "முந்திரிக்காட்டுப்பகுதி அல்லவா? தேள், பாம்பு, நட்டுவக்காலி எல்லாம் சர்வசாதாரணமாக நடமாடும். அதனால்தான் சொன்னேன்'' என்றார். எனக்கு திகிலாகிவிட்டது. ஆனாலும் பயப்படாமல் (அல்லது பயப்படுவதை காட்டிக்கொள்ளாமல்) நடித்தேன்.

    என்றாலும் `பாம்பு' பயத்தையும் தாண்டி அந்தக்காட்சியில் நடித்தபோது, ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு பசியாற்ற முடியாத மாதவபடையாச்சி உணர்வு என்னை பாதிக்க, நானும் அழுதுவிட்டேன்.

    படம் தயாரானபோது, கலைஞர் பார்த்தார். படம் முடிந்து வந்தபோது அவர் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்தேன். கலைஞருடன் வந்திருந்த நடிகர் நெப்போலியன், என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறிவிட்டார்.

    ரஜினி சார் பார்த்துவிட்டு, "படத்தில் பங்கேற்ற எல்லோருக்குமே விருது நிச்சயம். குறிப்பாக உங்களுக்கு விருது உறுதி'' என்று வாழ்த்தினார்.

    நடிகர் பிரபு படம் பார்த்துவிட்டு, "தலைவரே! உங்களுக்கு எல்லா விருதுகளும் கிடைக்க உங்கள் சார்பில் நான் கடவுளை வேண்டிக்கிறேன்'' என்றார்.

    கம்ïனிஸ்டு தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு ஆகியோரும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

    படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டும், வரவேற்பும் கிடைத்திருப்பதை பார்க்கும்போது `மாதவ படையாச்சி'யாக வாழ்ந்ததற்கு கிடைத்த வெகுமதியாகவே அதை உணர்கிறேன்''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    Next Story
    ×