search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பெரியார் படம் உருவானது எப்படி? சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்
    X

    பெரியார் படம் உருவானது எப்படி? சத்யராஜ் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

    பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.
    பெரியார் வேடத்தில் நடித்தது பற்றியும், படப்பிடிப்பின்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நடிகர் சத்யராஜ் விவரித்தார்.

    பல்வேறு கேரக்டர்களில் நடித்திருந்தாலும் சத்யராஜ் நடிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது `பெரியார்' படம். இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    `பாரதி' டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்தார். எடுத்த எடுப்பிலேயே, "சார்! பெரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களை படமாக எடுக்கலாம். நீங்கள் பெரியாராக நடிக்கிறீர்கள்'' என்றார்.

    எப்போதோ சொன்னது இப்போது நடந்துவிடும் போலிருக்கிறதே என்று உள்ளுணர்வு சொன்னாலும், பெரியார் வேடத்துக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்பது தெரியவில்லையே! எனவே, என் சந்தேகத்தை கேள்வியாக்கி, "நீங்கள் பெரியார் படம் பண்றது நல்ல விஷயம். ஆனால் நான் பெரியார் தோற்றத்துக்கு எந்த அளவுக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தெரியவில்லையே'' என்றேன்.

    நான் இப்படிச் சொல்வேன் என்று எதிர்பார்த்தோ என்னவோ, சட்டென ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார், ஞானராஜசேகரன்.

    கம்பீரத் தோற்றத்தில் காணப்பட்ட ஒரு இளைஞரின் படம் அது. படத்தை பார்த்ததும், "யார் இந்த இளைஞர்? காக்கி சட்டை படத்தில் நான் இருந்த தோற்றத்தையொட்டி காணப்படுகிறாரே?'' என்றேன், ஆச்சரியமாய்!

    ஞானராஜசேகரனோ, "சார்! பெரியாரின் 25 வயதில் எடுத்த படம் அது. பெரியாரின் சாயல் உங்களிடமும் இருப்பதால், படத்துக்கு தாடி, மீசை வைத்து கிராபிக்ஸ் செய்து பார்த்தேன். உங்களுக்கு அச்சாகப் பொருந்துகிற மாதிரி அமைந்திருக்கிறது'' என்றார். "எனக்கும் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற லட்சியம் உண்டு. அதைத்தான் மேடையிலும் வெளிப்படுத்தினேன். உங்கள் டைரக்ஷனில் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளரை தயார் செய்துவிடுங்கள்'' என்றேன்.

    ஆனால் தயாரிப்பாளர்தான் கிடைத்தபாடில்லை. பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரித்தால் `சாமி கண்ணைக் குத்திவிடும்' என்று தவறாக எண்ணிக் கொண்டு ஒதுங்கினார்களோ என்னவோ!

    இதற்கிடையே நானும் மற்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் ஒருமுறை கி.வீரமணியை சந்தித்தேன். அவரை `ஆசிரியர் ஐயா' என்றே அழைப்பேன். நான் அவரிடம் "பெரியார்'' படம் தொடர்பாக டைரக்டர் ஞானராஜசேகரன் என்னை சந்தித்த விவரத்தை சொன்னேன். அதோடு தயாரிப்பாளர் கிடைக்காததால்தான் படம் தொடங்குவதில் தாமதம் என்பதையும் விவரித்தேன்.

    "தயாரிப்பாளர் கிடைப்பதுதான் பிரச்சினை என்றால் நாங்களே தயாரிக்கிறோம்'' என்று அவர் முன்வந்தார். "பெரியாரின் தொண்டர்கள் தயாரிப்பில் பங்கேற்பார்கள். எனவே பட வேலைகளை தொடங்கச் சொல்லுங்கள்'' என்றார்.

    ஆசிரியர் வீரமணி பற்றி நான் அவருடன் பழகிய நாட்களில் என் அனுபவத்தை சொல்லியாக வேண்டும். எப்போதுமே அவருடனான உரையாடலில் பெரியார் பற்றியும், திராவிடர் கழக செயல்பாடுகள் பற்றியுமே அதிகம் இடம் பெறும். அவரது ஒரு மகள் அருள் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகளை பார்க்க அமெரிக்கா போய் வந்த நேரத்தில் அவரை சந்தித்தபோதுகூட, மகள் பற்றியோ மகளின் குடும்பம் பற்றியோ, அமெரிக்கா பற்றியோ அவர் பேசவில்லை. `அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் கூட பெரியாரை பார்க்க முடிகிறது' என்பதையே பரவசமாய் சொல்லிக் கொண்டிருந்தார்.

    சிங்கப்பூரில் வாழும் தமிழர்களின் நேசத்துக்குரிய தமிழ்த் தலைவராக இருந்தவர் `தமிழ்வேள்' கோ.சாரங்கபாணி. அவரது 125-வது ஆண்டு விழா சிங்கப்பூரில் கொண்டாடப்பட்ட நேரத்தில், தந்தை பெரியாரின் நினைவு நாளையும் இணைத்து கொண்டாடினார்கள். இதில் கலந்து கொள்ள ஆசிரியர் வீரமணி தனது மனைவியுடன் புறப்பட்டார். அப்போது என்னையும் குடும்பத்துடன் வருமாறு கேட்டுக்கொண்டதால் என் மனைவியுடன் பயணப்பட்டேன்.

    சிங்கப்பூருக்கு போன பிறகுதான் அவருக்கு அங்கே கவிதா என்ற மகள் இருப்பதே எனக்குத் தெரியவந்தது. கவிதாவின் இல்லத்துக்குப் போனபோது அங்கேயும் பெரியார் பற்றிதான் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பெரியாராக நான் நடிப்பது பற்றி பேச்சு வந்ததும் ஆசிரியர் வீரமணியின் மனைவி என்னிடம், "பெரியார் வேஷத்துக்கு நீங்க பொருத்தமாகவே இருப்பீங்க. ஆனால் பெரியாரைவிட நீங்கள் உயரம் மட்டும் கொஞ்சம் அதிகம்'' என்றார். (படத்தில் உயரம் தெரியாதபடி சரிசெய்து கொண்டு விட்டோம்)

    "பெரியார்'' படத்தின் படப்பிடிப்பு ஒருவாறு தொடங்கியது. காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.

    காஞ்சீபுரம் கோவிலில் காலை 7 மணிக்கே பெரியார் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் `பெரியார்' படத்துக்கான காட்சிகளை கோவிலில் எடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை இதே நிலை நீடித்ததில் ரொம்பவே வருத்தமாகி விட்டது.

    அப்போது படப்பிடிப்புக்கு உதவியாக வந்த பெரியார் தொண்டர்களில் சிலர் என்னிடம் வந்து, "கண்டிப்பாகப் படப்பிடிப்பு நடக்கும் `அன்பு' பார்த்துக்குவார்'' என்றார்கள்.

    எட்டு மணி நேரம் முயன்றும் முடியாத ஒரு விஷயத்தை, `அன்பு' என்பவர் வந்து முடித்து விடுவார் என்கிறார்களே என்று

    ஆச்சரியப்பட்டேன்.அதுமாதிரியே அன்பு வந்தார். பேசவேண்டியவர்களிடம் பேசினார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது. என் ஆச்சரியம் இப்போது எல்லை தாண்டிவிட்டது. "யார் அந்த அன்பு'' என்று விசாரித்தபோது என் ஆச்சரியம் இன்னும் பல மடங்கானது. ஆசிரியர் வீரமணியின் மகன்தான் அந்த அன்பு!

    சமீபத்தில் ஆசிரியரின் 75-வது ஆண்டையொட்டி நடந்த விழாவின்போது முதல்-அமைச்சர் கலைஞர் கலந்து கொண்டார். அந்த விழாவுக்கு போயிருந்தபோது தான் அவருக்கு அசோக் என்றொரு மகன் இருப்பதும் தெரியவந்தது!

    இப்படி தங்களை மறைத்து பெரியாரின் கொள்கைக்காகவே வாழுகிற ஒரு குடும்பம் "பெரியார்'' படம் தயாரிக்க முன்வந்தது பொருத்தம்தானே.

    பெரியாரை டைரக்ட் செய்த ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். முடித்தவர். `பாரதி' படத்தின் மூலம் ஒரு `மகாகவி'யின் வாழ்க்கையை கவிதையாக திரைக்குத் தந்தவர் என்ற முறையில் அவர் மீது என் மரியாதை கூடியிருந்தது. இப்போது அவரே பெரியார் படத்தை உருவாக்கவும், தயாராகி இருந்தது வரலாற்றுத் தலைவர்கள் மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்தியது.
    அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது பெரியார் படம் எடுக்கும் ஆர்வத்தில் பெரியார் பற்றி ஐந்தாறு வருடமாக பல்வேறு ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. பெரியார் பற்றிய புத்தகம் எங்கே கிடைத்தாலும், அதை வாங்கி பெரியாரின் வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சேகரித்திருக்கிறார். அதுமாதிரி பெரியாருடன் பழகியவர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்திருக்கிறார்.

    இப்படியெல்லாம் அவர் முழுமையாக தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் நான் பெரியாராக நடிக்கும் என் ஆர்வத்தை வெளியிட்டு இருக்கிறேன். இருவரின் ஒருமித்த சிந்தனையும் எங்களை `பெரியாருக்குள்' இணைத்துவிட்டது.

    இந்த நேரத்தில்கூட எனக்கு பெரியாராக நடிப்பதில் ஒரு சின்ன தயக்கம் ஓடிக்கொண்டிருந்தது. பெரியாருடன் பழகியவர்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `பெரியார் நடிப்பில்' அவர்களை நான் திருப்திபடுத்தியாக வேண்டும். அதோடு பெரியார் வேடத்தில் நடிப்பதை நடிகர் திலகம் தனது லட்சியமாக வைத்திருந்தார். காலம் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்காமலே போய்விட்டது. இப்படி நடிகர் திலகம் விரும்பிய ஒரு கேரக்டரை நான் செய்யும்போது, ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் என் நடிப்பு அமையவேண்டும். இப்படி இரு தரப்பிலும் விரும்பும் விதத்தில் `பெரியாரை' சரியாக நடிப்பில் பிரதிபலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

    பெரியார் இளைஞராக இருந்த காலகட்டம் பற்றி யாரும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் முதிய தோற்றத்தில் அவரைப் பார்த்து உணர்ந்தவர்களுக்கு, என் நடிப்பு கொஞ்சம் மாறிப்போனால்கூட ஏமாற்றமாகி விடும். இப்படி நினைத்த நேரத்தில் 75 வயதில் பெரியார் நிகழ்ச்சி அடங்கிய கேசட்டை என்னிடம் தந்தார்கள். அதைப் போட்டுப் பார்த்தபோது பெரியாரின் குரல் நடுக்கம், அவர் உட்கார்ந்து பேசும் விதம் பற்றி கவனித்துக் கொண்டேன்.

    அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது "சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க!'' என்று சொல்வார் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியாருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற கலைஞரிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் பெரியார் உச்சரிக்கும் விதமாகவே இந்த `சந்தோசங்க' வார்த்தையை சொல்லிக் காட்டினார்.

    1967-ம் ஆண்டில் அறிஞர் அண்ணாவை தலைவராகக் கொண்ட தி.மு.கழகம் முதன் முதலாக தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியது. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்-அமைச்சர் அண்ணா தலைமையில் நாவலர், கலைஞர் உள்ளிட்ட அமைச்சர்கள் திருச்சியில் உள்ள பெரியார் மாளிகைக்குப் போய் பெரியாரை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெறுகிறார்கள்.

    தன்னால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும், மறக்காமல் தன்னைத் தேடி ஆசி பெற வந்ததை பார்த்தபோது பெரியார் மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். அதே உணர்வில் "சந்தோசங்க! ரொம்ப சந்தோசங்க'' என்று சொல்லி வாழ்த்தியிருக்கிறார்.

    இதை கலைஞர் என்னிடம் நடித்தே காட்டியபோது, பெரியார் அவருக்குள்ளும் எப்படி உள்வாங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

    கலைஞர் சொன்ன இதே சம்பவத்தை முன்பு பெரியார் இருந்த அதே திருச்சி `பெரியார் மாளிகை'யில் படமாக்கியபோது, என்னையும் மீறி ஒரு பரவசம் ஓடிக்கொண்டிருந்தது. இப்போது பெரியாராக நடிப்பது நானல்லவா?''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    Next Story
    ×