search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மகாநடிகன் படத்தில் பித்தலாட்டம் செய்யும் நடிகராக நடித்த சத்யராஜ்
    X

    மகாநடிகன் படத்தில் பித்தலாட்டம் செய்யும் நடிகராக நடித்த சத்யராஜ்

    "மகாநடிகன்'' படத்தில், பித்தலாட்டம் செய்யும் நடிகராக சத்யராஜ் நடித்தபோது, சினிமா வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. "இது வெறும் நடிப்புதான்'' என்று கூறிவிட்டு, துணிச்சலாக அந்தக் கேரக்டரில் நடித்தார், சத்யராஜ்.
    "மகாநடிகன்'' படத்தில், பித்தலாட்டம் செய்யும் நடிகராக சத்யராஜ் நடித்தபோது, சினிமா வட்டாரத்திலேயே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. "இது வெறும் நடிப்புதான்'' என்று கூறிவிட்டு, துணிச்சலாக அந்தக் கேரக்டரில் நடித்தார், சத்யராஜ்.

    "மகாநடிகன்'' படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "குரு தனபாலின் "பெரிய மனுஷன்'' படம் சரியாக ஓடாததால், என் நடிப்பு வாழ்க்கையில் மறுபடியும் சிறு தேக்க நிலை. இதை சரி செய்யக் கிடைத்தது டைரக்டர் சக்தி சிதம்பரத்தின் படங்கள். அவர் இயக்கிய "என்னம்மா கண்ணு'' படம் மூலம் மறுபடியும் `லொள்ளு' சமாச்சாரங்கள் தூவி விடப்பட்டன. ரசிகர்களும் அதை ரசிக்க, அது பெரிய வெற்றிப்படமானது. இந்தப் படத்தில் தேவயானி என் ஜோடியாக நடித்தார்.

    இதைத்தொடர்ந்து, சினிமா பின்னணியைக் கொண்ட "மகா நடிகன்'' என்ற கதையை உருவாக்கினார், சக்தி சிதம்பரம். ஒரு சாதாரண நடிகன் பல்வேறு தகிடு தத்தங்கள் மூலம் பெரிய நடிகனாகிற இந்தக் கதைக்கு, சினிமா வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பலாம் என்று தெரிந்தது. என்றாலும், அந்த கேரக்டர் மனிதாபிமானம் நிறைந்தது என்பதாக கதையில் முடிந்திருப்பதால், பிரச்சினை கிளம்பாது என்றும் நினைத்தோம்.

    படத்தை தயாரித்த முருகன், எனது டைரக்ஷனில் உருவான "வில்லாதி வில்லன்'' படத்திற்கு ஆர்ட் டைரக்டராக இருந்தவர். படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே படத்தில் இடம் பெறும் காரசார வசனம் குறித்து அவருடன் பேசினேன்.

    "படத்தை இயக்கும் சக்தி சிதம்பரத்திடம் யாராவது கேட்டால், "நான் டைரக்டர் மட்டும்தான். வசனத்தை சத்யராஜ்தான் பேசினார்'' என்று என்னை கைகாட்டி விடுவார். என்னிடம் கேட்பவர்களிடம், "நான் என்ன செய்யட்டும்? டைரக்டர் சொல்கிறபடிதானே நடிகன் செய்ய முடியும்?'' என்று டைரக்டரை கைகாட்டிவிட்டு, நான் தப்பி விடுவேன்.

    கடைசியில் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்'' என்றேன். தயாரிப்பாளர் முருகனோ முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. "சார்! இந்தக் கதையின் பிற்பகுதியில் நாம் சொல்லப்போகும் மெசேஜ், முற்பகுதியில் ஏற்படும் அத்தனை சலசலப்புகளையும் சரி செய்துவிடும். அதையும் தாண்டி ஏதாவது பிரச்சினை என்றால் அதை நான் பார்த்துக்கொள்வேன்'' என்றார்.

    சொன்னதுபோலவே, படம் ரிலீசானபோது ஏற்பட்ட சலசலப்புகளுக்கு பயப்படாமல் படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார்.

    படத்தை நடிகர் பிரபு பார்த்து விட்டு, "தலைவா! இப்படியொரு படத்தில் நடிக்க உங்களால் மட்டுமே முடியும்'' என்றார்.

    படம் வெளிவந்தபோது என் நட்பு வட்டத்தில் கதை பற்றி கேட்கவே செய்தார்கள். `சினிமாவில் எத்தனையோ கேரக்டர்கள் வருகின்றன. இப்படத்தில் வருகிற நடிகரும் ஒரு கேரக்டர் அவ்வளவுதான்'' என்று அவர்களிடம் `என்னிலை' விளக்கம் அளித்தேன்!

    மகாநடிகன் படத்தைத் தொடர்ந்து சக்தி சிதம்பரம் இயக்கிய "இங்கிலீஷ்காரன்'' படத்தில் நானும் என் மகன் சிபியும் நடித்தோம்.

    காமெடிக் கலக்கல் கதையில் பின்னப்பட்ட இந்தப் படத்தையும், ரசிகர்கள் வெற்றிபெறச் செய்தார்கள்.

    பத்துப்பதினைந்து வருஷங்களுக்கு முன்பே பெரியார் திடலில் வருஷா வருஷம் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருது கொடுத்து சிறப்பித்து வந்தார்கள். தமிழ் உணர்வுடன் கூடிய கலைஞர்கள் இந்த விழாக்களில் கவுரவிக்கப்பட்டார்கள். இப்படி எனக்கும் விருதுகள் வழங்கினார்கள்.

    நானும், தந்தை பெரியாரின் கொள்கைகளில் என்னை பிணைத்துக் கொண்டவன் என்ற முறையில், பெரியாரின் கொள்கைகள் மீதான என் ஈர்ப்பையும் இந்த மேடைகளில் வெளிப்படுத்தி வந்தேன்.

    இதனால் என் மீது அக்கறை கொண்டவர்கள் என்னிடம், "கடவுள் மறுப்பு என்பது உங்கள் கொள்கையாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதை மேடை வரை ஏறி வெளிப்படுத்தணுமா?'' என்று கேட்டார்கள்.

    "மனதில் உள்ளதை வெளிப்படையாக வெளியில் சொல்வதில் என்ன தவறு?'' என்று அவர்களிடம் திருப்பிக் கேட்டேன்.

    "சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறீர்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மார்க்கெட் பாதிக்கப்படாதா?'' என்று அவர்கள் பக்க கவலையை சொன்னார்கள்.

    "நடிகவேள் எம்.ஆர்.ராதா குணசித்ரம், வில்லன் என்று எந்த வேடத்திலும் தன்னை புதிதாய் வெளிப்படுத்தியவர். "ரத்தக்கண்ணீர்'' படத்தில் ஹீரோவாக அவர் நடித்த நடிப்பு இன்று வரை பேசப்படுகிறதே! அப்படிப்பட்ட நடிகர் பெரியாரின் தொண்டராக மேடை தோறும் கடவுள் மறுப்பு கொள்கையை முழங்கினாரே! நாடக மேடையில் காட்சிக்கு காட்சி அதைத்தானே சொன்னார்! அதற்காக அவரை ரசிகர்கள் புறக்கணிக்கவா செய்தார்கள்? அவரது கொள்கையை விரும்பாதவர்கள் கூட, அவரது நடிப்புக்கு ரசிகர்களாகத்தானே இருந்தார்கள்'' என்று விளக்கம்

    அளித்தேன்."இந்த சமூகம் மீது எனக்கும் அக்கறை இருக்கிறது. ஒரு தொண்டை செய்வதன் மூலம் எனக்கு வருமான இழப்பு நேர்ந்தாலும் கவலைப்படாமல் தொண்டைத் தொடரவே செய்வேன்' என்று, தந்தை பெரியார் பொதுத் தொண்டுக்கு வந்த ஆரம்ப நாட்களிலேயே சொன்னார். அவர் வசதியாக வாழ்ந்தவர். தனது சொகுசான வாழ்க்கை, தனது மகிழ்ச்சி என்று மட்டுமே அவர் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியும்.

    ஆனால் சமூக விழிப்புணர்வுக்காக தன்னை வருத்திக்கொண்டு மக்களின் அறியாமைக்காக வருந்தி இயக்கம் கண்டார். அவரது முயற்சிகளில்தான் சமூகம் தலைநிமிரத் தொடங்கியது. அது நல்லது என்பதை தெரிந்து கொண்ட பிறகே நானும் அவரது எண்ணங்களுடன் என்னைக் கலந்தேன். அதை மேடையில் வெளிப்படுத்துவதால் எனது மார்க்கெட்டே போனாலும் கவலைப்படுவதாக இல்லை'' என்றேன்.

    "மகாநடிகன்'' படம் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் பெரியார் திடலில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டேன். பெரியாரின் சிந்தனைகளுடன் ஒன்றிப்போனவன் என்ற முறையில் அந்த மேடையில், "ஒரு நடிகனாக என் லட்சியம் தந்தை பெரியாராக ஒரு படத்தில் நடிப்பதுதான். அப்படி பெரியார் வேடத்தில் நடிக்கும்போது, பணம் வாங்காமல் நடிப்பேன்'' என்றேன்.

    பெரியார் வேடம் எனக்கு பொருத்தமாக இருக்குமா என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. நடிகர் திலகம் சிவாஜியே நடிக்க ஆசைப்பட்ட வேடம். அதில் நான் நடிக்க ஆசைப்பட்டதுகூட பெரியாரின் சிந்தனைகள் என்னை முழு அளவில் ஆக்கிரமித்ததுதான் காரணமாக

    இருக்கும்.இப்படி நான் பெரியாராக நடிக்க ஆசைப்பட்டு ஒரு வருடம் ஆகியிருந்தது. "பெரியார் வேடத்தில் நடிக்க எண்ணிய ஆசை அவ்வளவுதானா?'' என்று எனக்குள் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஞானசேகரன் என்னை சந்தித்தார்.''

    Next Story
    ×