search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சத்யராஜ் படம் வெளிவர விஜயகாந்த் உதவி
    X

    சத்யராஜ் படம் வெளிவர விஜயகாந்த் உதவி

    சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி புரிந்தார்.
    சத்யராஜ் நடித்த "வள்ளல்'' படம் வெளிவருவதற்கு தடங்கல் ஏற்பட்டபோது, விஜயகாந்த் தலையிட்டு, படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி
    புரிந்தார்.சத்யராஜும், விஜயகாந்தும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பு, பெரிய நடிகர்களான பிறகும் அன்று போலவே இன்றும் தொடருகிறது.

    விஜயகாந்துடன் உள்ள நட்பு குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "1977 பீரியடில், நடிப்பதற்காக நான் கோவையில் இருந்து சென்னைக்கு வந்தேன்.

    இதே நாட்களில்தான் விஜயகாந்தும் மதுரையில் இருந்து ஹீரோவாகும் கனவுடன், சென்னையில் அடியெடுத்து வைத்திருந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி விட்டு தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள ஒரு மிலிட்டரி ஓட்டலில், சாப்பாட்டு நேரத்தில் இருவரும் சந்திப்போம்.

    இரண்டு பேருமே சினிமாவை குறி வைத்திருப்பவர்கள் என்பது தவிர, வேறெந்தவிதமான பரிச்சயமும் எங்களுக்குள் அப்போது இல்லை. ஆனாலும் ஓட்டலில் பார்க்கும்போது ஒருவருக்கொருவர் லேசாக சிரித்துக் கொள்வோம். அத்தோடு சரி. சாப்பிட்டு முடித்து விட்டு அவரவர் முயற்சியை தொடரப்போய் விடுவோம்.

    அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சினிமா சான்ஸ் தேட `பைக்'கில் சதா சுற்றிக்கொண்டு இருப்பேன். என் மாதிரியே பிரம்மச்சாரியான விஜயகாந்தும் ஒரு பைக் வைத்திருந்தார். அதுவும் சினிமா சான்சுக்காக சூடு குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தது!

    அப்போது சிவகுமார் ஹீரோவாக நடித்த "சாமந்திப்பூ'' என்ற படத்தில் எங்கள் இருவருக்கும் சின்ன வேடங்கள் கிடைத்தன. என்னிடம் பேசிய படக்குழு நிர்வாகி, "சின்ன வேஷம் என்பதால், `டிரஸ்' தரமாட்டோம். நீங்களே கொண்டு வந்து விடுங்கள்'' என்று கறாராக சொல்லிவிட்டார்.

    நடிக்க வந்து, இரண்டு வருஷம் ஆகிவிட்டது. சில படங்களில் நடித்தும் விட்டேன். இன்னும் கம்பெனி டிரெஸ் தரப்படாமல் சொந்த டிரெஸ்சில் நடிக்க வேண்டியதிருக்கிறதே என்று மனசுக்குள்ளாக வருந்தியபடியே ஒரு தோல் பையில் டிரஸ்சை எடுத்துக்கொண்டு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்தேன்.

    நான் ஸ்டூடியோவுக்கு போன நேரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர் நடித்து முடித்து புறப்பட்டபோதுதான் அவரும் சொந்த டிரஸ்சில் நடிக்க வந்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன். புறப்படும்போது கொண்டு போயிருந்த தோல் பையில், நடிக்க பயன்படுத்திய சட்டையை மடித்து வைத்து விட்டுப் புறப்பட்டார்.

    அவர் போகும்போது, தோல் பையுடன் வந்திருந்த என்னைப் பார்த்தார். இருவரும் சிரித்துக் கொண்டோம். அந்த நேரத்திலும் எனக்குள்ளாக ஒரு ஆறுதல், விஜயகாந்த்தும் சொந்த டிரெஸ் அணிந்து நடித்தது!

    இரண்டு பேரும் நட்பு ரீதியாக பேச ஆரம்பித்தது, பழகியதுஎல்லாம் இப்படியான படப்பிடிப்புகளின் போதுதான். அவர் அவரது முயற்சிகளை கூறுவார். நான் எனது முயற்சிகளை பகிர்ந்து கொள்வேன். நாளடைவில் எங்கள் நட்பு வலுப்பட்டது. நான் அவரை `விஜி' என்பேன். அவர் என்னை `சத்யராஜ்' என்று அழைப்பார்.

    படங்களில் ஓரளவு நான் வளரத்தொடங்கி, "24 மணி நேரம்'' படத்தின் மூலம் ரசிகர்களிடம் நிலைபெற்றேன். அந்தப் படத்தில் நான் பேசிய, "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே'' வசனம் பிரபலமாகி, என்னை பட்டிதொட்டி வரை கொண்டு சென்றது.

    என் முகம் திரையில் தெரியத் தெரிய அதை ஒரு ரசிகனாக நானும் பார்த்து என் நிறைகுறையை ஆராய்ந்தேன். அப்போது குளோசப் காட்சிகளின்போது தூக்கலாக இருக்கும் என் பற்கள் எனக்கு குறையாகப் பட்டது. இப்படி பல் தூக்கல் தெரியாமல் இருக்க, தாடை பகுதியில் ஏதாவது ஆபரேஷன் செய்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

    நடிகர் சிவகுமார் அண்ணன் ஓவியர் அல்லவா? அவரிடம் எனது இந்த யோசனையை சொன்னேன். அவரோ, "நானே ஒரு ஓவியன். என்னிடமே படம் வரைந்து காட்டுகிறாயா?'' என்று கேட்டுவிட்டார். ஆனாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.

    அப்போது எனக்கு திருமணமாகி விட்டதால், மனைவியிடம் மட்டும் இந்த ஆபரேஷன் விஷயத்தை பகிர்ந்து கொண்டேன். ஆபரேஷனுக்குப் பிறகு முகம் ஏடாகூடம் ஆகிவிடுமோ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தாததால், மனைவி தரப்பில் எதிர்ப்பில்லை.

    பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனிடம் இது விஷயமாய் பேசியபோது, தாடையின் முன்பக்கமாக சிலிக்கானை ஆபரேஷன் மூலம் பொருத்தி விட்டால் முகத்தோற்றம் இன்னும் அம்சமாக அமைய வாய்ப்பிருக்கிறது'' என்றார். பிளாஸ்டிக் சர்ஜரியில் அப்போதே அவர் புகழ் பெற்றிருந்தார். அவர் சொன்னதும் ஆபரேஷனுக்கு தயாரானேன். பட சம்பந்தப்பட்ட யாருக்கும் சொல்லவில்லை. குடும்பத்தில் கூட என் மனைவிக்கு மட்டுமே தெரியும். ஆபரேஷனில் சுண்டு விரல் அளவே உள்ள சிலிக்கானை என் முன்புற தாடையின் அடிப்பக்கமாக ஆபரேஷன் மூலம் பொருத்தினார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.

    ஆபரேஷன் முடிந்து தாடையில் கட்டுப்போட்டார். அப்போது அவர் என்னிடம் "ஒரு வாரத்துக்கு முகம் வீங்கி அகோரமாகத் தெரியும். பயந்துவிடவேண்டாம். ஒரு வாரத்துக்குப் பிறகு வீக்கம் வடிந்து முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்'' என்றார்.

    முகம் சரியான பிறகும் 3 மாதம் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

    டாக்டர் சொன்னது போலவே ஆபரேஷனுக்குப்பின் கட்டு அவிழ்த்தபோது முகம் பூதாகாரமாகத் தெரிந்தது. டாக்டர் சொன்னதை நம்பினபடியால் அதிர்ச்சி அடையாமல் வீக்கம் வடியும்வரை காத்திருந்தேன். வீக்கம் வடிந்து முகம் இயல்பானபோது எனக்கே ஆச்சரியம். முகத்தில் மெருகு கூடியிருந்தது. கண்ணாடியில் பார்த்தபோது `பல் துருத்தல்' தெரியாத நிலை. அதாவது என் முகத்தைப் பார்த்தபோது எனக்குள்ளே ஒரு சந்தோஷ நிலை!

    அப்போது "சந்தோஷக் கனவுகள்'' என்ற படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நான் வில்லன். படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடந்து கொண்டிருந்தது.

    என் சம்பந்தப்பட்ட காட்சிக்காக நான் நாகர்கோவில் படப்பிடிப்புக்குப் போனபோது, விஜயகாந்த் என்னை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். அதோடு நிற்காமல், "சத்யராஜிடம் ஏதோ ஒரு புது பெர்சனாலிடி கூடித் தெரியுதே'' என்று படப்பிடிப்பில் இருந்த நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். சண்டைக்காட்சிக்கு முன்னதாக என்னை சந்தித்த நேரத்தில், என்னிடமும் இதைக்கேட்டு விட்டார்.

    நண்பர் என்ற முறையில் நான் அவரிடம் உண்மையைச் சொல்லி விட்டேன். சண்டைக் காட்சியின்போது தாடையில் எதிர்பாராமல் அடிபட்டால் ஆபரேஷன் முயற்சி வீணாகிவிடும் என்பதையும் அப்போது சொன்னேன். டாக்டர் என்னிடம் மூன்று மாதத்துக்கு பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என சொல்லியும், நடிப்பு ஆர்வத்தில் இரண்டு மாதத்திலேயே படப்பிடிப்புக்கு வந்துவிட்ட தகவலையும் காதோடு போட்டு

    வைத்தேன்.அந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் என் விஷயம் சொல்லிய விஜயகாந்த், சண்டைக்காட்சியில் ரொம்பவே கவனமாக நடந்து கொண்டார். இந்த இடத்தில் விஜயகாந்தின் சண்டை போடும் ஆற்றல் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் ஒரு பாதுகாப்பான பைட்டர் ஹீரோ. அவர் அடிப்பதாகவோ குத்துவதாகவோ நடிக்கும் காட்சிகளில் ஒரு அடி கூட எதிரியின் மீது படாது. அத்தனை லாவகமாக செயல்படுவார். அன்றைய காட்சியிலும் அப்படியே நடித்து என் தாடையை காப்பாற்றினார்!

    இதற்குப் பிறகு நான் "சாவி'' படம் மூலம் ஹீரோவானேன். படம் சுமாராக ஓடியது. அடுத்து ஹீரோவாக நடித்த 2 படங்களும் கூட சரிவர போகவில்லை.

    அப்போது விஜயகாந்த் என்னை சந்திக்க முடியாமல் இருந்த போதும், என் மானேஜர் ராமநாதனை கூப்பிட்டு பேசியிருக்கிறார்.

    "பி அண்ட் சி'' ஏரியா ரசிகர்களையும் கவரக்கூடிய படத்தை தேர்வு செய்து நடிக்கச் சொல்லுங்கள். `பி அண்டு சி' ரசிகர்களிடம் பதிந்து விட்டால் சினிமாவில் நிரந்தர ஹீரோவாக நீடிக்க முடியும். அதோடு ரசிகர் மன்றங்களையும் `டெவலப்' பண்ணச் சொல்லுங்கள்'' என்றும் கூறியிருக்கிறார்.

    அவர் மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததில்லை. "ஈட்டி'' என்ற படத்தில் அவர் ஹீரோ. நான் வில்லன். சென்னை அடையார் பார்க் ஓட்டலில் படப்பிடிப்பு இரவு 2 மணி வரை நடந்து கொண்டிருந்தது. அப்போது விஜயகாந்த் டைரக்டரிடம் போய், "சீக்கிரம் விட்டுடுவீங்களா? நேரம் ஆகுமா?'' என்று கேட்டார்.

    இதை பார்க்கும் யாருக்கும் என்ன தோன்றும்? `சரி! தூக்கம் வந்து விட்டது போலிருக்கிறது. ஓய்வெடுக்க விரும்பி இப்படி கேட்கிறார்' என்றுதானே தோன்றும்! நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் அதற்குப்பிறகு நடக்கும் `ஊமை விழிகள்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதற்காக அப்படி கேட்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். இப்படி தூங்கும் நேரத்தைக்கூட, நடிப்பு நேரமாக மாற்றிக் கொண்டதால்தான் சினிமாவில் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் கிடைத்திருக்கிறது.

    ராஜ்கபூர் டைரக்ஷனில் நான் நடித்த "வள்ளல்'' படத்தை ரிலீசுக்கு தயார் நிலையில் என் மனைவியுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் பார்த்திருக்கிறார். படம் பிரேமலதாவுக்கு ரொம்பவே பிடித்துப் போய் தனது கணவரிடமும் சொல்லியிருக்கிறார்.

    அந்தப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக திரைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டபோது, விஜயகாந்த் அவராகவே எனக்கு உதவ முன்வந்தார். என்னிடம் விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொண்டவர், "ஒரு நல்ல படம் பணப் பற்றாக்குறையால் திரைக்கு வராமல் இருந்துவிடக்கூடாது'' என்றதோடு படம் வெளிவர உதவவும் செய்தார்.

    நான் படப்பிடிப்பு இல்லாத நாளென்றால் காலை 8 மணி வரை கூட தூங்குவதுண்டு. ஆனால் பட ரிலீசுக்கு முந்தின தினத்தில் காலை 6 மணிக்கே எனக்கு போன் செய்தவர், "வாங்க! லேபுக்குப் போய் படம் ரிலீசுக்கான ஏற்பாடுகளை செய்வோம்'' என்று சொன்னார். எனக்கு முன்பாக லேபுக்கும் வந்துவிட்டார். அவரது கணிசமான உதவியால்தான் "வள்ளல்'' படம் வெளிவந்தது. படமும் விஜயகாந்த் கணித்தது போலவே, வெற்றி பெற்றது.

    என் மகன் சிபி நடிக்க வந்தபோது, `ஆக்ஷன் படமாக தேர்ந்தெடுத்து நடிக்க வையுங்கள். சீக்கிரமே ரசிகர்கள் மத்தியில் பாப்புலாரிட்டி கிடைக்கும்'' என்றார். சிபியை எப்போது பார்த்தாலும் அப்படியொரு பாசம்! அதோடு அக்கறையாக அவன் வளர்ச்சிக்கு ஆலோசனையும் சொல்வார்.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
    Next Story
    ×