search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமைதிப்படை படத்தில் மீண்டும் வில்லனா? நடிக்க மறுத்தார் சத்யராஜ்
    X

    அமைதிப்படை படத்தில் மீண்டும் வில்லனா? நடிக்க மறுத்தார் சத்யராஜ்

    சத்யராஜ் கதாநாயகனாக நடித்த "வால்டர் வெற்றிவேல்'', மகத்தான வெற்றி பெற்றதால், அதன்பின் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். அதன் காரணமாக, மணிவண்ணனின் "அமைதிப்படை'' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார்.
    சத்யராஜ் கதாநாயகனாக நடித்த "வால்டர் வெற்றிவேல்'', மகத்தான வெற்றி பெற்றதால், அதன்பின் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். அதன் காரணமாக, மணிவண்ணனின் "அமைதிப்படை'' படத்தில் வில்லனாக நடிக்க மறுத்தார்.

    கதாநாயகனாக நடிப்பதற்கு முன் வில்லன் வேடங்களில் நடித்து `வில்ல நடிப்பில்' முத்திரை பதித்தவர் சத்யராஜ். பின்னாளில் ஹீரோவான பிறகு வில்லன் நடிப்பைத் தொடரவில்லை. முன்னணி ஹீரோவாகி விட்ட நிலையில், ஹீரோ - வில்லன் என 2 வேடங்களில் சத்யராஜ் நடிக்கும் விதத்தில், ஒரு கதையை டைரக்டர் மணிவண்ணன் தயார் செய்தார்.

    ஆனால், படத்தில் வில்லன் வேடத்திலும் நடிக்க வேண்டும் என்று மணிவண்ணன் கேட்டபோது, இந்தப் படமே வேண்டாம் என்று கூறிவிட்டார், சத்யராஜ்.

    இதுபற்றி சத்யராஜ் கூறியதாவது:-

    "வால்டர் வெற்றிவேல்'' படத்துக்குப் பிறகு நான் ரொம்பவே ரசித்து செய்த படம் `ஏர்போர்ட்.' மலையாளப்பட உலகில் பிரபல இயக்குனர் ஜோஷி டைரக்ட் செய்தார்.

    இந்தப் படத்தின் கதையை டைரக்டர் சொல்லும்போதே மிரட்டலாக இருந்தது. அந்த அளவுக்கு அரசியல் பின்னணியிலான கிரைம் சப்ஜெக்ட். ஆனால் படத்தின் தயாரிப்பு 3 வருஷமாக நீடித்ததில் படம் வெளிவந்தபோது எதிர்பார்த்த வெற்றியை எட்டமுடியவில்லை.

    எந்தத் துறையிலுமே வெற்றி - தோல்வி சகஜம். சினிமாத் துறையிலும் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரக்கூடியது. எனது படங்கள் ஏதாவது ஓடவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். ரசிகர்கள் எதிர்பார்த்த ஏதோ ஒன்றை நாம் கொடுக்காமல் இருக்கிறோம். அதனால் படம் போகவில்லை என்று எனக்கு நானே சமாதானமாகி விடுவேன்.

    ஆனால் `ஏர்போர்ட்' விஷயத்தில், படத்தின் ரிசல்ட் சரியாக அமையாததில் வருத்தமாகி விட்டது. எனது படம் ஓடவில்லை என்பதற்காக நான் வருத்தப்பட்ட ஒரே படம் "ஏர்போர்ட்''டாகத்தான் இருக்கும். ஒரு வெற்றிப் படத்துக்குத் தேவையான `திரில்லர்' காட்சிகள், ரசிகர்கள் விருப்பத்திற்குரிய இயற்கை சூழலுடனான காட்சிப் பின்னணி என்று `ஏர்போர்ட்' அமைந்து ரொம்பவே எதிர்பார்க்க வைத்தது என்னை வருத்தப்படுத்தியிருக்கலாம். என்றாலும் படம் 4 வாரம் ஓடவே செய்தது.

    இந்தப் படத்தில் என் நடிப்பை விமர்சித்த ஒரு வார பத்திரிகை "சத்யராஜ் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையானவர்'' என்று பாராட்டியிருந்தது. இதே பத்திரிகையின் மறுவாரத்தில் ஒரு ரசிகர் அந்த விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்த ரசிகர் யாரென்று பார்த்தால் `நடிகர் கார்த்திக்' என்று இருந்தது.

    எனக்கு `திக்' என்றாகிவிட்டது. என் மீது எத்தனை அன்பு இருந்தால் பத்திரிகையில் ஒரு வாசகராக என்னை பாராட்ட முன்வருவார்? அவர் ஹீரோவாக நடித்த பல படங்களில், நான் `எஸ் பாஸ்' என்று சொல்லும் சின்ன கேரக்டரில் கூட வந்து போயிருக்கிறேன். அப்போது காட்டிய அந்த அன்பைத்தான் இப்போதும் அவரிடம் காண முடிகிறது. படத்தில் காமெடி காட்சிகள் என்றால் அவரும் என் மாதிரியே சிரித்து விடுவார். இதனால் பல காட்சிகளை திரும்ப எடுக்க வேண்டி வரும்.

    கார்த்திக்கின் அம்மாவுக்கு என் மீது ரொம்பவே பாசம். கொஞ்சம் முக ஜாடையில் நான் கார்த்திக்கின் அப்பா (நடிகர் முத்துராமன்) சாயலில் இருப்பதாக சொல்வார்கள். கார்த்திக் என்னைப் பார்க்கும்போதெல்லாம் "உங்களை வைத்து நான் ஒரு படத்தை டைரக்ட் செய்யவேண்டும். ஆனால் அந்தப் படத்தில் நான் நடிக்க மாட்டேன்'' என்று சொல்வார்.

    கார்த்திக் நடித்த "கிழக்கு வாசல்'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தபோது நான், விஜயகாந்த், பிரபு நடித்த படங்களின் படப்பிடிப்பும் சுற்று வட்டாரத்தில் நடந்தன.

    படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைவருமே பொள்ளாச்சியில் உள்ள சக்திமணி ஓட்டலில் தங்கினோம். படப்பிடிப்பு முடிந்து இரவு ஓட்டல் அறைக்கு வந்ததும் நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என எல்லாருமே ஓட்டலின் மொட்டை மாடிக்கு போய் பொதுவான விஷயங்கள் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருப்போம்.

    நடு ராத்திரி வரை இப்படி பேசிக் கொண்டிருந்தாலும் காலையில் படப்பிடிப்புக்கு போக யார் முதலில் தயாராகிறார் என்பதில் போட்டியே வரும். `ஹீரோ' என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு நண்பர்களாக நாங்கள் பேசி மகிழ்ந்த அந்த நாட்கள் எப்போதுமே மறக்க

    "ஏப்போர்ட்''டுக்குப் பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட படம் மணிவண்ணனின் "அமைதிப்படை.'' ஏற்கனவே "கனம் கோர்ட்டார் அவர்களே'' படத்தை சொந்தமாக எடுத்து இழப்பை சந்தித்தவர் என்பதால், "இந்தத்தடவை கவனமாக இருந்து ஜெயிக்கப் பார்ப்போம்'' என்றேன்.

    நான் இப்படிச் சொன்னதில் உற்சாகமான மணிவண்ணன், "தலைவரே! படத்தில் 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோ வில்லன். இரண்டு வேடத்திலும் நீங்களே நடிக்கிறீங்க'' என்றார்.

    இரண்டில் ஒரு கேரக்டர் வில்லன் என்றதும், எனக்கு உற்சாகம் போய்விட்டது. "தலைவரே! இப்ப நான் "ஸ்ட்ராங் ஹீரோ'' ஆயிட்டேன். இப்பப்போய் வில்லனாக நடித்து "பழைய சத்யராஜை'' ஞாபகப்படுத்தணுமா?'' என்று கேட்டேன்.

    நான் இப்படிச் சொன்னதை மணிவண்ணன் எதிர்பார்க்கவில்லை போலும். என்னையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

    நான் இப்போது அவரை இயல்புக்கு கொண்டு வரும் விதத்தில் பேசினேன். "ஜனங்க என்னை வால்டர் வெற்றிவேல் வரை கொண்டு வந்திருக்காங்க. இப்பப்போய் மறுபடியும் `வில்லனா' நடிச்சா சரியாக இருக்குமா?'' என்று கேட்டேன்.

    என்றாலும் என்னிடம் கதை சொல்ல வந்திருக்கும் மணிவண்ணன் இதற்கும் கவலைப்படவில்லை. "தலைவரே! முதல்ல கதையை கேளுங்க. அப்புறம் நடிக்கிற முடிவைச் சொல்லுங்க'' என்றார்.

    இந்த விஷயத்தில் மணிவண்ணனின் திறமை எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு கதை சொல்லும்போதே நமக்கு அதில் உடன்பாடு இல்லை என்று தெரிந்து விட்டால் உடனே வேறு கதை சொல்வார். ஒரு கதைக்கு திரைக்கதை வடிவம் தரும்போதே, கதை கேட்பவர்களை கதைக்குள் ஐக்கியமாக்கி விடுவார். அதனால் அவர் சொல்கிற கதையை மறுக்கவே முடியாது.

    ஆனாலும் எனக்குள் ஒரு முடிவு எடுத்திருந்தேன். அவர் சொல்லும் `வில்லன்' கதையில் நடிக்கவே கூடாது என்பதுதான் அந்த முடிவு. அதாவது அவர் சொல்லும் கதை தங்கமாகவே இருந்தாலும் அதை தகரமாகவே கருதி தவிர்க்க வேண்டும்!

    மணிவண்ணன் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். வில்லன் போர்ஷன் வருகிறது. அமாவாசை, நாகராஜசோழனாக மாறுகிற கட்டம் வருகிறது. அமாவாசை போட்டியிடும் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது. முதலில் நாற்காலியின் நுனியில் தயங்கித் தயங்கி உட்காரும், அமாவாசை `5 ஆயிரம் ஓட்டு முன்னணி' என்று அறிவிக்கப்பட்டதும், சேரில் சாய்ந்து உட்காருகிறான்! 10 ஆயிரம் ஓட்டு முன்னணி என்றதும் சேரில் கால் மேல் கால் போட்டு உட்காருகிறான்!

    வெற்றி அறிவிக்கப்பட்டதும் தன்னை தேர்தலில் நிறுத்திய அரசியல் பிரமுகர் முகத்திலேயே சிகரெட் புகையை ஊதுகிறான்!

    கதை சொல்லத் தொடங்கி அரை மணி நேரத்தில் இந்தக் காட்சி வர, அந்த அமாவாசை கேரக்டர் எனக்குள் முழுமையாக வியாபித்ததில் என் பிடிவாதம் மறந்து போயிற்று! "நடிக்கிறேன்'' என்று சொல்லி விட்டேன்.

    இந்தப் படத்தில் நடிகை கஸ்தூரிக்கு அல்வா கொடுத்து நான் ஏமாற்றும் காட்சியை வைத்தார், மணிவண்ணன். இதன்பிறகு `அல்வா' என்றாலே ஏமாற்றுவது என்று ரசிகர்கள் மனதில் பதிந்து போயிற்று. படத்தின் தொடக்க விழா அன்றே எல்லா ஏரியாக்களும் விற்று படத்துக்கு இன்னும் பரபரப்பு சேர்த்துவிட்டது.

    மணிவண்ணனிடம் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம், வேகம். அதே நேரத்தில் குவாலிட்டியும் `மிஸ்' ஆகாது. "நூறாவது நாள்'' படத்தை 25 நாளில் எடுத்து முடித்தார். 24 மணி நேரம் படத்தை 28 நாளில் முடித்தார். ஆனால் இந்தப் படத்துக்கு அவர் 90 நாட்கள் எடுத்துக் கொண்டார். நான்கூட ஒரு தடவை அவரிடம், "என்ன தலைவரே! சொந்தப்படம் எடுக்கறீங்க. 90 நாள் வரை படப்பிடிப்பு போகுதே'' என்று என் கவலையை வெளியிட்டேன். பதிலுக்கு அவரோ, "தலைவரே! படத்தை எக்கச்சக்க விலைக்கு விற்றுவிட்டேன். கொஞ்சம் கூடுதலா செலவு பண்ணிதான் எடுப்போமே'' என்றார்.

    தன்னை நம்பி பணம் போட்டவர்களுக்கு அந்தப்பணம் லாபமாக திரும்பிப்போகவேண்டும் என்ற எண்ணம்தான் அவரை அப்படிப்பேச வைத்தது.

    சொன்னது போலவே படத்தில் வரும் ஒரு சாதாரண ஊர்வல காட்சிக்கு 5 ஆயிரம் பேரை நடிக்க வைத்து காட்சிக்கே ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    "அமைதிப்படை'' வெளியானபோது என்னையும், மணிவண்ணனையும் உச்சாணிக் கொம்புக்கு தூக்கிக் கொண்டு போனது. படம் மிகப்பெரிய வெற்றி. வில்லன் அமாவாசையை ரசிகர்கள் அப்படி கொண்டாடினார்கள்.

    இந்தப்படம் இந்தியில் தயாரானபோது மிதுன் சக்ரவர்த்தி நடித்தார். தெலுங்கில் மோகன்பாபு நடித்தார். இரண்டுமே வெற்றி.''

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    Next Story
    ×