search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காக்கிச் சட்டை படத்தில் நடிக்க சத்யராஜுக்கு பேசப்பட்டது ரூ.15 ஆயிரம்: கிடைத்தது ரூ.40 ஆயிரம்
    X

    காக்கிச் சட்டை படத்தில் நடிக்க சத்யராஜுக்கு பேசப்பட்டது ரூ.15 ஆயிரம்: கிடைத்தது ரூ.40 ஆயிரம்

    ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த "காக்கிச் சட்டை'' படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார். அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.15 ஆயிரம். ஆனால் சத்யராஜ் நடிப்பைப் பாராட்டி ரூ.40 ஆயிரம் கொடுத்தார், ஆர்.எம்.வீ.
    ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த "காக்கிச் சட்டை'' படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்தார். அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.15 ஆயிரம். ஆனால் சத்யராஜ் நடிப்பைப் பாராட்டி ரூ.40 ஆயிரம் கொடுத்தார், ஆர்.எம்.வீ.

    டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் "வேலை கிடைச்சிடுச்சு'', "நடிகன்'' என்று 2 படங்களில் சத்யராஜ் நடித்து இரண்டுமே வெற்றி. இதைத் தொடர்ந்து மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த "புதுமனிதன், தெற்குத் தெரு மச்சான்'' படங்களும் வெற்றி பெற்றன.

    சினிமாவில் தனது வெற்றிப் பயணம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    டைரக்டர் பி.வாசுவின் 2 படங்களில் அடுத்தடுத்து நடித்து இரண்டுமே வெற்றி பெற்றத்தில் பி.வாசுவுக்கும் ஒரு உயர்வான இடம் கிடைத்தது. பிரபு நடித்த "சின்னத்தம்பி'' படத்தையும் அவர்தானே இயக்கினார். அந்தப்படத்தின் இமாலய வெற்றி சாதாரணமாய் வந்ததல்ல என்பதை நிரூபிக்கிற மாதிரி, அடுத்து இயக்கிய படங்களிலும் வெற்றியை தக்க வைத்துக் கொண்டார்.

    இதற்கிடையே டைரக்டர் மணிவண்ணனும் "தெற்குத்தெரு மச்சான்'', "புது மனிதன்'' என 2 படங்களில் என்னை இயக்கினார். அதுவும் நூறு நாள் படங்களாயின.

    இதில் "புது மனிதன்'' சத்யா மூவிசின் படமாகும். ஏற்கனவே சத்யா மூவிசில் நான் ரஜினி நடித்த "மூன்று முகம்'', கமல் நடித்த "காக்கி சட்டை'' படங்களில் நடித்திருக்கிறேன். இரண்டிலுமே வில்லன் வேடங்கள்தான்''.

    "மூன்று முகம்'' படத்தில் சின்னதாய் ஒரு வில்லன் வேடம். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 1500 ரூபாய். நான் கொஞ்சம் வளர்ந்து "காக்கி சட்டை'' படத்தில் வில்லனாக நடித்தபோது சத்யா மூவிஸ் நிர்வாகி ஆர்.எம்.வீரப்பன் எனக்கு 15 ஆயிரம் சம்பளம் பேசினார். ஒப்புக் கொண்டு நடித்தேன். இந்தப் படத்தில் நான் பேசிய `தகடு தகடு' வசனம் எனக்கு பேரும் புகழும் கிடைத்தது.

    இந்தப் படத்துக்காக எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டபோது அதிர்ந்து போனேன். 15 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 40 ஆயிரம் ரூபாய் இருந்தால் அதிர்ச்சி ஏற்படத்தானே செய்யும். அப்போதெல்லாம் சத்யா மூவிஸ் ஆபீசை போய் பார்க்கிறதுக்கு மிரட்சியாக இருக்கும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாயை கொடுப்பதற்காக நானும் மானேஜர் ராமநாதனும் சத்யா மூவிஸ் ஆபீசுக்குப் போனோம்.

    நாங்கள் வந்திருக்கும் தகவல் ஆர்.எம்.வீரப்பன் சாருக்கு சொல்லப்பட்டதும் அழைத்தார். நாங்கள் போனதும் எதற்காக வந்திருக்கிறோம் என்பது அவருக்கும் புரிந்து போயிற்று. "இதோ பாருங்க! காக்கி சட்டை படத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது. அதனால் தெரிந்தேதான் 25 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்தேன்'' என்றார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு கலை ரசிகராக அந்த நேரத்தில் அவரை ஆச்சரியமாய் பார்த்தேன்.

    இதே சத்யா மூவிஸ் தயாரிப்பில் உருவான மந்திரப் புன்னகை, புது மனிதன் படங்களில் இப்போது நான் ஹீரோ. தெற்குத்தெரு மச்சான் படத்தில் நடிப்பதற்காக சேலத்துக்கு போயிருந்தபோது, சத்யா மூவிசில் இருந்து போனில் தொடர்பு கொண்டு கேட்டார்கள். என்னை நடிப்பில் வளர்த்த நிறுவனத்தின் படத்தில் ஹீரோ வாய்ப்பு என்றபோது சந்தோஷமாய் சம்மதித்தேன்.

    சத்யா மூவிசில் முதன் முதலாக "மூன்று முகம்'' படத்தில் நடிக்கப் போனபோது படத்தின் டைரக்டர் ஏ.ஜெகநாதன் என்னை அழைத்து பேசினார். அப்போது அவர் முன்பு பேசவே கூச்சப் பட்டு நின்றேன். எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பதில் பேச எடுத்துக் கொண்ட நிதானம் பார்த்த டைரக்டர், "பேசவே கூச்சப்படுகிற இவர் எப்படி நடிக்கப் போகிறார்?'' என்று நினைத்திருக்கிறார். பின்னாளில் அவரே என்னிடம் ஒரு முறை இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

    "புது மனிதன்'' படப்பிடிப்பில்தான் ஆர்.எம்.வீ. என்னுடன் நெருங்கிப் பழகினார். நானும் எம்.ஜி.ஆர். ரசிகன். அவரும் எம்.ஜி.ஆருக்குப் பிரியமானவர். எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டு படம் எடுத்தவர். படப்பிடிப்பு இடைவேளைகளில் எம்.ஜி.ஆரின் நடிப்பு, தொழில் ஆர்வம், பாடல் காட்சிகளில் எம்.ஜி.ஆர். விரும்பும் காஸ்ட்யூம்கள், சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் அக்கறை பற்றியெல்லாம் விளக்கமாக பேசுவார். கேட்கவே பிரமிப்பாக இருக்கும்.

    இந்தப் படம் தயாரான நேரத்தில் புதிய இசையமைப்பாளராக தேவா வந்தார். நானும் டைரக்டர் மணிவண்ணனும் `தேவா என்றொரு புதிய இசையமைப்பாளர் வந்திருக்கிறார். பாடல்களும் நன்றாக இருக்கின்றன. நமது படத்திலும் இசைக்கு அவரை பயன்படுத்திக் கொள்ளலாமே'' என்றோம்.

    ஆர்.எம்.வீ. கொஞ்சம் தயங்கினார். என்றாலும் நாங்கள் சொன்னதற்காக தேவாவை இசையமைப்பாளராக போட ஒப்புக் கொண்டார். தேவாவும் எங்கள் எதிர்பார்ப்பை நூறு சதவீதம் நிறைவு செய்கிற மாதிரி `சூப்பர் ஹிட்' பாடல்களை தந்தார்.

    நான் பார்த்த சினிமாக் கலைஞர்களில் தேவா ரொம்பவே வித்தியாசமானவர். பொறுமை; நிதானம், பக்குவம் என்ற கலவை அவர். தனது இசைக்குள் நமது விருப்பமும் கலந்து விடுகிற நேர்த்தி அவருக்கே உரியது. அதுமாதிரி பொறுமையிலும் அவருக்கு நிகர் அவர்தான். நான்கூட ஒரு முறை ஒரு மேடையில் தேவா பற்றி சொல்லியிருக்கிறேன். அவர் ஒரு பாட்டுக்கு ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும்போது நாம் போய் அதில் ஒரு கட்டையை உருவி விட்டாலும், அவர் முகத்தில் கோபத்தைப் பார்க்க முடியாது. அப்படியொரு சாந்தம் அவருக்கு. படத்தை இயக்கும் டைரக்டரின் எதிர்பார்ப்பு எந்த மாதிரியானது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப மெட்டுப் போட்டுக் கொடுத்து விடுவார்.

    "புது மனிதன்'' படம் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு தேவாவின் பாடல்களும் ஒரு காரணம்.

    "புது மனிதன்'' படத்தில் கவுண்டமணி அண்ணனின் காமெடி உச்ச கட்டமாக அமைந்திருந்தது. சரத்குமார் வில்லனாக நடித்த கடைசிப் படமும் இதுதான்.

    புது மனிதன் மாதிரியே "தெற்குத்தெரு மச்சான்'' படமும் வெற்றிகரமாக அமைந்தது. இந்த இரண்டு படங்களிலுமே பானுபிரியா என் ஜோடியாக நடித்தார். பின்னாளில் "பங்காளி'' என்ற படத்திலும் ஜோடியானார். பங்காளி படத்தில் `சைதை தமிழரசி' என்ற அரசியல்வாதி கேரக்டரில் அவர் நடித்தபோது எங்களுக்கெல்லாம் செட்டிலேயே அடக்க முடியாத சிரிப்பு.

    சினிமாவில் நான் பார்த்து வியந்த இன்னொரு ஹீரோ, மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். "நாளை உனது நாள்'' என்ற படத்தில் அவருடன் முதன் முதலாக நடிக்கத் நேர்ந்தபோது அவரது பெருந்தன்மை அவர் மீதான என் மரியாதையை அதிகப்படுத்தியது.

    படத்தில் ஜெய் சார்தான் ஹீரோ, அவர் தவிர விஜயகாந்தும் நானும் அந்தப் படத்தில் இருந்தோம். படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தபோது அங்கு வந்திருந்த நிருபர்கள் ஜெய்சாரிடமும் விஜயகாந்திடமும் பேட்டி எடுத்தார்கள். நான் கொஞ்சம் தள்ளி தனியாக நின்று கொண்டிருந்தேன்.

    அத்தனை பிஸியிலும் ஜெய் சார் என்னை கவனித்து விட்டார். என்னை அருகில் அழைத்தவர் நிருபர்களிடம், "இவர் சத்யராஜ் இப்பவே இவரை பேட்டி எடுத்துக்குங்க. பின்னாளில் பேட்டி கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாகி விடுவார்'' என்றார்.

    உண்மையில் என்னை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அப்படிச் சொன்னாரோ என்னவோ, அவர் சொன்னபடி நானும் சினிமாவில் வளர்ந்தேன். நல்லவர்கள் சொல்வது நடந்து விடத்தானே செய்யும்.

    நான் படிக்கிற நாட்களிலேயே என்னை நடிப்பு பக்கமாக ஈர்த்தவர் ஜெய் சார்தான். நான் கோவை சபர்பன் ஹைஸ்கூலில் பத்தாவது படித்த நேரத்தில் ஜெய் சாரை பார்ப்பேன். உங்கள் பள்ளிக்கு நேர் எதிரில் இருக்கும் டாக்டர் நாராயணன் அவரது குடும்ப நண்பர். இதனால் 3 மாதத்துக்கு ஒரு முறையாவது காரில் டாக்டர் வீட்டுக்கு வந்து விடுவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரில் வருவார். ஒரு தடவை பியட் கார் என்றார் அடுத்த தடவை அம்பாசிடர். அதற்கும் அடுத்த தடவை பிளை மஷத் இப்படி புதுப்புது கார்களில் அவர் வந்து போவதைப் பார்த்தபோது, "சினிமாவில் நடித்தால் இப்படி விதவிதமான கார்கள் வாங்கலாம். அதற்காகவாவது சினிமாவில் நடிக்க வேண்டும்'' என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.

    "நாளை உனது நாள்'' படப்பிடிப்பில் ஜெய்சாரிடம், "சிறு வயதில் எனக்கு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் நீங்கள்தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரில் வந்து என் சினிமா ஆசையை அதிகப்படுத்தினீர்கள்'' என்றேன்.

    அதற்கு அவர், "கவுண்டரே! அந்த கார்கள், என் நண்பர்களுக்கு சொந்தம். அதெல்லாம் என் கார்ன்னு நினைச்சு நடிக்க வந்தீராக்கும்?'' என்று கிண்டல் செய்தார். சினிமாவில் பழக எளிமை, `ஹாய்' என்ற வார்த்தை மூலம் சக கலைஞர்களிடம் மட்டுமின்றி டெக்னீஷியன்கள் வரை நெருக்கமானவர்.

    இவர் மாதிரி எந்தவொரு சீரியஸ் விஷயத்தைக் கூட சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இன்னொரு ஹிரோ., சிவகுமார் அண்ணன். ஒரு முறை படப்பிடிப்புக்கு இவரை காலை 10 மணிக்கு வரச் சொன்ன இயக்குனர், அவரை நடிக்க அழைத்தபோது மாலை மணி ஐந்தரை. இது எனக்கே கோபம் ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவரோ சாந்த சொரூபியாய் கேமரா முன்பு நடித்த விட்டு வந்தார். நான் அவரிடம், "என்னண்ணே! இது நியாயமா?'' என்று கேட்டேன்.

    அதற்கு அவர் "சினிமாவில் இந்த மாதிரி "வெயிட்டிங்'' நேரத்துக்கும் சேர்த்துத்தான் நமக்கு சம்பளம் தராங்க'' என்றார், எதுவுமே நடவாதவர் போல. சினிமாவில் நான் இவர்களிடமும் கற்றுக் கொண்ட விஷயங்கள் என் உயர்வுக்கு காரணமாக அமைந்தன.

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

    Next Story
    ×