search icon
என் மலர்tooltip icon
    • தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
    • பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பேரணியில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் ஏராளமான மாணவ, மாணவிகளும் காணப்பட்டனர். அவர்களுடன் ஆசிரியர்களும் சென்றதாக தெரிகிறது.

    இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. ஆனால் அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • வீரர்கள் அறையில் இருந்து புகை பிடித்தவாறு போட்டியை பார்த்துக் கொண்டிருந்ததால் விமர்சனம்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இஸ்லாமாபாத் யுனைடெட்- முல்தான் சுல்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய முல்தான் சுல்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி சேஸிங் செய்து சாம்பியன் பட்டம் வென்றது.

    முல்தான் சுல்தான் அணியை 159 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிக் முக்கிய காரணமாக அமைந்தார். அவர் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து அனைவரது பாராட்டுகளை பெற இருந்த நிலையில், அவரது விரும்பத்தகாத செயலால் ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    முல்தான் சுல்தான்  அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, இமாத் வாசிம் வீரர்கள் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தன்னை யாரும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். அது எப்படியோ வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.

    போட்டி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீரர் இவ்வாறு செய்யலாமா? என ரசிகர்கள் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், இது பாகிஸ்தான் சூப்பர் லீக் இல்லை. பாகிஸ்தான் "Smoking" லீக் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
    • சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா்.

    சென்னை:

    பாராளுமன்ற தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலுக்காக 68 ஆயிரத்து 144 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது.

    குறிப்பாக, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறையைச் சோ்ந்த 90 ஆயிரம் போ் தங்களது பெயா்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதன்மூலமாக, மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.


    அதேசமயம், 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்த்த அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தோ்தல் நடத்தை விதிகளை மீறும் சம்பவங்கள் தொடா்பாக, சி-விஜில் எனும் செல்போன் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் 141 புகாா்கள் வரை பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலான புகாா்கள் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என்பதாகும்.

    பாராளுமன்ற தோ்தலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை 58 நபா்களை பாா்வையாளா்களாக நியமிப்பதற்கான பட்டியலை தோ்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.

    ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பொதுப் பாா்வையாளரும், இரண்டு செலவினப் பாா்வையாளா்களாக நியமிக்கப்படுவா். சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா். தேவையின் அடிப்படையில் கூடுதலான பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா்.

    தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு பறக்கும் படையும், ஒரு நிலைக் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தலை நடத்த ஒட்டுமொத்தமாக ரூ.750 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தொகையானது ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. கூடுதலான தொகைகள் அரசால் ஒதுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
    • தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ராஜினாமா செய்தார். இது தொடர்பான, ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். அனேகமாக, தென்சென்னை தொகுதியில் பா.ஜனதா சார்பில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் களம் காண்பார் என தெரிகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி, தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணை நிலை கவர்னர் பொறுப்புகளை ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவித்துள்ளார்.


    • ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.
    • தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு

    மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. ராகுல் காந்தியின் நடை பயணத்தின்போதும், அந்த கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜூன கார்கேவும் பல உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது. அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
    • பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வருகிற மே மாதம் 13-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுறது . முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரத்திற்காக நவீன வசதிகளுடன் பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சில் மாநிலம் முழுவதும் 21 நாட்கள் யாத்திரையாக சென்று ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த பயணத்தில் காலை நேரத்தில் பொது மக்கள் மத்தியில் பேசுகிறார். மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகளில், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில் பேனர் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.
    • அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவராக திறம்பட செயலாற்றிய தால் தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னர் பதவி அளிக்கப்பட்டது.

    தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசை, 2021 பிப்ரவரியில் புதுச்சேரியின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். வாரத்துக்கு 3 நாள் தெலுங்கானா, 3 நாள் புதுவை என பம்பரமாக சுழன்று தமிழிசை பணியாற்றி வந்தார்.

    புதுச்சேரியின் மீது அதீத கவனம் செலுத்தி வந்த அவர் அரசு பள்ளிகளில் புத்தக பை இல்லாத தினம், வாட்டர் பெல் நேரம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு, பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை நேர சலுகை என பல்வேறு வகையிலும் அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டார்.

    புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, அரசு விழாக்களில் அண்ணன் என அழைத்தார். அமைச்சர்கள் தமிழிசையை அக்கா என்றே அழைத்து வந்தனர். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே தமிழிசையின் செயல்பாடுகள் அமைந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை, ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள் என தெரிவித்து வந்தார். புதுச்சேரியில் ஆளுங்கட்சியாக பா.ஜனதா இருப்பதால் வெற்றி பெறுவது எளிது என தமிழிசை கணக்கிட்டார்.

    முதல்- அமைச்சர் ரங்கசாமியும் தமிழிசையின் எண்ணத்துக்கு தடை போடவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்க, நெருங்க புதுச்சேரி அரசியல் கட்சியினர் தமிழிசையை வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என முத்திரை குத்தினர். தமிழிசை புதுவையில் போட்டியிட பா.ஜனதா மேலிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அணுகிய போது கிரீன் சிக்னல் அளிக்கவில்லை.

    இருப்பினும் கட்சி தலைமை மீது மிகுந்த நம்பிக்கையோடு தமிழிசை காத்திருந்தார். புதுச்சேரியில் 3 ஆண்டாக செயல்படுத்தியுள்ள திட்டங்களை புத்தகமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து வழங்கினார். பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.

    ஆனால், புதுச்சேரியில் பா.ஜனதாவினர் கவர்னர் தமிழிசையை வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரியை சேராதவரை வேட்பாளராக நிறுத்தினால் எதிர்கட்சிகள் இதனை பிரசாரமாக செய்யும் என பா.ஜனதாவினர் எதிர்த்தனர்.

    மேலும், புதுச்சேரியை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத் தவர் ஓட்டுகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என புள்ளி விபரங்களை தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழிசை, தமிழ்நாடு வேறு, புதுவை வேறு அல்ல, மக்களிடையே வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார்.

    இருப்பி னும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் வேட்பாளராகக் கூடாது என உள்ளூர் பா.ஜனதாவினர் உறுதியாக இருந்தனர்.

    அண்ணன் என அழைத்த தங்கையை வேட்பாளராக்க முதல்-அமைச்சர் ரங்கசாமியும் முன்வரவில்லை. இதனால் தமிழிசையை வேட்பாளராக்க கட்சித்தலைமை தயங்கியது.

    இதனிடையே புதிய் சட்டமன்ற கட்டிடம் கட்ட கவர்னர் தமிழிசை முட்டுக்கட்டையிடுவதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

    இது ஆளுங்கட்சியின் ஒட்டு மொத்த எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.

    இதனால் தமிழ்நாட்டில் போட்டியிடும்படி தமிழிசையை பா.ஜனதா தலைமை கேட்டுக் கொண்டது. இதையேற்று புதுச்சேரியை கைகழுவி தமிழிசை, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாட்டில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    ×