search icon
என் மலர்tooltip icon
    • தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.
    • இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்த விபரம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது என்று கூறினார்.

    • இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலையில் அந்தனூர் பக்கிரிப்பாளையம் கிராமங்களுக்கு அருகே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட்பட 7 பேர் இறந்தனர்.

    இதை தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் கடந்த 23-ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.

    மேலும் இந்த பகுதியில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளால் 20-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி விட்டனர்.

    விபத்து நடந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான விவசாய பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது அந்த பண்ணை செயல்படவில்லை.

    சாலையின் இருபுறமும் அடர்ந்த தைலம் மரங்கள் கருவேல மரங்கள், காட்டு மரங்கள் அதிகமாக உள்ளன. அதனால் மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 20-க்கும் மேற்பட்டோர் பலியான பகுதியில் இறந்தவர்களின் ஆன்மா சுற்றி திரிவதாக அந்த பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.


    மாலை 6 மணிக்கு மேல் அந்த பகுதியில் திடீரென சுழல் காற்று வீசுகிறது. அலறல் சத்தம் கேட்கிறது. சாலையின் குறுக்கே வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் மர்ம உருவம் நடமாடுவது போல அமானுஷ்ய சக்திகள் நடமாட்டம் உள்ளது என அந்த பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

    இதனால் பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அவ்வழியாக செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    இந்த பேய் பீதி நாளுக்கு நாள் அங்குள்ள மக்களை முடங்க செய்து வருகிறது. இதனால் வீடுகளின் முன்பு வேப்பிலை கட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். விபத்தில் உயிர் சேதம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பம்பை மேளத்துடன் கோவிலில் இருந்து சாமி ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

    விபத்து நடந்த சாலையின் குறுக்கே மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தனர். மேலும் கோழி பலி கொடுத்து வழிபாடு செய்தனர்.

    • தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • உத்தரவை மீறி மீண்டும விளம்பரப்படுத்தப்பட்டதால் அவமதிப்பு வழக்கு.

    பதஞ்சலி தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி மீண்டும் விளம்பரப்படுத்தியதாக, பதஞ்சலி நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இது தொடர்பாக நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இருவரும் பதில் அளிக்கவில்லை. அதேவேளையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஹீமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவமதிப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்ட போதிலும், விளக்கம் அளிக்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளீர்கள். ஆனால் நீதிமன்றத்தில் பதில் அளிக்கவில்லை என நீதிபதிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

    மேலும், பதஞ்சலி நிர்வாக இயக்குர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கு நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதேபோல் பதஞ்சலின் துணை நிறுவனரான ராம்தேவ் அடுத்த விசாரணையின்போது ஆஜராக வேண்டும். நாங்கள் தேதி அறிவிப்வோம் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    • பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள்.
    • பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்திய மூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்படும். கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். தம்பியை எதிர்த்து அக்கா தமிழிசை போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

    பாரதிய ஜனதாவுடன் பா.ம.க. கூட்டணி அமைந்திருப்பதன் மூலம் மூழ்கும் கப்பலில் ஏறி அந்த கட்சி மூழ்கப் போகிறது. தமிழகம் புதுவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களது சுற்றுப்பயண தேதியை விரைவில் அறிவிப்போம்.

    பா.ஜனதா மின்னணு எந்திரத்தை நம்பியே தேர்தலில் நிற்கிறார்கள். நாங்கள் மக்களை நம்பியே நிற்கிறோம். தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் மீண்டும் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பதை வரவேற்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களை அவமதித்துள்ளது.

    தேர்தல் பத்திரம் தொடர்பாக பா.ஜனதா ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்? பிரதமர் மோடியின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. பா.ஜனதாவின் முகத்திரை தினம் தினம் கிழிந்து வருகிறது.

    பிரதமர் மோடி தமிழகத்துக்கு 6, 7 முறை படையெடுத்துள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், அசன் மவுலானா எம்.எல்.ஏ., கோபண்ணா, அனந்த சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
    • கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

    நாளை நண்பகல் 12 மணிக்கு காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • ராம் விலாஸ் பஸ்வான் கட்சியை பிரித்து பசுபதி பராஸ் தனியாக செயல்பட்டார்.
    • ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தற்போது பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா 17 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனால் மத்திய மந்திரியாக இருக்கும் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    2019 மக்களவை தேர்தலின்போது பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக் தளம் பா.ஜனதா கூட்டணியில் இருந்தது. அவர் மத்திய மந்திரியாக இருந்தார். அவர் மறைவுக்குப்பின், அவரது சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை பிரித்து தனியாக செயல்பட்டார். அவருக்கு பா.ஜனதா மத்திய மந்திரி பதவியும் வழங்கியது.

    ஆனால், தற்போதைய தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் பஸ்வானை (லோக் ஜனசக்தி) சேர்த்துக் கொண்டது. இதனால் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்து தனது மந்திரி மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில் "நேற்று தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. எங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.
    • விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.

    லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். முதுமை தோற்றம், இளமைத் தோற்றம் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.

    இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக, 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் நேற்று கேரளா சென்றார். கேரள விஜய் ரசிகர்கள் விமான நிலையத்தில் நீண்ட நேரமாக விஜயை வரவேற்க காத்துக் கொண்டு இருந்தனர்.

    நேற்று விஜய் ஏறிய காரில் மக்கள் அலை போல திரண்டு தங்கள் அன்பை பொழிந்தனர். விஜய் காரை முற்றுகையிட்டு அவர் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்பு நடக்கும் இடம் செல்லும் வரை ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.

    விஜய் அனைவரிடமும் சிரித்தபடியே ரசிகர்களின் அன்பை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் கை அசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் ஃபீல்ட் இண்டர்நேஷ்னல் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் காட்சியை படமாக்கவுள்ளனர். ஸ்டேடியத்தை சுற்றி சி.எஸ்.கே. கிரிக்கெட் அணியின் போஸ்டர்களையும் தோனி பட போஸ்டர்கலையும் ஒட்டி இருக்கின்றனர் படக்குழுவினர். ஆதலால், படத்தில் தோனி கேமியோ ரோல் செய்வதாக தகவல் பரவி வருகிறது.

    இருப்பினும், ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தி வரும் தோனி, GOAT படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
    • . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.

    தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.

    2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்

    மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

    தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தமிழக எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 90 கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுதவிர 13 ஆயிரம் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. வங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும், மேலும் சில முக்கிய பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் துப்பாக்கியை ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

    இவர்களை தவிர 10 ஆயிரம் பேருக்கு இது தொடர்பாக உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் பணம் கொண்டு செல்வதை தடுக்க இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றிய உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மிக முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    • வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.
    • தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ள தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தஞ்சை, தேனி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. சீனியர் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதுடன் புதுமுகங்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் என்று தெரியவந்துள்ளது.

    இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனும், தென்சென்னையில், தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

    இதே போல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் போட்டியிடுகிறார்கள்.

    இதே போல் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்கள் யார் என்று முடிவாகி விட்டது. வேட்பாளர் பட்டியலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர். பெண்களுக்கும் இதில் கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

    21 தொகுதிகளுக்கும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதால் இந்த வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை வெளியிடுகிறார். இதைத் தொடர்ந்து தி.மு.க. தேர்தல் அறிக்கையையும் நாளையே வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள் இடம்பெற செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. பெண்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளும் இதில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.

    ×