திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில் || saptarisiswarar Temple
Logo
சென்னை 02-12-2015 (புதன்கிழமை)
திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில்
திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில்

ஸ்தல வரலாறு.......

இசைக்கு மயங்கிய ஈசன், இலங்கேசுவரனுக்கு (ராவணனுக்கு) அருள்பாலித்த தலம் திருத்தலையூர். திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே அமைந்து உள்ள இக்கோவிலில் ராவணன் பிரதிஷ்டை செய்த ராவணேசுவர லிங்கம் தனி சன்னதியில் உள்ளது. இசை ஞானம் பெற வழிகாட்டும் இக்கோவில் வரலாற்றை இங்கே காண்போம்.

சப்தரிஷீஸ்வரர் கோவில்........

தமிழகம் எங்கும் பல்வேறு சிவாலயங்கள் அமைந்து உள்ளன. அந்த வகையில் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் அமைந்துள்ள திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோவில் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இங்குள்ள மூலவர் சப்தரிஷீஸ்வரர். தாயார் சிவகாம சுந்தரி.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவிலில் ராவணன் தனது தலையை ஒவ்வொன்றாக திருகி யாக குண்டத்தில் போட்டு ஈஸ்வரனை காண வழிபாடு நடத்திய தலம் என்பதால் திருகுதலையூர் என்ற பெயர் பெற்று பின்னர் திருத்தலையூர் என்று அழைக்கப்படலாயிற்று.

தாரகாசுரன் எனும் அரக்கன் கடும் தவம் புரிந்து பரம்பொருளிடம் பல அரிய வரங்களை பெற்றான். அதன் மூலம் தேவர்களையும், ரிஷிகளையும் கொடுமைப்படுத்தி அடிமைப்படுத்த தொடங்கினான். இந்நிலையில் ரிஷிகள், பரமனை நினைத்து யாக வேள்வியினை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று குடில் அமைத்து நடத்த தொடங்கினர்.

அத்ரி, பித்ரு, குலஸ்தி யர், வசிஷ்டர், கவுதமர், ஆங்கிரஸர், மகரிஷி ஆகிய ஏழு முனிவர்களின் குடில் பகுதி அமைந்த குளக்கரையில் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு குழந்தைகளை தோற்றுவித்தார்.

முருகப்பெருமான் அவதாரம்.........

கானகத்திற்குள் ரிஷிகள் சென்று இருந்த தருணத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் ரிஷி பத்தினிகள் திகைத்தனர். அருகில் வந்து அன்போடு பார்த்தனர். அப்போது அந்த ஆறு குழந்தைகளும் அமுது வேண்டி சிணுங்கி அழுதன. அதே நேரத்தில் கார்த்திகை பெண்கள் அங்கு தோன்றி அந்த குழந்தைகளை வாரி அணைத்து அமுது ஊட்டி ஆசுவாசப்படுத்தினர்.

அடர்ந்த வனத்தில் இருந்து திரும்பிய ரிஷிகள் நடந்த சம்பவங்களை கேட்டு அதிர்ந்தனர். தாரகாசுரனை அழித்திட அவதரித்த ஆறுமுக கடவுளை அள்ளி எடுக்க தவறிய ரிஷி பத்தினிகளை சபித்து துரத்தினர். நாட்கள் நகர்ந்தது. அவதார நோக்கத்தை ஆறுமுக பெருமானான முருகன், தாரகாசுரனை வதைத்து நிறைவேற்றினார்.

சப்தரிஷிகளும் முருகனை வணங்கி துதித்தபோது ரிஷி பத்தினிகளை சப்தரிஷிகள் துரத்தியடித்த சம்பவம் தெரிந்து முருகப்பெருமான் சினந்தார். ரிஷிகளை சபித்தார். சப்தரிஷிகளும் உள்ளம் வருந்தி சாபவிமோசனம் கேட்டனர்.

சப்தரிஷிகள் சிவபூஜை..........

பல்வேறு தலங்களில் தவம் இயற்றி சுயம்பு லிங்கத்தினை வழிபட்டு ஈஸ்வர ஜோதியில் கலந்திட முருகப்பெருமான் அருளினார். அதன்படி சப்தரிஷிகளும் பல்வேறு சிவத்தலங்களில் தவமியற்ற தொடங்கினர். காலங்கள் கடந்தது. சிவதரிசன யாத்திரையில் சப்த ரிஷிகளும் அடந்த வனப்பகுதியில் தென்பட்ட சுயம்புலிங்க மூர்த்தியை தரிசிக்க தொடங்கினர்.

சுயம்பு லிங்கத்தை சுற்றி அமர்ந்து மந்திரங்களும், சுலோகங்களும் கூறி அர்ச்சித்து வழிபட்டனர். திரிசடை நாயகன் தங்களை ஆட்கொள்ள உள்ளம் கசிந்து உருகி வழிபாடு நடத்தினர். அப்போது வான்வழியே புஷ்பக விமானத்தில் ராவணன் சப்தரிஷிகள் சுயம்பு லிங்கத்தை வழிபட்டு கொண்டு இருந்த கானகத்தினை கடந்து சென்று கொண்டு இருந்தான். சிறந்த சிவபக்தனான ராவணன், பரமேஸ்வரனின் அருட்கடாட்சம் வனப்பகுதியில் இருப்பதை உணர்ந்தான்.

தலையை திருகி...........

உடனடியாக புஷ்பக விமானத்தை வனப்பகுதிக்குள் இறக்கி சிவநாம துதி சப்தம் கேட்ட திசை நோக்கி நடக்க தொடங்கினான். பத்து தலைகளுடன் ராவணன் அங்கு வருவதை பார்த்த சப்தரிஷிகள் ராவணனுக்கு அஞ்சி வனப்பகுதிக்குள் ஒளிந்து கொண்டனர்.

மனித அரவமற்ற வனப்பகுதிக்குள் சுயம்பு லிங்கம் பூஜிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த ராவணன் அந்த இடத்திலேயே சிவ வழிபாடு நடத்த ஆவல் கொண்டான். குறிப்பாக ராவணன், பிறர் வழிபட்ட சிவலிங்கத்தை வழிபடாதவன்.

அதனால் அந்த இடத்தில் தானே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது வழிபாட்டை தொடங்கினான். அங்கிருந்த அதிர்வலைகள் ராவணனை தன்னிலை மறக்க செய்தது. வனம் முழுவதும் சிவபெருமானின் அருள் நிரம்பி இருப்பதை அறிந்த ராவணன், அழிவில்லா வரம் வேண்டி பெரும் யாகம் நடத்த தொடங்கினான்.

வரம் அளிக்க ஈசன் வராததால் மிகப்பெரிய யாக குண்டம் ஒன்றை ராவணன் அமைத்து யாக குண்டத்தில் தனது பத்து தலைகளையும் ஒவ்வொன்றாக திருகி யாக குண்டத்தில் போட தொடங்கினான்.

ராவணனுக்கு வரம்...........

தனது பக்தனின் அளவற்ற பக்தியும், அன்பும் கயிலை நாதனை ராவணன் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது. காட்சி தந்த பரம்பொருளை வணங்கி அழியாவரம் கேட்டான் ராவணன். அழிவில்லா வரம் தர ஆறுமுகனின் தந்தை மறுத்தார். மூன்று யுகம் வாழ்ந்திட அருளுமாறு ஈஸ்வரனிடம் ராவணன் முயன்றபோது ஈசனுக்கு பின்னால் தோன்றிய திருமால் முக்கால் விரலை காட்டினார்.

தடுமாறிய ராவணன் முக்கால் யுகம் வாழ வரமாக கேட்டுப்பெற்றான் என்பது வரலாறு. கோவில் உள் பிரகாரங்களில் உள்ள விநாயகர், முருகன், விஷ்ணு, பிரம்மா, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கவும், எதிரிகளின் தொல்லை களில் இருந்து விடுபடவும் இங்குள்ள சப்தரிஷீஸ்வரரின் பாதம் பணிந்தால் உடன் இருந்து காத்து வருகிறார்.

மனைவியை தவளையாக மாற்றிய ராவணன்.........

இந்த கோவிலின் உள்ளே ராவணன் வழிபட்ட ராவணேஸ்வர லிங்கத்தையும், ராவணனால் வடிவமைக்கப்பட்ட யாக குண்டத்தை கோவிலின் முன் பகுதியிலும் காணலாம். கோவிலின் முன்புறம் குளமும், குளத்திற்குள் யாக குண்டமும் அமைக்கப்பட்டு இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த குளக்கரையில் தனது தவத்திற்கு யாரும் இடையூறு செய்து விடக்கூடாது என்பதற்காக தனது மனைவி மண்டோதரியை தவளையாக மாற்றி காவல் இருக்க செய்ததாகவும் புராண தகவல்கள் தெரிவிக்கின்றன. தண்ணீர் இருக்கும் காலங்களில் கூட இந்த குளத்தில் தவளைகள் வசிப்பது இல்லை என்ற தகவலும்நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அமைவிடம்.........

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து முசிறிக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் சென்று பின்னர் அங்கிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் திருத்தலையூர் செல்லலாம். அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருந்தும் திருத்தலையூருக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. கு.ஹேமலதா, நமணசமுத்திரம்.
Newbharath.gif

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif