சிங்கப்பூரில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை கள்ளநோட்டாக மாற்றிய ஹவாலா கும்பல் || parents send money fake currency gang
Logo
சென்னை 09-02-2016 (செவ்வாய்க்கிழமை)
சிங்கப்பூரில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை கள்ளநோட்டாக மாற்றிய ஹவாலா கும்பல்
சிங்கப்பூரில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை கள்ளநோட்டாக மாற்றிய ஹவாலா கும்பல்
செந்துறை, ஏப். 11-

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 54). இவரது மனைவி ஆண்டாள் (45). இவர்களது மகன் ரவி (28). இவர் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து தனது பெற்றோருக்கு பணம் அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில் இளங்கோவன் வீட்டிற்கு வந்த மருதூர் கிராமத்தை சேர்ந்த மாயவேல் (63) என்பவர் வெளிநாட்டில் உள்ள ரவி பணம் அனுப்பியதாக கூறி ரூ.80 ஆயிரத்தை, முழுவதும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக ரவியின் பெற்றோரிடம் கடந்த 8-ந்தேதி கொடுத்தார். அதனை வாங்கிய இளங்கோவன் மறுநாள் தனது மனைவி ஆண்டாளிடம் கொடுத்து பணத்தை பொன் பரப்பியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்யுமாறு கூறினார். அதன்படி பணத்தை கொண்டு சென்ற ஆண்டாள் வங்கியில் செலுத்தினார்.

வங்கி காசாளர் மதன்ராஜ் அந்த பணத்தை வாங்கி சரிபார்த்தபோது ரூ.80 ஆயிரமும் கள்ளநோட்டுக்களாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் செந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கள்ள ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் வங்கி மூலம் பணம் அனுப்பினால் வரி செலுத்தவேண்டும் என்பதாலும், பணம் வந்து சேர காலதாமதம் ஆகும் என்பதாலும் பலர் ஹவாலா கும்பல் மூலமாக பண பரிமாற்றத்தை செய்து வருகிறார்கள். இதேபோல் ரவியும் வங்கி மூலமாக பெற்றோருக்கு பணத்தை அனுப்பாமல் தன்னுடன் வேலை பார்க்கும் மாயவேல் என்பவரது மகன் ஆசைத்தம்பி என்பவரிடம் கொடுத்து அதனை தனது பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்பிறகு அந்த பணத்தை மாயவேலிடம் மர்ம நபர் ஒருவர் ரவி அனுப்பியதாக கொடுத்து விட்டு சென்று விட்டார். இது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பணத்தை வங்கிக்கு கொண்டு சென்ற ஆண்டாள், இளங்கோவன் மற்றும் மாயவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் மாயவேலிடம் விசாரணை நடத்திய போது தன்னிடம் பணத்தை கொடுத்தவர் யார் என்று தெரியாது எனவும், அவரது தொலைபேசி எண் மட்டும் இருப்பதாக கூறியுள்ளார். அந்த எண்ணைக்கொண்டு போலீசார் விசாரித்த போது இந்த பண பரிமாற்ற விசயத்தில் ஹவாலா கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு ஹவாலா கும்பல் ஒரு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவரும் நிலை உருவாகி இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். இதற்கிடையே ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் இந்த பண பரிமாற்ற விசயத்தில் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அவர் பிடிபட்டால் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விரைவில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - அரியலூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif