6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது || cauvery river release in gazette
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது
6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானது
புதுடெல்லி, பிப். 20-

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம்- கர்நாடகம் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கர்நாடகம் தனது அணை களில் தண்ணீரை தேக்கி வைத்தது போக உபரி தண்ணீரை மட்டுமே தமிழகத்துக்கு திறந்து விட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 1991-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் விசாரணை நடத்தி 16 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது.

அதில் கர்நாடகத்தில் காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் பாயும் 736 டி.எம்.சி. தண்ணீரில் கர்நாடகத்துக்கு 272 டி.எம்.சி., தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 5 டி.எம்.சி. மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டி.எம்.சி. தண்ணீர்  பகிர்ந்தளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு தனது அரசிதழில் (கெஜட்) வெளியிட்டால்தான் அது அமுலுக்கு வரும். ஆனால் மத்திய அரசு அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுத்து வந்தது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இடைக்கால ஏற்பாடாக பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் காவிரி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த அமைப்புகளின் உத்தரவையும் கர்நாடகம் ஏற்க மறுத்து விட்டது. கர்நாடகத்தை தட்டிக் கேட்க மத்திய அரசும் தயங்கியது.

இந்த நிலையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனையின் பேரில் கடந்த ஆண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

அதில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுத்து தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே உடனடியாக நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தாமதம்   செய்வதற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது.

ஆனால் அதன்பிறகும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. கர்நாடகமும், முட்டுக்கட்டை போடும் முயற்சியில்  ஈடுபட்டது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடுவர் மன்ற தீர்ப்பை பிப்ரவரி 20-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கு கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் அனைத்து கட்சி எம்.பி.க்கள், மத்திய மந்திரிகள் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிடும் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மன்மோகன்சிங் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட ஒப்புதல் வழங்கினார்.

நேற்று பகல் முழுவதும் இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு  நடுவர் மன்ற தீர்ப்பை கெஜட்டில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து  கெஜட்டில் தீர்ப்பு வெளியானது.

நேற்று காலையிலேயே இதற்கான அறிவிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் எஸ்.கே.சர்க்கார் ஒப்புதல் அளித்துவிட்டார். பிரதமரின் அனுமதியைத் தொடர்ந்து சர்க்கார் கையெழுத்திட்டார். அதன்பிறகு தீர்ப்பை மாலையில் கெஜட்டில் வெளியிட்டது.

இனி இறுதித்தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையிலேயே 4 மாநிலங்களும் காவிரி நதிநீரை பங்கீட்டுக் கொள்ளவேண்டும். அவரவருக்கு உரிய நீரை கர்நாடகம் கொடுத்தே தீரவேண்டும். எந்த காரணமும் கூறி தண்ணீர் தர மறுக்க முடியாது.

அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நேற்றில் இருந்து 90 நாட்களுக்குள் இந்த அறிவிக்கை அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீர் வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசிதழில் வெளியாகும் அறிவிக்கையை மத்திய அரசு பிப்ரவரி 19-ந் தேதி (நேற்று) பிறப்பித்துள்ளது. இதை 20-ந்தேதி (இன்று) பொதுமக்கள் பார்வையிட முடியும் என்றார்.

இனிமேல் இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட முடியாது. மத்திய அரசின் நதிநீர் பங்கீட்டு வாரியம் மற்றும் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவைதான் கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் மன்ற தீர்ப்பு கெஜட்டில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நடைமுறையில் உள்ள பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு ஆகியவை ரத்தாகி விடும்.
காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் மைசூர், மாண்டியா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் போலீசார் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

amarprakash160600.gif
amarprakash160600.gif