நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் || muthumariamman temple narthamalai
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
  • 20 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
  • ராணுவ வீரர் ஹனுமந்தப்பா உடலுக்கு ராகுல்காந்தி, மனோகர் பாரிக்கர், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்

ஸ்தல வரலாறு........
 
புதுக்கோட்டை திருச்சி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நார்த்தாமலைக் கோவில் முகப்பு. இங்கிருந்து 2 கிலோ மீட்டர் உள்ளே சென்றால் நார்த்தாமலையை அடையலாம். முத்துமாரியம்மன் கோவில் கொண்டிருக்கும் இந்த நார்த்தாமலை, மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் இடமாகவும் திகழ்கிறது.
 
இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, உவச்சமலை, ஆளுருட்டி மலை, மணமலை, பொம்மாடிமலை, பொன்மலை, செட்டிமலை, பின்னமலை ஆகிய சிறுமலைகள் காணப்படுகின்றன. ராமா நார்த்தாமலை யண காலத்தில் சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிச் சென்றபோது விழுந்த மலை துண்டுகள் தான் இங்கு குன்றுகளாக உள்ளன என்று கூறப்படுகிறது.
 
இந்த மலை குன்றுகளில் அரியவகை மூலிகைகள் காணப்படுகின்றன. மேலும் நார்த்தாமலை யில் தளவர் சுனை, ததும்பு சுனை, ஏழு சுனை, இரட்டை சுனை, மேலச்சுனை, அருகன் சுனை, புலி குடிக்கும் சுனை, நவச்சுனை, மஞ்சள் சுனை உள்பட பல்வேறு சுனைகள் காணப்படுகின்றன.
 
கி.பி. 910 ஆகிய நூற்றாண்டுகளில் வணிகர்கள் பலர் ஒரு குழுவாக இருந்து கோவில்கள், குளங்கள் மற்றும் ஊர் நிர்வாகம் ஆகியவற்றை கவனித்து வந்துள்ளனர். இந்த குழுவிற்கு நகரம் என்று பெயர். எனவே இந்த ஊர் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி நார்த்தாமலை என்று அழைக்கப்படுகிறது.
 
நிலத்தில் கிடைத்த அம்மன்.......... நார்த்தாமலை ஊரின் வடக்கில் 6 கிலோமீட்டர் தொலைவில் கோவிலூரி என்ற இடத்தில் முருகன் கோவில் ஒன்று இருந்தது. நார்த்தாமலையில் வசித்து வந்த சிவாச்சாரியார் ஒருவர் நாள் தோறும் பூஜை செய்து வந்தார். அப்போது அவரது பூஜைக்கு இடையூறு ஏற்பட்டதால், அவர் முருகன் கோவிலில் இருந்து சக்கரத்தை (தெய்வீக சிறப்பு வாய்ந்த எந்திரம்) கொண்டு வந்து வைத்து வழிபாடு செய்தார்.
 
இந்த நிலையில் நார்த்தாமலை அருகே உள்ள கீழக்குறிச்சி என்ற ஊரில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்த போது அம்மன் சிலை கிடைத்தது. அந்த விவசாயியின் கனவில் தோன்றிய அம்மன் நார்த்தாமலையில் தன்னை சேர்த்துவிடும்படி கூறியதை தொடர்ந்து விவசாயியும் அப்படியே செய்தார். நார்த்தா மலையில் இருந்த சிவாச்சாரியார்   கனவிலும் தோன்றிய அம்மன் தன்னை அங்கே பிரதிஷ்டை செய்து வழிபடும்படி கூறினார்.
 
கோலில் அமைப்பு........
 
இதையடுத்து முத்துமாரியம்மன் என்று பெயரிட்டு, ஒரு கீற்று கொட்டகையில் அம்மனை எழுந்தருளச் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் முருகன் எந்திரத்தையும், அம்மன் பீடத்தில் வைத்து வழிபாடு செய்து வந்தார். இதன் காரணமாக அம்மனுக்கு முருக வழிபாட்டு முறைகள் இணைந்து நடைபெற்று வருவதை இன்றும் காணலாம்.
 
காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வழிபாடுகள் இந்த அம்மனுக்கு உண்டு. முத்துமாரியம்மன் கோவில் கிழக்கு நோக்கி கோவில் அமைப்பு அமைந்துள்ளது. இரண்டு சுற்றுகளை கொண்ட கோவிலில் கோபுரத்திற்குள் நுழைந்ததும் முதல் சுற்று தொடங்குகிறது. இதில் புதியதாக அமைக்கப்பட்டமண்டபம் காணப்படுகிறது.
 
இரண்டாவது சுற்றுப்பகுதியில் நுழைவு வாசல் வழியாக செல்வோர் முதலில் காண்பது கொடி மரம். இதனை அடுத்து பலிபீடம் காணப்படுகிறது. கொடி மரம் அருகே உள்ள மணி மண்டபத்தின் விதானத்தில் சரவணபவ என்ற எழுத்தும், முருகவழிபாட்டை குறிக்கும் சக்கரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
 
மணி மண்டபத்தின் இடதுபுறத்தில் விநாயகர், கருவறை மகாமண்டப நுழைவு வாசலில் மேற்புறம் கஜலட்சுமி, இருபுறமும் துவாரபாலகியரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இடது காலை மடக்கி வலது காலை தொங் கவிட்டு அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார். அக்னி மகுடம் தரித்து, மேல் இருகரங்களில் உடுக்கை, வஜ்ராயுதம் தாங்கியும், வலது கீழ் கரத்தில் சிறு கத்தி, இடது கரத்தில் கபாலம் தாங்கியும் அருள் பாலிக்கிறார். வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் மகர குண்டலமும் அணிந்திருப்பது சிறப்பு.
 
மலையம்மாள்.......
 
ஒரு முறை திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் ஜமீன்   குடும்பத்தார் புனித பயணம் புறப்பட்டனர். அப்போது அனைவரும் இந்த தலத்திற்கு வந்தனர். வந்த இடத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்ற சிறுமிக்கு அம்மை நோய் தாக்கியது. இதையடுத்து சிறுமியை கோவிலில் பாதுகாப்பாக விட்டு விட்டு, அனைவரும் புனித பயணம் புறப்பட்டு சென்று விட்டனர்.
 
புனித பயணம் முடிந்து திரும்பும் வேளையில் மீண்டும் அவர்கள் இந்த கோவிலுக்கு வந்தபோது அம்மை நோய் தீர்ந்த சிறுமியின் முகம் ஒளி பெற்றிருப்பதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் மலையம்மாளை அனைவரும் தங்களுடன் அழைத்துச் செல்ல கூப்பிட்டபோது, முத்து மாரியம்மன் தான் இனி எனது பெற்றோர். நான் இங்கிருந்து எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டாள்.
 
பின்னர் கோவிலின் அருகிலேயே ஒரு குடில் அமைத்து தங்கினார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபூதி கொடுத்து தீராத நோய்களை தீர்த்து வைத்தார். இதன் மூலமாக கிடைத்த காணிக்கைகளை கொண்டு பல திருப்பணிகளை செய்தார். கோபுரத்திற்கு முன் உள்ள 16 கால் மண்டபமும், கோவில் திருத்தேரும் மலையம்மாள் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
16 கால் மண்டப தூணில் வணங்கிய கோலத்தில் மலையம்மாள் சிற்பம் காணப்படுகிறது. சுயநலம் கருதாது தன்னையே அம்மனின் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொண்ட மலையம்மாளின் சமாதி கோவிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு சென்று வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
 
மத நல்லிணக்கம்.....
 
மேல மலையின் முக்கியமான நினைவுச்சின்னமாக விஜயாலயா சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கால கட்டிட அமைப்பை கொண்டது. கோவில் கருவறை மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. அதனை சுற்றி துர்க்கை, சப்தமத்ரிகாஸ், கார்த்திகேயா, கணேசா, சண்டேசா, சந்திரா, ஜேஸ்டா ஆகிய ஏழு தலங்கள் உள்ளன. வட்ட வடிவிலான கர்ப்ப கிரகமும், சதுர வடிவில் அர்த்தமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன.
 
நார்த்தாமலையில் வசித்தவர் மஸ்தான். சித்த வைத்தியரான இவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவம் செய்து வந்தார். இவர் தன் உயிர் பிரியும் நேரத்தையும், இறந்தபின் அடக்கம் செய்யும் நேரத்தையும் குறித்து வைத்திருந்தார். அதன்படியே அனைத்தும் நடைபெற்றது. அவரது தர்காவில் பல தரப்பு மக்களும் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு சந்தன கூடு விழா, நார்த்தாமலை தேர்திருவிழாவின் போது நடைபெறும். இது மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.    
 
பூச்சொரிதல்..........
 
முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். புதுக்கோட்டை நகரில் இருந்தும், நார்த்தாமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் பல வகையான மலர்களை (தென்னம்பாலை உள்பட), மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான ஊர்திகள் மூலமும், தட்டுகள், கூடைகளில் வைத்தும் பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.
 
அவ்வாறு கொண்டுவரப்படும் நறுமண மலர்கள் அம்மன் சன்னிதிக்கு முன்பு உள்ள பெரிய மர தடுப்பில் கொட்டி வைக்கப்படும். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து அம்மனின் முகம் மட்டும் தெரியும்படியும் மற்ற அங்கங்கள் யாவும் மலர்களால் மூடப்பட்டும் இருக்கும். இக்காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் அற்புத காட்சியாக இருக்கும். மறுநாள் காலையில் இந்த மலர்கள் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக வழங்கப்படும்.  
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif